Published : 01 Apr 2014 12:13 PM
Last Updated : 01 Apr 2014 12:13 PM
குஜராத்தில் உள்ள வேதி தொழிற்சாலைகளின் முக்கிய மையமான அங்கலேஷ்வர், இந்தியாவில் உள்ள தொழில் மண்டலங்களிலேயே மிகவும் மாசுபட்டது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அது மட்டுமில்லாமல் குஜராத் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து கவுன்டர்வியூ இதழ் பெற்ற தகவல்களின் அடிப்படையில் 2007 முதல் 2012 வரையிலான ஐந்து ஆண்டு காலத்தில் உருவான தொழிற்சாலைகள் தற்போது உள்ளதைவிட 2.25 சதவீதம் அதிகம் மாசுபடுத்தக்கூடியவை.
குஜராத் மாநில அரசு, மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளது. சிவப்புப் பிரிவுத் தொழிற்சாலைகள், அதிகம் மாசுபடுத்தக்கூடியவை. ஆரஞ்சுப் பிரிவுத் தொழிற்சாலைகள் ஓரளவு மாசுபடுத்தக்கூடியவை. பசுமைத் தொழிற்சாலைகள், மாசுபடுத்தாத தொழிற்சாலைகள்.
2007-ம் ஆண்டில் குஜராத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த 8,013 தொழிற்சாலைகளில் 5,163 தொழிற்சாலைகள் அதிகம் மாசுபடுத்தக்கூடியவை. 2012-ம் ஆண்டின் முடிவில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 27,892. இதில் அதிகம் மாசுபடுத்தக்கூடியவை 16,770. இதன்படி அதிக மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் 225 சதவிகிதம் பெருகியுள்ளன.
ஆனால் சர்வதேச அளவிலும், ஏற்றுமதிச் சந்தையிலும் மாசுபடுத்தாத தொழிற்சாலை உற்பத்திக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வரும் பின்னணியில், மொத்தத் தொழிற்சாலைகளில் 2007-ல் அதிகம் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளின் சதவீதம் 64. அதுவே 2012-ல் 60 சதவீதமாக, சிறிதளவு குறைந்துள்ளது.
இதே ஐந்து ஆண்டு காலத்தில் ஓரளவு மாசுபடுத்தக்கூடிய தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 2,022-ல் இருந்து, 6,468 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தப் பின்னணியில் பசுமைத் தொழிற்சாலைகள் 828-ல் இருந்து 4,654 ஆக அதிகரித்திருக்கின்றன. என்றாலும், ஒட்டுமொத்தமாக 34,360 தொழிற்சாலைகள் மாசுபடுத்தும் பிரிவில் உள்ளன என்பதுடன் ஒப்பிட்டே, பசுமைத் தொழிற்சாலைகளின் அதிகரிப்பைப் பார்க்க வேண்டும்.
மத்திய குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இருந்து, மாநிலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள வாபி வரையிலான 400 கி.மீ. பகுதியில் வேதிப்பொருள், சாயம், பெயிண்ட், உரம், பிளாஸ்டிக், காகிதத் தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத தண்ணீரும், வாயுக்களும் அதிகம் வெளியாவதே சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு முக்கியக் காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT