Published : 24 Nov 2018 11:31 AM
Last Updated : 24 Nov 2018 11:31 AM
இந்திய அசில்களின் (Asil-சண்டைச் சேவல்கள்) தாக்கத்தால் 1927-ம் ஆண்டு ஒட்டாவாவில் (Ottawa) நிறுவப்பட்டWorld Poultry Congress-ல் அசில்களும் காட்சிப்படுத்தப்பட்டன. லூயீ ரைட்டின் குறிப்புகள் ஏற்படுத்திய தாக்கத்தில் பெல்ஜிய ஓவியர் ஒருவர் மெட்ராஸ் அசிலைப் படமாக வரைந்தார். இந்தப் படத்தில் உள்ள கோழியின் நிறம் ‘பூதி’ என்று வழங்கப்படுகிறது. அது இன்று சிறப்பான நிறமாகவே கருதப்படுகிறது.
இங்கிலாந்து, இந்தியக் குறிப்புகள் மூலமாக மலாய் அசில், ஹைதராபாத் அசில், மெட்ராஸ் அசில் எனச் சொல்லப்படும் அசில்கள் நம் பூர்வீகச் சேவல்களின் வழித் தோன்றல்கள்தாம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். நமது சண்டைச்சேவல் இனங்களைப் பற்றி அறிய இது மட்டும் போதுமானதல்ல.
பல வருடங்களாக நமது மக்கள் சண்டைச் சேவலை அழைக்கக் கையாண்ட பெயர், அளித்துவந்த பயிற்சிகள், அவற்றின் வகைகள் என்பதன் மூலம்தான் நம் சேவல்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இனி பழைய குறிப்புகள் சொன்ன பிரிவுகளை ஒதுக்கிவிட்டு நம்மவர்கள் இனங்காணும் முறையைப் பற்றிப் பார்ப்போம்.
தமிழகச் சண்டைச்சேவல்கள் இனங்களைப் பொதுவாக மூன்று விதமாகப் பிரிக்கலாம்.
1. கத்திகட்டாமல் விடக்கூடிய வெத்துக்கால் சேவல்.
2. கால்களில் கத்திகட்டி விடக்கூடிய சேவல்கள்.
3. வால் சேவல்கள். இவை அழகுக்காக வளர்க்கப்படுபவை.
இவை தவிர்த்து ஒவ்வொரு பிரிவுகளுக்குள்ளும் பல பிரிவுகள். இந்தப் பிரிவுகள் அனைத்தும் நிறத்தின் அடிப்படையில் வருபவை. இந்தப் பிரிவுகள் அனைத்தும் தனி இனமாகவே கருதப்படுகின்றன.
வெத்துக்கால் சேவல்
இது வெப்போர் சேவல், வெத்தடிச் சேவல் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அதிகப்படியான சண்டைச் சேவல் வகை இதுதான். மிக இறுக்கமான உடல்வாகைக் கொண்ட இவை, அதிக அளவில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, பாண்டிச்சேரி, தஞ்சை, சென்னை போன்ற பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன. முன்னரே குறிப்பிட்டது போல, இவை பல வண்ணங்களில் இருக்கின்றன. அதைப் பொறுத்தே இவை ரகம் பிரிக்கப்படுகின்றன.
யாகுத் - சிவப்புநிறம்
ஜவா (அல்லது) வலவி – பலவண்ணம்
பீலா - ஆரஞ்சு நிறம்
தும்மர் - சாம்பல்
சீதா - வண்ணப்புள்ளிகள் உடையது
நூரி - வெள்ளை
இவை அல்லாது காகம், கருங்காகம், கருவலவி, செங்காகம், கீரி போன்ற பல வண்ணங்களும் உண்டு. கறுப்பைப் பிரதானமாகக் கொண்ட சேவல்களைப் பேய்க்கருப்பு என்றும் சாம்பலைப் பிரதானமாக கொண்ட சேவல்களைப் பூதி என்றும் கூறுவர். சண்டைச் சேவல்களை வளர்ப்பவர்கள் தங்களுடைய சேவல்களை நாட்டுச் சேவல் இனங்களுடன் சேர்ப்பது இல்லை. அசில் இனத்தில் மட்டுமே இணை சேர்க்கின்றனர்.
கட்டுரையாளர், வளர்ப்பு விலங்குகள் ஆய்வாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT