Last Updated : 23 Mar, 2019 10:08 AM

 

Published : 23 Mar 2019 10:08 AM
Last Updated : 23 Mar 2019 10:08 AM

இந்தியாவின் முதல் விவசாயப் பள்ளி

விவசாயம் கல்லூரி நிலையில் தனிப்படிப்பாக இருக்கிறது. ஆனால், பள்ளிக் கல்வி நிலையில் பல தொழில் கல்விப் படிப்புகள் இருந்தாலும், விவசாயத்துக்கு அதில் இடமில்லை. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் பாஷிம் கான் என்னும் கிராமத்தில் விவசாயத்துக்காகவே ‘. ‘த குட் ஹார்வெஸ்ட் ஸ்கூல்’ (நல் அறுவடைப் பள்ளி) என்னும் ஒரு தொடக்கப்பள்ளி செயல்பட்டுவருகிறது. லக்னோவைச் சேர்ந்த தம்பதியர் அஷிதா, அனீஷ் நாத் இருவரும்தாம் இதன் நிறுவனர்கள்.

டெல்லியில் பார்த்துவந்த பெரு நிறுவன வேலையை உதறிவிட்டு உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என உத்தரப்பிரதேசத்தில் புர்வா நகருக்கு அருகில் உள்ள இந்தக் கிராமத்தில் விவசாய நிலத்தை வாங்கியுள்ளனர். இந்தக் கிராமத்தில் ஆண் குழந்தைகளை மட்டும் பள்ளிக்கு அனுப்புவது வழக்கம். பெண் குழந்தைகள் தாய், தந்தையருக்கு உதவியாக வீட்டு வேலையும் காட்டு வேலையும் பார்க்க வேண்டும்.

இந்தப் பின்னணியில்தான் அந்தப் பெண் குழந்தைகளுக்காக இந்தப் பள்ளியைத் தொடங்கும் எண்ணம் தம்பதிக்கு வந்துள்ளது. விவசாய வேலையைச் செல்லித் தரும் பள்ளி என்பதால் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் பெற்றோர்களும் சம்மதித்தனர். இந்தப் பள்ளி, மரபான பள்ளிக்கூடங்களிலிருந்து வேறுபட்டது; தனித்துவமானது. இந்தப் பள்ளிக்குத் தோட்டம் உண்டு. அங்கு மாணவர்கள் காய்கறிகளைப் பயிரிடுகிறார்கள்.

தொழுவம் உண்டு. கால்நடைகளைப் பேணுகிறார்கள். கோழி வளர்க்கிறார்கள். இது மட்டுமல்லாமல் இந்தி, ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. 2016-ல் மாணவர்கள் 10 பேர், அஷிதா, அனீஷ் நாத் ஆகிய ஆசிரியர்கள் இருவர் எனத் தொடங்கப்பட்ட பள்ளி இன்று மாணவர்கள் 45 பேர், ஆசிரியர்கள் நால்வர் என விரிவடைந்துள்ளது.

படைப்புழு பாதிப்பு குறித்த கருத்தரங்கு

தாய்லாந்துத் தலைநகர் பாங்காக்கில் படைப்புழுக்கள் தாக்கம் குறித்த கருத்தரங்கு ஐ.நா.வின் உணவு, விவசாய அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. இதில் படைப்புழுக்கள் தாக்குதலுக்குள்ளான ஆசிய நாடுகளின் பிரநிதிகள் கலந்துகொண்டனர். உலக அளவிலான பாதிப்புகள் குறித்தும் அதில் விவாதிக்கப்பட்டது. ஐ.நா.வின் உணவு, விவசாய அமைப்பின் இணை இயக்குநர் குந்தவி கதிரேசன் “படைப்புழுக்கள் தாக்கம் உணவுப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக மாறும்” எனத் தெரிவித்தார்.

மேலும், சர்வதேச எல்லைகளைத் தாண்டி பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செல்லும் இந்தப் படைப்புழுக்கள் தாக்குதலைக் கட்டுப்படுத்தக் கூட்டு ஒத்துழைப்பு அவசியம் என இந்தக் கருத்தரங்கில் வலிறுத்தப்பட்டது. ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைவிட உயிரியல் பூச்சிக்கொல்லிகளே இந்தப் படைப்புழுக்களை விரட்ட சிறந்த முறை என்றும் இந்தக் கருத்தரங்கில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

மீன் வளர்ப்புப் பயிற்சி

கடந்த மாதம் பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் நடைபெற்ற மீன் வளர்ப்பு சார்ந்த தொழில்முனைவோருக்கான இலவசப் பயிற்சி முகாம் நிறைவுபெற்றது. மத்திய மீன்வள மேம்பாட்டு வாரிய நிதியுதவியுடன் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் 28 பேர் கலந்துகொண்டனர்.

பொன்னேரி மீன்வளக் கல்லூரிப் பேராசிரியர்கள் மீன் வளர்ப்பு சார்ந்த தொழில்கள் குறித்து விரிவுரையாற்றினர். மேலும் நேரடியாக மீன் பண்ணைக்கு அழைத்துச் சென்றும் அத்தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது. பேராசிரியர் லாயிட்ஸ் கிறிஸ்பின் இந்தப் பயிற்சியை ஒருங்கிணைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x