Published : 05 Aug 2014 09:30 AM
Last Updated : 05 Aug 2014 09:30 AM
கானமயிலாட கண்டிருந்த வான்கோழி என்ற பாடலைக் கேள்விப்பட்டிப்பீர்கள். அதில் வரும் கானமயில் (Great Indian Bustard) என்பது மயிலைக் குறிப்பதாகத்தான், இவ்வளவு நாளும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். இல்லை, அது வான்கோழி உயரமே இருக்கும் புல்வெளிகளில் வாழும் வேறொரு பறவையைப் பற்றியது. இந்தியாவின் தேசியப் பறவையாக அங்கீகாரம் பெற இருந்த அந்தப் பறவை, இன்றைக்கு அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் ஒகேனக்கல், மதுரையில் இந்தப் பறவை இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. முன்பு வேட்டையால் பெருமளவு அழிந்த கானமயில், தற்போது புல்வெளிகள் அழிக்கப்படுவதால், நம் கண் முன்னாலேயே அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
அதைப் பிழைக்க வைக்க கடைசி கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக, கானமயில் இனப்பெருக்க மையம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி ‘கானமயில் இனப்பெருக்க மையம் அமைப்பதற்கான சாத்தியங்கள்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கம் வழங்கிய பரிந்துரைகளின்படி, கானமயில் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்புக்கான தேசிய மையம் ஒன்றை நிறுவ மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்தத் திட்டத்துக்காக ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிர மாநில அரசுகளிடம் தலா நான்கு சதுர கிலோமீட்டர் அளவுக்கு நிலத்தை ஒதுக்குமாறும், திட்ட முதலீடான ரூ.30 கோடியில் 50 சதவீதத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை நிர்வகிக்க அடுத்த 15 ஆண்டுகளுக்கு 50 சதவீதப் பங்களிப்பாக ஆண்டுக்கு ரூ.2 கோடி வீதம் அந்த மாநிலங்களிடம் கோரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை ராஜஸ்தான் மாநில அரசு வரவேற்றிருக்கிறது. ஆனால், மற்ற விஷயங்கள் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT