Published : 04 Aug 2018 11:11 AM
Last Updated : 04 Aug 2018 11:11 AM
மண்புழுக் கழிவில் சாதாரண மண்ணைவிட 5 மடங்கு அதிகமான தழை ஊட்டம், 7 மடங்கு மணி ஊட்டம், 11 மடங்கு சாம்பல் ஊட்டம் அதிகமாக உள்ளன.
நல்ல சூழ்நிலை இருந்தால் ஒரு மாதத்தில் இரண்டு மடங்காக மண்புழுக்கள் பெருகிவிடும். ஒரு பங்கு மண்புழு ஓராண்டில் ஆயிரம் மடங்காகப் பெருகும்.
மண்புழுக்களுடைய உணவில் ஞெகிழியோ (பிளாஸ்டிக்), உலோகமோ செயற்கை இழைகளோ சேரக் கூடாது. கோழி போன்ற பறவை எச்சங்களும் மண்புழுக்களுக்குப் பிடிக்காது.
குளிர் நாடுகளில் ஒரு மண்புழுவின் எடை ஒரு கிராம் அளவாக உள்ளது. வெப்ப நாடுகளில் 3 முதல் 10 கிராம் வரை உள்ளது. எடையும் நீளமும் வேறுபடுவதுபோல மண்புழுக்களின் இனமும் பல்வேறு வகையாக உள்ளது.
நிலத்தடியில் துளையிட்டுக் கொண்டே இருப்பதுதான் மண்புழுக்களின் வேலை. இதன் உடலில் ஒருவித வழவழப்புப் பசைப் பொருள் உள்ளது. இது துளைகளின் ஓரங்களில் பூசப்படுவதால் துளைகள் இடிந்துவிடாமல் பாதுகாப்பாக உள்ளன.
மண்புழுக்களுக்குக் கண் கிடையாது. மூளை கிடையாது. எலும்புகள் கிடையாது. வெப்பத்தைக் கொண்டு இரவு பகல் அறியும். மண்புழுக்கள் இரண்டாக வெட்டுப்பட்டாலும் மீண்டும் உயிர் பெற்றுவிடும்.
முட்டைகளைத் துளைகளில் இடுகின்றன. எவ்வளவு காலம் ஆனாலும் முட்டைகள் கெடுவது கிடையாது. 15 முதல் 21 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும்போது முட்டையில் இருந்து புழு வெளிவருகிறது. குளிர்ந்த சூழலில் அதிக அளவு முட்டை பொரித்தல் நடைபெறுகிறது.
மண்புழு, நிலத்துக்குள் நீரைச் செலுத்துகிறது. தனது உடல் எடையைப் போல் பத்தில் ஆறு பங்கு நீரைக் கொண்டு சேர்க்கிறது. புழுக்கள் பெருகிவிட்டால் செடியின் நீர்த் தேவை 10-ல் ஒரு பங்காகக் குறைந்துவிடுகிறது.
மண்புழு மேலும் கீழும் நகர்ந்துகொண்டே இருப்பதால் மண்ணில் காற்றோட்ட வசதி ஏற்படுகிறது. நீர் இறங்கும் தன்மை அதிகரிக்கிறது. மண் அரிப்பைத் தடுக்கிறது. நீர்ப் பிடிக்கும் திறன் அதிகமாவதைக் காண முடியும்.
மண்புழு எரு இட்ட பல வயல்களில், மண் அரிப்பு தடைப்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாது, மழைக் காலத்தில் பெய்யும் மழைநீர் முழுமையும் மண்ணுள் இறங்கியதைக் காண முடிகிறது. எங்களது ‘தமிழக உழவர் தொழில்நுட்பக் கழகம்’ ஆலோசனை வழங்கிவரும் பல பண்ணைகளில் இந்த உண்மைகளை நேரடியாகக் காண முடிகிறது.
மண்ணில் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகமாகிறது. இதனால் ஊட்டங்களைச் செடிகளால் எளிதில் எடுத்துக்கொள்ள முடியும்.
மண்புழு எரு இட்ட 35-ம் நாளில், இலைகள் இரண்டு மடங்கு பெரிதாகின்றன. அகலமும் நீளமும் கூடுகிறது. மரத்தில் தலைப் பகுதி பெரிதாகிறது. வேர்கள் மூன்று மடங்கு வளர்ச்சியடைகின்றன. நிலத்தில் காரத்தன்மையும் அமிலத் தன்மையும் சமமாக மாறுகின்றன.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT