Last Updated : 18 Aug, 2018 11:20 AM

 

Published : 18 Aug 2018 11:20 AM
Last Updated : 18 Aug 2018 11:20 AM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 96: உயிருள்ள இயந்திரம்

முன்பு திறந்தவெளி மலத்தைச் சுத்தப்படுத்தும் பணியைச் செய்தவை சாண வண்டுகள்தாம். அவை நிறைய இருந்த காலத்தில் மனித மலத்தையும் கால்நடை மலத்தையும் மண்ணுக்குள் புதைத்துச் சூழல் மாசுபாடு ஏற்படாமல் பார்த்துக்கொண்டன. ஆனால் பசுமைப் புரட்சிக்குப் பின்னர் பயன்படுத்தப்பட்ட ஏராளமான பூச்சிக் கொல்லிகள் இவற்றின் வாழ்வைச் சூறையாடின.

உண்மையில் உலக வெப்பமயமாக்கலுக்கு எதிராக இவை பணியாற்றுகின்றன. கால்நடைகளின் கழிவு முறையாக மட்க முடியாமல் போகும்போது அவற்றில் இருந்து மீத்தேன் வளி உருவாகி உலக வெப்பத்தை அதிகமாக்கும். சாண வண்டுகள் அவ்வாறு மீத்தேன் வளி உருவாகாமல் பார்த்துக் கொள்கின்றன, அதாவது மலத்தை மட்க வைத்து அழித்துவிடுகின்றன. பின்லாந்தில் உள்ள ஹெல்சிங்கி பல்கலைக்கழக ஆய்வுகள் இதை உறுதிசெய்துள்ளன.

மண்வளத்தில் குறிப்பாக மண்ணில் உயிர்மக் கரிமத்தை அதிகமாகச் சேர்க்கும் பணியில் சாண வண்டுகள் முன்னிலை பெறுகின்றன. இல்கா கான்சிகி என்ற அறிஞரின் ஆய்வுகள் உலகில் உள்ள சாண வண்டுகளின் சிறப்பை விளக்குகின்றன. மணல் நிறைந்த சாசேல் பெருவெளியில் மண்ணில் கரிமச் சத்துகளே இல்லாமல் அதாவது கிட்டத்தட்ட மலடாக இருந்த இடத்தில் செய்த ஆய்வுகளில் பல வியத்தகு உண்மைகள் கிடைத்தன.

உயிர்மக் கரிமம் இரண்டு மடங்கும் தழைச் சத்து மூன்று மடங்கும் மட்கு அமிலம் (கியூமிக் அமிலம்) அதிகரித்தும் காணப்பட்டதை ரவ்கான் என்ற ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார். ஒரு நாளைக்கு ஒரு டன் பச்சைச் சாணத்தை மண்ணில் புதைத்த வேலையைச் சாண வண்டுகள் செய்துள்ளதாக வடஅமெரிக்காவில் ஒக்லஹாமா மாகாணத்தில் செய்யப்பட்ட ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது.

மண்ணில் இரண்டு விரற்கடை (அங்குலம்) முதல் மூன்று அடி ஆழம்வரை இவை துளையிடுகின்றன. மண்ணுக்குள் இவை தொடர்ந்து துளைகளை இடுவதால் மண்ணில் காற்றோட்டம் அதிகமாகிறது. நீர் ஊடுருவும் திறன் அதிகமாகிறது. இந்த இரண்டு காரணிகளாலும் மண்ணின் வளம் கூடிக்கொண்டே செல்கிறது. இந்த வண்டுகள் தங்களை மட்டும் பாதுகாத்துக் கொள்வதில்லை, மற்ற உயிர்களுக்கும் உதவுகின்றன. குறிப்பாக மண்புழுக்களுக்கான உணவை இவை உருவாக்கிக் கொடுக்கின்றன.

சாணத்தை உடனுக்குடன் அப்புறப்படுத்தும்போது தீமை செய்யும் வண்டுகளான காண்டாமிருக வண்டுகள் சாணக்குப்பையில் உருவாவது தடுக்கப்படுகிறது. சாண வண்டுகளின் ஆய்வுகள் எண்ணற்று நடந்துள்ளன. ஆனால், நாம் இன்னும் மலத்தை அப்புறப்படுத்த மனிதர்களையும் இயந்திரங்களையும் தேடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் நமக்கான பணி செய்ய (அவர்களுக்குப் பணிசெய்யும்போது நமக்கும் உதவுகின்ற) எத்தனையோ உயிருள்ள இயந்திரங்கள் உள்ளன. அவற்றைத் தேடுவோம்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x