Published : 06 Nov 2025 05:30 PM
Last Updated : 06 Nov 2025 05:30 PM
ஈரோடு மாவட்டம் நாகமலை குன்று தமிழ்நாட்டின் நான்காவது உயிர்ப்பன்மை மரபுத் தலமாகத் தமிழ்நாடு அரசால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இங்கு சமீபத்தில் நடத்தப்பட்ட பறவைகள் ஆய்வில் கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியாவில் இருந்து வெகு தூரம் பயணித்து வலசை வந்திருக்கும் பறவைகள் வாழ்வது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக நெடுந்தூர வலசை பறவைகளான சாம்பல் கழுத்துக் கூம்பலகன், நீலப் பூங்குருவி, மரக் கதிர்குருவி, சேற்றுப் பூனைப்பருந்து, வெண்தொண்டை காட்டுக் கதிர்குருவி ஆகியவை ஆய்வில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தப் பறவைகள் ஆய்வை சுந்தரமாணிக்கம், மகேஷ்வரன், சூழல் அறிவோம் குழுவினர் முன்னெடுத்தனர்.
சாம்பல் கழுத்து கூம்பலகன் (Grey-necked Bunting): மத்திய ஆசியா, மேற்கு ஆசியா, மங்கோலியா, சீனா உள்ளிட்ட பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் இப்பறவை, குளிர்காலத்தில் தென்னிந்தியப் பகுதிகளுக்கு வலசை வருகிறது. தமிழ்நாட்டில் அரிதாகக் காணக்கூடிய இப்பறவையைத் தற்போது நாகமலை குன்றில் காண முடிகிறது.
இதன் உருவமைப்பு சிட்டுக்குருவியை ஒத்திருக்கும். வெளிர் பழுப்பு உடல், இளஞ்சிவப்பு கூம்பு போன்ற அலகு, வெண்ணிறக் கண் வளையம் போன்றவற்றைக் கொண்டு இவற்றை அடையாளம் காணலாம். பாறைப் பாங்கான குன்றுகள், புல்வெளிகள் போன்ற திறந்தவெளிகளை வாழ்விடமாகக் கொண்டுள்ள இவை, தாவரங்களின் விதைகள், தண்டுப் பகுதிகள், பூச்சிகள் போன்றவற்றை உண்டு வாழ்கின்றன.
நீலப் பூங்குருவி (Blue Rock-Thrush): தெற்கு ஐரோப்பா, மத்திய - மேற்கு ஆசியா, சீனா - தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இனப்பெருக்கம் செய்யும் இப்பறவை, குளிர்காலங்களில் நாகமலை குன்றுக்குத் தொடர்ந்து வலசைவருகிறது. தற்போது இணையாக வந்துள்ளது.
ஆண் பறவை, நீலம்-பழுப்பு உடலுடன் காணப்படும். பெண் பறவையானது, பெரும்பாலும் பழுப்பிலும், வயிற்றுப் பகுதியில் வெளிறியத் திட்டுகள், வரிகளுடன் காணப்படும். பாறைப் பாங்கான பகுதிகளில் வாழும் இவை பூச்சிகள், பல்லிகள், தவளைகள், தேரைகள், பழங்கள் போன்றவற்றை உள்கொள்கின்றன.
வேதிவால் குருவி (Indian Paradise Flycatcher): இமயமலைப் பகுதி, வட இந்தியாவில் இனப்பெருக்கம் செய்யும் இவை தமிழ்நாட்டிற்குப் பரவலாகக் குளிர்காலத்தில் வலசை வருகின்றன. ஆண் பறவை செம்பழுப்பு உடல், கருமையான முகம், வெண்மையான வயிற்றுப் பகுதி, நீளமான வாலுடன் காணப்படும். கருந்தலையுடன் உடல் முழுவதும் வெண்ணிறம் கொண்ட ஆண் பறவைகளையும் நாம் காணலாம். பெண் செம்பழுப்பு உடல், சிறிய வாலுடன் காணப்படும். இலையுதிர்க் காடுகள், துண்டான காடுகள் போன்ற பகுதிகளில் காணப்படும் இவை, பெரும்பாலும் பூச்சிகளை உண்டு வாழ்கின்றன.
இவற்றுடன் இணையாக ராஜாளிக் கழுகு, வல்லூறு, பஞ்சுருட்டான், சில்லை, கொண்டலாத்தி, தவிட்டுப்புறா, உழவாரன், வெண்வயிற்றுக் கரிச்சான் போன்ற ஐம்பதிற்கும் மேற்பட்ட உள்ளூர்ப் பறவைகள் வாழ்வதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சாம்பல் கழுத்துக் கூம்பலகன், நீலப் பூங்குருவி, ராஜாளிக் கழுகு உள்ளிட்ட பறவைகள் பாறைப் பாங்கான பகுதிகளைச் சார்ந்து வாழ்வது நம்மைச் சுற்றியுள்ள குன்றுகளின் சூழலியல் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
நாகமலை குன்றில் இதுவரை 136 வகையான பறவைகள், 138 தாவர இனங்கள், 106 பூச்சிகள், 23 எட்டுக்காலிகள், 17 ஊர்வன, 10 பாலூட்டிகள், 8 இதர பல்லுயிர்கள் என மொத்தம் 438 உயிரினங்கள் வாழ்வது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT