Published : 16 Mar 2019 11:02 AM
Last Updated : 16 Mar 2019 11:02 AM

கற்பக தரு 44: பனம் பழ ஸ்குவாஷ்

பனம் பழம் மனித வாழ்வில் மிக முக்கியமான உணவாக இருந்திருக்கிறது. ஆனால், மேற்கத்திய அறிஞர்கள் பனம்பழங்கள் குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆதலால் மனித இனத்தின் வளர்ச்சியில் மற்ற தாவரங்களையே அவர்கள் மையப்படுத்தினார்கள். அப்படித்தான் உருளைக்கிழங்கு, கோதுமை, பேரீச்சை, அரிசி போன்றவை முக்கிய உணவுகளாக முன்னிறுத்தப்படுகின்றன.

குமரி மாவட்டத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்புகூட பனம் பழம் காலை உணவாகப் பெரும்பாலான குடும்பங்களில் இருந்திருப்பதை நேரடியாகக் கண்டிருக்கிறேன். நானே சிறு வயதில் பனம் பழங்களை எடுத்துக்கொண்டு கொடுக்க, என் அத்தை அவற்றைச் சுட்டோ அவித்தோ கொடுத்திருக்கிறார். பனம் பழம் சுவையானது; ஈர்க்கும் வாசனை கொண்டது. இவ்விதமான சத்தான ஒரு உணவு நம் வழக்கத்தில் இருந்து அற்றுப்போனது, துரதிருஷ்டவசமானது.

இன்றைய இளைய தலைமுறைகளுக்குப் பனம் பழம் என்றால் என்ன எனத் தெரியாது. ஆனால், நுங்கு குறித்து அறிந்திருப்பார்கள். நுங்கைப் பனைப் பொருள் என வணிக நோக்கில் நாம் முன்வைக்கையில், அது பனை மரங்களின் வீழ்ச்சிக்கு வித்திடும் ஒன்றாக அமைந்துவிடுகிறது. ஆகவே, பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்ற வேகத்துடன் நின்றிருக்கும் இளைய தலைமுறையினருக்கு இரட்டிப்பான நன்மைகள் அருளும் ஒரு அரிய வாய்ப்பு பனம் பழச் சாறு ஆக்குவதன் மூலமாகக் கிடைக்கிறது.

பனம் பழச் சாறு ஆக்குகையில் பனம் பழத்தின் சுவையான சாறும் கிடைக்கிறது. அதே வேளையில், பனை விதைகளும் பாதிப்படைவதில்லை. இவ்விதம் கிடைக்கும் விதைகளைக் கிழங்குக்காகவோ பனை நடுகைக்காகவோ பயன்படுத்த இயலும். பனங்கிழங்குக்காக இடப்பட்ட கிழங்கை அறுவடை செய்யும்போது இலவச இணைப்பாகக் கொட்டைக்குள்ளிருக்கும் மென்மையான தவண் (சீம்பு) கூடவே கிடைக்கும். பழம், கொட்டை, தவண் ஆகிய மூன்று பொருட்களும், நுங்கைப் பிரதானப்படுத்துகையில் இல்லாமல் போய்விடும்.

பனம் பழச் சாறு, சீனிப்பாகு இணைத்துச் செய்யப்படும் ஸ்குவாஷ் குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் கெடாமல் இருக்கும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தப் பானம் கோடைக்காலத்தின் சிறந்த மென்பானம்.

இந்தப் பானத்தைத் தயாரிக்கும் பயிற்சி வகுப்பைப் பனை மரங்களைக் காக்கும் ‘பனைநாடு’ என்ற அமைப்பும், மார்த்தாண்டத்தைச் சார்ந்த ‘பால்மா’ மக்கள் அமைப்பும் இணைந்து நடத்துகிறார்கள். பயிற்சி குறித்து மேலதிகத் தகவல்களுக்கு 94886 75664 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

தொடர்புக்கு: malargodson@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x