Published : 27 Oct 2018 10:41 AM
Last Updated : 27 Oct 2018 10:41 AM
உலகின் பிரம்மாண்டமான நதிகளில் ஒன்றான கங்கை இன்று மெல்ல அழிந்துவருகிறது. இமயமலையின் பனி படர்ந்த சிகரங்களில் உருவாகி, கீழ் நோக்கிப் பாய்ந்து, வங்காள விரிகுடாவில் கலக்கும் இந்த நதி, மனிதர்களின் பாவங்களையும் பேராசை மிகுந்த தொழிற்சாலைகளின் கழிவுகளையும் சுமக்க முடியாமல், தள்ளாடி மடிந்து வருகிறது.
இந்தியாவின் ஜீவ நதியான இதை மீட்டெடுப்பதையே தனது வாழ்வின் லட்சியமாக, சுவாசமாக ஜி.டி. அகர்வால் கொண்டிருந்தார். தனி மனிதரால் அது இயலாத காரியம் என்பதால், தனது உண்ணாவிரதங்களின் மூலமாக அரசைத் துணைக்கு அழைத்தார்.
முந்தைய அரசுகளாவது அவருடைய கோரிக்கைகளுக்குச் சற்று செவிமடுத்தன. ஆனால் இன்றைய அரசு, அதுவும் ‘கங்கை மாதாவின் அழைப்பின் பெயரில் வந்துள்ளேன்’ என்று சொல்லி, தேர்தலில் வென்று பதவியில் இருக்கும் மத்திய பா.ஜ.க அரசு, இறுதிவரை அகர்லாலின் எந்தக் கோரிக்கைக்கும் செவிமடுக்கவில்லை என்பது ஒரு அவலமான உண்மை.
அந்த அகர்வால், மேற்கூறப்பட்ட அதே காரணங்களுக்காக, அதே உண்ணாவிரதத்தால், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இறந்து போனார். அவருக்கு இன்னொரு பெயரும் உண்டு… சந்த் சுவாமி சனந்த்!
கங்கையை மீட்கவே வாழ்க்கை
1932-ம் ஆண்டு, விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார் ஜி.டி. அகர்வால் எனும் குரு தாஸ் அகர்வால். சுற்றுச்சூழல் பொறியாளரான இவர், சில காலம் ரூர்கி ஐ.ஐ.டியில் பேராசிரியராகப் பணியாற்றினார். கைநிறையச் சம்பளம். வசதியான வாழ்க்கை. ஆனால், ‘சுவாமி’க்கு அது மட்டுமே போதுமானதாக இல்லை!
தன் 79-வது வயதில் சன்னியாசம் வாங்கிக் கொண்ட அகர்வால், கங்கை நதியை மீட்பதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
பிரதமராகப் பதவி யேற்றவுடனே, கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்காகத் தனி அமைச்சரவையை பிரதமர் மோடி அமைத்தார். உமா பாரதியை அதற்கான அமைச்சராக நியமித்தார். கங்கைக்கு விமோசனம் கிடைத்து விடும் என்று ஒட்டுமொத்த இந்தியாவும் நம்பியது. அகர்வாலும் ஆரம்பத்தில் நம்பினார். பணம் தண்ணீராக இறைக்கப்பட்டது. சுமார் 4,000 கோடி ரூபாய் அந்தத் திட்டத்துக்காகச் செலவிடப்பட்டது. இருந்தும், கங்கையின் நிலை முன்பைவிட மோசமடைந்தது. இந்தத் தரவுகள் அகர்வாலுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தன. அரசின் மீதான அவரது நம்பிக்கைகள் சிதைந்தன.
பதில் இல்லாத கடிதம்
இந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி, மோடிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார் அகர்வால். அதில், ‘கங்கையின் தடுப்புகள் அகற்றப்பட வேண்டும். அதில் கழிவுகள் கலப்பது தடை செய்யப்பட வேண்டும். அதற்காக, தான் முன்வைக்கும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை ஜூன் 22-ம் தேதிக்குள் தொடங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில், ஜூன் 22-ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்’ என்று அழுத்தமாகத் தெரிவித்திருந்தார். பிரதமரிடமிருந்து உடனடி நடவடிக்கையை எதிர்பார்த்தவருக்குக் குறைந்தபட்சம் பதில் கடிதம்கூடக் கிடைக்கவில்லை.
எனவே, ஜூன் 22 முதல் அகர்வால் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். உண்ணாவிரதப் போராட்டம் அவருக்குப் புதிது அல்ல. ஏற்கெனவே 2008, 2009, 2010, 2012, 2013 ஆகிய வருடங்களில் உண்ணாவிரதம் இருந்துள்ளார். அப்போது ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஓரளவுக்கு அவருடைய கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்தது. ஆனால், இந்த முறை அவருடைய உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
‘உருப்படியான நடவடிக்கை எதுவுமில்லை!’
ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை, மொத்தம் 112 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இடையில் ஆகஸ்ட் 3-ம் தேதி அமைச்சர் உமா பாரதி தன்னைச் சந்தித்தபோது அவரிடம் பிரதமருக்கு ஒரு கடித்தைக் கொடுத்து அனுப்பினார் அகர்வால்.
அதில், ‘கங்கை நதிக்கெனத் தனி அமைச்சரவையை உருவாக்கிய நீங்கள், அதை மீட்டெடுக்க இரண்டு அடிகள் முன் செல்வீர்கள் என நம்பினேன். ஆனால், என்னுடைய இத்தனை வருடச் சூழலியல் அனுபவத்தில் சொல்கிறேன்…
நீங்கள் கங்கையை மீட்டெடுப்பதற்காக, இந்த நான்கு ஆண்டுகளில், உருப்படியான ஒரு நல்ல நடவடிக்கைகூட எடுக்கவில்லை. நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் பெரும் நிறுவனங்களுக்குப் பயனளிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தன. நான் மீண்டும் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். தயவு கூர்ந்து கங்கையை மீட்டெடுங்கள்’ என எழுதியிருந்தார். அவருடைய அந்தக் கடிதத்துக்கும் பிரதமர் மோடியின் பாராமுகமே பதிலாக அமைந்தது. இந்நிலையில் அக்டோபர் 11-ம் தேதி மாரடைப்பால் உயிர் இழந்தார்.
காந்தியின் வழியில் போராடிய அவருடைய வாழ்வு, காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஆர்ப்பாட்டம் அடங்கும் முன்பே முடிந்துவிட்டது. காந்தியின் பெருமையைப் பற்றி உரக்கப் பேசும் இந்த அரசு, காந்தியின் மீதும் அவர் கொள்கையின் மீதும் எந்த அளவுக்கு உண்மையான பிடிப்புடன் உள்ளது என்பதற்கு, இந்த 86 வயது முதியவரின் உண்ணாவிரதப் போராட்டமும் அவருடைய மரணமுமே சான்றுகள்!
சென்று வாருங்கள்… ‘கங்கை’ கொண்டான்!
தொடர்புக்கு: mohamed.hushain@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT