Published : 16 Feb 2019 12:18 PM
Last Updated : 16 Feb 2019 12:18 PM
நல்ல மழை பெய்து ஒய்ந்திருந்த ஒரு பிப்ரவரி காலை. ஆண்கள் பெண்கள், குழந்தைகள் அடங்கிய சுமார் நானூறு பேர் மதுரையை அடுத்திருந்த சமண மலையை நோக்கி நடந்தனர். கல்வெட்டுகள், கற்படுக்கைகள் உட்பட்ட தொல்லெச்சங்கள் கொண்ட இந்தப் பாறைக்குன்று மதுரையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
சில ஆண்டுகளுக்குமுன், இந்நகரில் ஆனைமலைக் குன்றில் பெரிய அளவில் சிற்பங்கள் உருவாக்கப்பட்டு அந்தப் பகுதி சுற்றுலா மையமாக்கப்படும் என்ற திட்டத்துக்கு மக்களிடையே எழுந்த எதிர்ப்பே ‘பசுமை நடை’ என்ற இந்த இயக்கத்தின் முதல் புள்ளி. குடைவரைக் கோயில்கள் போன்ற தொல்லெச்சங்கள் உள்ள இடம் ஆனைமலை. அப்போதிருந்து மாதாமாதம் ஒரு தொல்லெச்சப் பகுதிக்குச் செல்வதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறது இந்த இயக்கம். சில நாட்களுக்குமுன் நான் பங்கெடுத்துக்கொண்டது நூறாவது பசுமை நடை.
ஆயிரம் ஆண்டு குகைகள்
இந்த இயக்கம் தொடங்கப்பட்ட சமணர்மலை அடிவாரம், வயல்கள் சூழ்ந்த எழிலார்ந்த இடம். பரந்த ஆல மரங்கள். அருகிலேயே சித்தன்னவாசல் சுவரோவியத்தை நினைவூட்டும் ஒரு குளம், அல்லி, தாமரை மலர்களுக்கிடையே தாமரைக்கோழிகளைக் காண முடிந்தது. குளத்தை ஒட்டி ஒரு பாறைக்குன்று. குளத்திலிருந்து சிறிது தூரத்தில் குன்றின் மேல் இயற்கைக் குகை ஒன்றுள்ளது. இதன் முகப்பில் செதுக்கப்பட்டிருக்கும் ஏறக்குறைய இரண்டு மீட்டர் சதுர அளவுள்ள மகாவீரரின் புடைப்புச் சிற்பமும் அதன் கீழுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
இந்தியத் தொல்லியல் துறையால் மரபுச்சின்னமாகப் பாதுகாக்கப்படும் இப்பாறைக்குடிலின்முன் பரந்த வெளி ஒன்றுள்ளது. இங்கும் அருகிலிருந்த பாறைகளிலும் மக்கள் அமர்ந்திருக்க தமிழகத்தில் சமண வரலாறு, தொல்லெச்சங்கள் பற்றி தொல்லியலாளர் சாந்தலிங்கம் அன்று காலை அறிமுக உரையாற்றினார்.
சமண, பௌத்த, ஆசீவகத் துறவிகள் வாழ்ந்திருந்ததற்கான தொல்லியல் தடயங்களைக் கொண்ட இயற்கைக் குகைகள் தமிழகத்தில் பல உள்ளன. இத்தலங்கள் மாங்குடி மருதனார் போன்ற புலவர்களால் ‘மதுரைக்காஞ்சி’ நூலில் வர்ணிக்கப்பட்டுள்ளன.
சான்ற கொள்கை சாயா யாக்கை
யான்றடங்ஞறிஞர் செறிந்தனர் நோன்மர்
இங்கு கிடைத்துள்ள கி.மு. 3-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 11-ம் நூற்றாண்டுவரையிலான பிராமி, வட்டெழுத்துக் கல்வெட்டுகள்மூலம் இவை ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் துறவிகள் வாழும் புகலிடங்களாகவும் கல்விச்சாலைகளாகவும் பயன்பட்டன என்றறிகிறோம். இது போன்ற பல பாறைக்குடில்கள் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றன.
இரு உயிரினங்கள்
அறுபதுகளில் வேலூரில் நான் பணியாற்றியபோது ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களைச் சந்தித்த பிறகு, சமண வரலாற்றில் ஈடுபாடு ஏற்பட்டது. அவரது நூல் ‘பொறிவாயில் ஐந்தவித்தான் யார்?’ என்னுள் ஒரு புதிய சாளரத்தைத் திறந்து வைத்தது. வட ஆர்க்காட்டு மலைப்பகுதிகளில் சுற்றித் துறவிகள் வாழ்ந்த பல குகைகளைப் பார்க்க முற்பட்டேன். சில பாறைக்குடில்களில் அன்றும் அங்கு தங்கியிருந்த துறவிகளைச் சந்தித்திருக்கிறேன். இவர்களில் ஒருவர்தான் பின்னர் வள்ளிமலை மெளன சாமியார் என்ற பெயரில் பிரசித்தி பெற்று, சென்னை திருமுல்லைவாயிலில் வாழ்ந்திருந்தார்.
