Published : 17 Nov 2018 11:32 AM
Last Updated : 17 Nov 2018 11:32 AM
நவம்பர் 21: உலக மீன்வள நாள்
திருப்பாலைவனம். தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். பெயருக்கேற்றபடி, அது ஒரு பாலைவனம்தான். ஏனென்றால், அது வானம் பார்த்த பூமி. மழை வந்தால் மட்டுமே விவசாயம் தழைக்கும் நிலம்!
பருவநிலை மாற்றத்தால், கடல் மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது. அதனால் நிலம், நிலத்தடி நீர் போன்றவை அதிக அளவில் உவர்த்தன்மை கொண்டதாக மாறி வருகின்றன. இன்னொரு பக்கம், வறட்சியும் வெள்ளமும் தாக்குகின்றன. இதனால் இது போன்ற கடற்கரையோரக் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
58 வயதான சிவஞானம் அப்படி விவசாயத்தைக் கைவிட்டவர்தான். அவருக்கு மாற்று வாழ்வாதாரமாக அமைந்தது உவர்நீர் மீன் வளர்ப்பு. தமிழகத்தில் குறைந்த உவர்ப்பு நீரில் ‘வெனமை’ எனும் இறால் வளர்ப்பை மேற்கொண்டு சாதனை புரிந்த முதல் விவசாயி அவர்தான். அந்தச் சாதனைக்காக ‘இந்திய வேளாண்மை ஆய்வு நிறுவனத்தின்’ 2016-ம் ஆண்டுக்கான ‘சிறந்த இறால் வளர்ப்பு விவசாயி’ உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார். இவரிடம் இலவசமாகப் பயிற்சி பெற்ற பலர், தமிழகத்தின் பல பகுதிகளில் இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பருவநிலை தந்த மாற்றம்!
பருவநிலை மாற்றம் எனும் சூழலியல் பிரச்சினையின் தாக்கத்தை 90-களிலேயே சிவஞானம் கண்டுகொண்டார். கடல் நீர்மட்ட உயர்வு காரணமாக, அவரது வயல்களில் உவர்த்தன்மை படரத் தொடங்கிவிட்டது. அதனால் நெல் விவசாயத்தைக் கைவிட்டார். ஆனால், நிலத்தைக் கைவிட மனமில்லை. எனவே, 1994 முதல் தன்னுடைய நிலத்தில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
“ஆரம்பத்தில், வண்ண மீன் வளர்ப்பு, கெண்டை மீன் வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டேன். ஆனால், அவற்றில் உற்பத்திச் செலவு அதிகமாக இருந்தது. கொஞ்ச காலத்தில் நஷ்டம் ஏற்பட்டு அவற்றைக் கைவிட வேண்டியதாயிற்று” என்றவர், பின்னர் சென்னையைச் சேர்ந்த ‘மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய’த்தின் அறிமுகம் கிடைக்க 2010 முதல் வெனமை இறாலை வளர்த்து வருகிறார். பல்வேறு அளவுகளில் உள்ள உவர்ப்பு நீரில் வேண்டுமானாலும், வருடம் முழுவதும் எந்த வகையான பருவ காலத்திலும் இவற்றை வளர்க்கலாம் என்பதுதான் இந்த இறாலின் சிறப்பம்சம்.
மறுசுழற்சிக்குத் தேவை இல்லை
“இறால் வளர்ப்பில், உவர்நீர் இறால் வளர்ப்பு, நன்னீர் இறால் வளர்ப்பு என்று இரண்டு வகைகள் உள்ளன. உவர்நீர் இறால் வளர்ப்பில், ஒவ்வொரு முறை அறுவடை முடிந்ததும், இறால்கள் வளர்க்கப்படும் குட்டையிலிருக்கும் நீரை வெளியேற்றிச் சுத்தப்படுத்திவிட்டு, மீண்டும் புதிய நீரை நிரப்ப வேண்டும்.
ஆனால், நன்னீர் இறால் வளர்ப்பில், குட்டை நீரை மறுசுழற்சி செய்வதற்கான தேவையே இல்லை. மழை நீரைச் சேகரித்து, நிலத்தடி நீரை உயர்த்துவதும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் உவர்நீர் மீன் வளர்ப்பில் சாத்தியம்” என்கிறார் சிவஞானம். இவருக்கு மீஞ்சூரை அடுத்த காட்டூர் கிராமத்தில் 17 ஏக்கரில் 12 இறால் வளர்ப்புக் குட்டைகள் உள்ளன.
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி முரளீதரன் கூறும்போது, “ஏற்கெனவே உவர்த்தன்மை அதிகம் உள்ள இடங்களில்தான் இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், வழக்கமான வேளாண்மையில் வெளியாகும் பசுங்குடில் வாயுக்களின் அளவைவிட, குறைவான அளவே உவர்நீர் மீன் வளர்ப்பில் வெளியாகிறது என்பதால், இது சுற்றுச்சூழலைப் பாதிக்காது” என்றார்.
“திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2,500 ஏக்கர்களில் இறால் பண்ணைகள் உள்ளன. அரசு, தனியார் குஞ்சுபொரிப்பகங்களிடமிருந்து குஞ்சுகளை வாங்கி வளர்க்கலாம். ஒரு அறுவடைக்கு, ஒரு ஏக்கரில் சுமார் 3 டன் இறால் வரை கிடைக்கும். ஓர் ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை செய்யலாம்.
ஆக, ஓர் ஆண்டுக்குச் சுமார் 15 ஆயிரம் டன்வரை இறால் ஏற்றுமதியாகிறது. ஒரு டன்னின் மதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாய். என்றால், இங்கிருந்து மட்டும் சுமார் 450 கோடி ரூபாய்க்கு இறால்கள் ஏற்றுமதியாவதாக ‘கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்’ தெரிவிக்கிறது. இந்தக் கணக்குகளைத் தமிழகம் முழுமைக்கும் (சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர்களில்) பொருத்திப் பார்த்தால், நிச்சயம் உவர்நீர் மீன் வளர்ப்பு என்பது லாபகரமான தொழில் என்பதில் சந்தேகமே இல்லை” என்கிறார் சிவஞானம்.
ஒரு வருடத்தில், இரண்டு முறை அறுவடை செய்யலாம். தீவனச் செலவுகள் போக, ஒரு அறுவடைக்குச் சுமார் ரூ.7.5 லட்சம் வரை லாபம் கிடைக்கும். மாநில அரசின் மீன்வளத் துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஆகியவை உவர்நீர் மீன் வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு, ஒரு ஹெக்டேருக்குச் சுமார் 7 லட்சம் ரூபாய் மானியம் வழங்குகின்றன. இது தவிர, ஒரு ஹெக்டேருக்குச் சுமார் 25 லட்சம் ரூபாய்வரை வங்கிக் கடனும் கிடைக்கிறது. ஆனால், இவ்வளவு வசதிகள் இருந்தும், பல பிரச்சினைகளும் உள்ளன.
இழப்பீடு இல்லாத பிரச்சினைகள்…!
உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு உரிமம் வழங்குவதில் மாநில அரசு காட்டும் தாமதம், நிலப் பற்றாக்குறையால் அதிருப்தியடைந்த அரசியல் செல்வாக்கு மிக்க ரியல் எஸ்டேட் அதிபர்களின், ‘இறால் வளர்ப்பால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது’ என்ற தவறான பிரசாரம், அண்டை மாநிலங்களில் ஒரு யூனிட் மின்சாரம் 2 ரூபாய்க்கு வழங்கப்பட, தமிழகத்தில் சுமார் 7 ரூபாய்க்கு வழங்கப்படும் பாகுபாடு போன்ற பிரச்சினைகள் ஒரு புறமிருக்க, இன்னொரு முக்கியமான பிரச்சினையான இயற்கைச் சீற்றங்களையும் வெப்ப நிலை மாறுபாடுகளையும் இந்த விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
“குட்டை நீரின் வெப்பநிலை மாறினால், அது இறால்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் சரியாகத் தீவனத்தை எடுக்காமல் விட்டுவிடும். இப்படி வீணாகிற தீவனம் குட்டையில் சேர்ந்து, அதன் சூழல் கெட்டுவிடும்.
இதனால், அவை ‘வெண்புள்ளி’ நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகலாம். எனவே, குட்டையின் வெப்ப நிலையை அவ்வப்போது பரிசோதிப்பது, குட்டையைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, தரமான குஞ்சுகள், தீவனங்களைப் பயன்படுத்துவது போன்ற நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்கிறார் உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தின் மற்றொரு விஞ்ஞானி குமரன்.
‘வார்தா’ புயலின்போது சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு இழப்பைச் சந்தித்தார் சிவஞானம். வெள்ளம், புயல் போன்றவை ஏற்பட்டால், இறால் பண்ணைகள் சேதமடையும். அந்த இழப்புகளுக்கு அரசு எந்த இழப்பீடும் தருவதில்லை.
வாழ்வு கொடுக்கும் ‘கொடுவா மீன்’
கிட்டத்தட்ட இதேபோன்ற இயற்கை சீற்ற பிரச்சினைகளைத்தான் காஞ்சிபுரம் மாவட்டம் வெண்ணாங்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ‘ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மீன் உற்பத்தியாளர் சங்க’த்தினர் சந்திக்கிறார்கள். கடல் முகத்துவாரப் பகுதியில் மீன் பிடிக்கும் ‘உள்நாட்டு மீனவர்கள்’ அதிகம் உள்ள கிராமம் இது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில், தமிழகத்தில் கொடுவா மீனுக்கு நல்ல வரவேற்பு இருப்பது தெரியவர, அந்த மீனை அதிக அளவில் வளர்த்து விற்பனை செய்தால், இங்குள்ள மீனவர்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கருதி, சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம், இங்கு ‘கூண்டு முறை கொடுவா மீன் வளர்ப்பு’ தொழிலை 2016-ல் அறிமுகப்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அத்தொழிலில் நல்ல லாபம் பார்த்திருக்கிறார்கள் மீனவர்கள்.
இதுகுறித்து உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கே.கே. விஜயன், “பருவநிலை மாற்றத்தால் மீன் வளம் குறைந்துவரும் நேரத்தில், கழிமுகங்களில் உள்ள குடிப்பதற்கோ வேறு தொழில்களுக்கோ பயன்படாத உவர்நீரில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாமல் மீன், இறால் போன்றவற்றை வளர்க்கலாம். இதுபோன்ற முயற்சிகளுக்கு மாநில அரசுகள் ஆதரவு தர வேண்டும்” என்றார்.
“கழிமுகங்கள், உவர்நீர் ஓடைகள் போன்ற உவர்நீர் ஆதாரங்கள் பொதுச் சொத்தாக இருப்பதால், இங்கு இதுபோன்ற மீன் வளர்ப்பு, தனி மனிதர்களுக்கு மட்டுமல்லாது, ஒரு சமூகத்துக்கே பயனளிக்கக்கூடியதாக இருக்கும்” என்கிறார் விஞ்ஞானி குமரன்.
“இந்த மீன் வளர்ப்புக் காலம் 6 முதல் 7 மாதங்கள். ஓர் ஆண்டுக்கு இரண்டு முறை மீன் அறுவடை செய்ய முடியும். எங்களின் முதல் அறுவடையில், சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரையில் லாபம் கிடைத்தது. தற்போது நாங்கள் இரண்டாவது அறுவடைக்காகக் காத்திருக்கிறோம்” என்கிறார் அந்த மீன் உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் சரண்.
“வங்கிக் கடன்கள், இழப்பீடுகள் போன்றவற்றை வழங்குவதுடன், எங்களது உற்பத்தியைச் சந்தைப்படுத்த மாநில மீன்வளத் துறை உதவினால், மேலும் பலர் இத்தொழிலில் ஈடுபட முன்வருவார்கள்” என்கிறார் அவர்.
ஏற்றம் பெறட்டும்
இந்த மாற்று வாழ்வாதாரங்கள் !
[‘எர்த் ஜர்னலிசம் நெட்வொர்க்’ எனும் சுற்றுச்சூழல் இதழியலுக்கான அமைப்பின் ஊடக பயண நிதி நல்கை (Earth Journalism Network’s Bay of Bengal Story Grant – Climate Justice Resilience Fund) உதவியுடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது]
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT