Last Updated : 13 Oct, 2018 03:56 PM

 

Published : 13 Oct 2018 03:56 PM
Last Updated : 13 Oct 2018 03:56 PM

சேவல் கொடி 03: சோழனுடன் போரிட்ட சேவல்

சிந்துச் சமவெளி நாகரிகத்தில் போர்ச் சேவல்களைச் சிறப்பிக்கும் சான்றுகள் உள்ளதுபோல் தமிழகத்திலும் பல சான்றுகள் உண்டு. சங்க கால இலக்கியங்களுள் ஒன்றான திருமுருகாற்றுப்படையில்,

‘தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்

கொடியன் நெடியன் கொடி அணி

தொளன்’

-என்ற வரிகள் சேவற்கொடி ஏந்திய முருகனைப் போற்றுகின்றன.

கி.மு. 1-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால நாணயத்தில் ஒரு யானையைச் சேவல் எதிர்த்துப் போரிடுவது போன்ற சித்திரம் இருக்கிறது. இந்தக் கதை மரபு வழியாகப் பல தலைமுறையாக வந்து இருக்கிறது.

பழையோன் - பண்டையோன் என்ற சொற்களிலிருந்தே ‘பாண்டியன்’ என்ற பெயர்ச் சொல் வந்தது என்பர் அறிஞர்கள். அதுபோல ‘சோழர்’ என்பதுகூட ‘கோழியன்’ என்பதில் இருந்தே வந்தது. சோழ நாட்டின் அன்றைய தலைநகரான உறையூர் அருகில் வீரச்சேவல்கள் அதிகம் இருந்ததால் ‘கோழி’ அல்லது ‘கோழியூர்’ என்றே அது அழைக்கப்பட்டது. இன்றைய திருச்சியின் ஒரு பகுதியான உறையூரின் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் யானையின் மேல் ஏறிவந்த சோழனுடன் சேவல் சண்டையிடுவது போன்ற சிற்பம் ஒன்று உள்ளது. இவை காலத்தால் பிந்தையது என்ற போதும் அவற்றுடைய தொடர்ச்சி என்ற மட்டில் இதைப் பார்க்க வேண்டும்.

அதுபோலத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் பவனந்தி முனிவர் தந்த நன்னூலிலும் கீழச்சேரி, மேலச்சேரி சேவல் போரைப் பற்றிய குறிப்புகள் உண்டு.

தமிழர்களின் தொன்மையான நடுகல் வழிபாடு பெரும்பாலும் வீரச்சாவு அடைந்தவர்களைச் சிறப்பித்து அமைக்கப்படுவதாகும். அதுபோல் போர்ச் சேவலுக்கும் தமிழகத்தில் நடுகல் உள்ளது. இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இப்படி ஒரு நடுகல் இருக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தச் சேவல் உருவம் பொறிக்கப்பட்ட நடுகல் கி.பி. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தமிழ்நாட்டில் உள்ள அரசலாபுரம் என்ற ஊரில் கிடைத்த இந்த நடுகல், முகையூர் என்ற பகுதியில் மேலச்சேரி என்ற பகுதி சார்பாகப் போரிட்டு மாண்ட சேவலுக்காக வைக்கப்பட்டது.

அதுபோலவே இந்தளுர் என்ற ஊரில் கீழச்சேரி என்ற இடத்தைச் சேர்ந்த சண்டைச் சேவலுக்கு நடுகல் வைக்கப்பட்டுள்ளது. போரில் மாண்ட அந்தச் சேவலின் பெயர் ‘பொற்கொற்றி’ என்றும் அந்த நடுகல்லில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘உறைக்கிணற்றுப் புறச் சேரி

மேழகத் தகரோடு சிவல் விளையாட’

-என்ற பட்டினப்பாலை வரிகள் சங்க காலத் தமிழ்க்குடிகள் சேவல் போர்களைக் கண்டுகளித்ததைக் குறிப்பிடுகிறது. சேவல்கள் இயல்பாகவே தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டப் போரிடும் இயல்பு கொண்டவை. ஆனால், எல்லாச் சேவல்களும் போர்ச் சேவல்கள் ஆகாது. போர்ச் சேவல்களுக்குத் தனிப் பயிற்சிகள் அளிக்கப்படும்.      

‘உய்த்தனர் விடா ஆர் பிரித்து இடைகளையார்

குப்பைக் கோழித் தனிப்போர் போல’

என்ற குறுந்தொகை (305:6) வரி குப்பைக் கோழிகள் போரிடுவதற்கும் போர்ச் சேவலுக்கும் வேறுபாடு உண்டு என்பதையே உணர்த்துகிறது. இவையே காலப்போக்கில் இனம் கண்டு சண்டைச் சேவல் இனங்களாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

கட்டுரையாளர், வளர்ப்பு விலங்குகள் ஆய்வாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x