Last Updated : 22 Dec, 2018 05:47 PM

 

Published : 22 Dec 2018 05:47 PM
Last Updated : 22 Dec 2018 05:47 PM

சேவல் கொடி 11: லட்சத்துக்கு விலைபோகும் சேவல்

வால் சேவல்கள் அளவில் பெரியவை. இந்திய அசில் வகையிலேயே இவைதான் மிகப் பெரியது. பத்து கிலோவுக்கும் மேல் இவை வளரும். நல்ல கட்டுமஸ்த்தான உடல் வாகு உடையது இந்த இனம். இவற்றின் மூக்கு அமைப்புகளைக் கொண்டு இவற்றைக் கட்டு மூக்குச் சேவல் என்றும் கூறுவர்.

இதனுடைய உருவ அமைப்பு கட்டுச்சேவலை ஒத்து இருந்தாலும் அதனிடத்தில் இருந்து அவற்றை வேறுபடுத்திக்காட்டுவது. இதனுடைய வால் அமைப்புதான். மயில்வால், விசிறி வால் என்று அதன் அமைப்பு மாறுபடும் ஒப்பீட்டு அளவில் வெத்துக்கால் சேவல் இனங்களில் நான்கில் ஒரு பங்கு கூட இவை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

திண்டுக்கல், ஒட்டஞ்சத்திரம், மதுரை திருச்சி மற்றும் கொங்கு பகுதிகளிலும் இவை அதிகமாக உள்ளன. இவை பற்றிய தரவுகள் அதிகம் இல்லை. இந்த இனமானது அசில் இனங்களுக்குள் கலப்பு செய்து  தேர்ந்தெடுத்த கலப்பு மூலம் வாலுக்காகவே தயார் செய்யப்பட்டது. இந்தியாவிலேயே மிகப் பெரிய வால் அமைப்பு கொண்டவை. இவற்றில் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் நீளம் வரையிலான வால் உள்ள சேவல்களும் உண்டு.

இவற்றைச் சண்டைக்காக யாரும் பயன்படுத்துவது இல்லை. அழகுக்காக மட்டும்தான் வளர்க்கப்படுகின்றன. இந்த வகைச் சேவலின் மூக்கு, தலை, வால் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ரூபாய் 1 லட்சம் வரை விலைபோன சேவல்களும் உண்டு.

இவை அதிக அளவில் வளர்க்கப்படுவது வியாபாரத்துக்காகதான். மற்ற சேவல் இனங்கள்போல இவற்றுக்குள்ளும் நிற அடிப்படையில் பிரிவுகள் சொல்லப்படுகின்றன. இவற்றுக்குச் சண்டைப் பயிற்சிகள் பெரிதாகக் கொடுக்கப்படுவது இல்லை.

இவற்றைக் கொண்டு சேவல் சண்டைக்குப் பதிலாக கண்காட்சி நடத்தப்படுகின்றன. குறிப்பாக திண்டுக்கலில் சிறப்பான முறையில் சமீபத்தில் நடத்தப்பட்ட கண்காட்சி சிறப்பான ஒன்று. சேவல்களைப் பதிவுசெய்து அவற்றுக்குச் சான்றிதழ் அளிப்பதுடன் மைக்ரோ சிப்பும் (Microship)பொருத்தப்படுகின்றன. இந்திய அளவில் இத்தகைய ஊடரடிகள் மொத்தம் மூன்றுதான் உள்ளது. அதில் இரண்டு தமிழகத்தில் உள்ளது.

ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணனின் வரிகளில் சொல்வது பொருத்தமாக இருக்கும். “சிந்துவெளி விட்ட இடத்தில் இருந்து சங்க இலக்கியம் தொட்ட இடம் வரை”  உள்ள இடைவெளியை எவ்வளவோ பண்பாடுசார் கூறுகள் நிறைத்துக் கொண்டுள்ளன. அவற்றில் சல்லிக்கட்டு போல சேவல்கட்டுக்கும் ஒரு தனி இடம் உண்டு.

(நிறைந்தது)

கட்டுரையாளர், வளர்ப்பு விலங்குகள் ஆய்வாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x