இந்தக் குகைகளுக்கு அருகே ஒரு சுனையோ நீரோடையோ இருக்கும். குகை வாயின் மேல் விளிம்பின் 10 செ.மீ. ஆழமான உழவுக்கால் வெட்டப்பட்டிருக்கும். மழை கொட்டும்போது பாறையில் வழியும் நீர் குகையினுள் செல்லாமல் ஓரத்தில் வழிந்தோட இந்த அமைப்பு.
இப்பகுதியில் இரு உயிரினங்களை நான் தவறாமல் பார்த்ததுண்டு. ஒன்று கறுப்பு, மஞ்சள் வண்ணமுடைய பாறைப்பல்லி. அடுத்தது ஓணான் கொத்திக் கழுகு (Short toed eagle). மயிலை சீனி. வேங்கடசாமி கழுகுக்கும் சமணத்துக்கும் தொன்மத் தொடர்பு உள்ளது என்று கழுகுமலையைச் சுட்டிக்காட்டுகிறார். அதேபோல இந்தக் குகைகளுக்கு அருகில் எலுமிச்சைப் புல் (lemon grass) செழித்து வளர்ந்திருக்கும். இதைப் பறித்து வந்து வீட்டில் வளர்த்திருக்கிறேன். தேனீரில் இதைக் கசக்கிப் போட்டால் நல்ல மணம் வரும்.
புறக்கணிக்கப்பட்ட வரலாறு
தமிழகத்துப் பாறைக்குடில்களில் சமணத்துறவிகள் மட்டுமல்ல, புத்த பிக்குகளும் ஆசீவகத் துறவிகளும் உறைந்தனர் என்று தமிழறிஞர் க..நெடுஞ்செழியன் தனது ‘ஆசீவகமும் ஐயனார் வரலாறும்’ என்ற நூலில் விளக்குகியுள்ளார். கண்ணகி மதுரையை எரித்து மறைந்தபின், அவளுடைய பெற்றோர், ஆசீவக சமயத்தினர் ஆனார்கள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. புகழ்பெற்ற ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கவிதையை எழுதிய கணியன் பூங்குன்றனார் ஒரு ஆசீவகர்.
ஆனால், ஏகாதிபத்திய காலத்தில் தென்னக வரலாற்றை எழுதிய வரலாற்றாசிரியர்கள் படிநிலையற்ற, சாதிகளற்ற சமூகத்தைப் போற்றிய இந்த சித்தாந்தங்களில் ஆர்வம் காட்டாமல், அவற்றைப் புறக்கணித்தனர். பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வைக் கற்பித்து, சாதியையே ஆதாரமாகக் கொண்ட ஒரு சமூகத்தை அமைத்து, அதில் ஆதிக்க நிலையிருப்பவர்களுக்கு இந்த சிந்தாந்தங்கள் அச்சமூட்டுபவையாக இருந்தன. தென்னகத்தில் இம்மதங்கள் தழைத்தோங்கிய ஆயிரம் ஆண்டுகளை இருண்ட காலம் என்று குறிப்பிட்டனர். வல்லான் வகுத்ததுதானே வாய்க்கால்?
மதுரை பசுமை நடை இயக்கம், அதில் பங்கு பெறுவோருக்கு - பெரும்பாலும் இளைஞர்கள் – புறவுலகைப் பற்றிய ஒரு விழிப்புணர்வையும் இயற்கையில் ஒரு ஈடுபாட்டையும் அளிக்கிறது. இதைத் தொடங்கிய எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது மதுரை நடை இயக்கத்தைப் பற்றிப் பேசி, இன்று அங்கும் ‘தொன்மை நடை' என்ற இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. மதுரையில் மாதந்தோறும் தொல்லெச்சங்கள் உள்ள இடங்களுக்கு நடை தொடர்கிறது.
கண்டறியப்படாத பாறைக்குடில்கள் தமிழகத்தில் பல இருக்கின்றன என நான் நினைக்கிறேன். கோயில் கல்வெட்டுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒற்றைப் பரிமாண வரலாறு எழுதிய ஆய்வாளர்கள், இந்த ஸ்ரமண மதங்களின் தொல்லச்சங்களைக் கண்டுகொள்ளவில்லை.
புதுச்சேரியில் இயங்கிவரும் பிரெஞ்சு இன்ஸ்டிடியூட், தமிழ்நாட்டிலுள்ள சமண இடங்களைப் படமெடுத்து ‘Jain Sites of TamilNadu” குறுந்தட்டை வெளியிட்டுள்ளது. இதில் 400 குகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆய்வுலகுக்கு இது ஒரு புதிய தளத்தைத் திறந்து வைத்திருக்கிறது. இது களப்பணியை அடிப்படையாகக் கொண்ட ஆய்வாக இருக்கும். ஆய்வுக்குத் தலைப்பைத் தேடியலையும் கல்விப்புலத்தினர் கவனிக்க வேண்டிய அம்சம் இது.
- கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT