Published : 08 Oct 2025 06:08 PM
Last Updated : 08 Oct 2025 06:08 PM
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே அமைந்துள்ள நாகமலை குன்றை மாநிலத்தின் நான்காவது உயிர்ப்பன்மை மரபுத் தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நாகமலைக் குன்று செழிப்பான மலை அடிவாரக் காடு, வறண்ட இலையுதிர் காடு, முட்புதர் காடு, பாறைப் பகுதி, வறண்ட புல்வெளி, நன்னீர் சுனை எனச் செழிப்பான வாழ்விடங்களை கொண்டுள்ளது. நாகமலை குன்றில் உள்ள காட்டுப்பகுதியில் இதுவரை 118 வகையான பறவைகள், 138 தாவர இனங்கள், 71 பூச்சிகள், 5 எண்காலிகள், 11 ஊர்வன, 7 பாலூட்டிகள், 3 இதர பல்லுயிர்கள் என மொத்தம் 349 உயிரினங்கள் வாழ்வதாக சூழல் அறிவோம் குழுவால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு 21 உள்ளூர் பறவைகள் கூடமைத்து இனப்பெருக்கம் செய்கின்றன.
சிறப்பம்சமாக பறவைகளின் உணவுச் சங்கிலியின் உச்சியில் இருக்கும் இரைக்கொல்லிப் பறவைகளான ராசாளிக் கழுகு (Bonelli's eagle) கடந்த பத்து ஆண்டுகளக்கு மேலாக இங்கு இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன.
நாகமலைக் குன்று தனித்துவமான புவியியல் அமைப்பையும் அதை சார்ந்த உயிர்ச்சூழலையும் பெற்றுள்ளதால் இது போன்ற வாழ்விடங்களில் மட்டுமே வாழக்கூடிய கந்தர் தேரை, சங்ககிரிப் பல்லி போன்ற பல ஓரிடவாழ் உயிரினங்கள் (Endemic species) இங்கு வாழ்கின்றன.தனித்துவமான உயிர்ச்சூழல் கொண்ட வாழ்விடத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு நாகமலைக் குன்றை உயிர்ப்பன்மை மரபுத் தலமாக, உயிர்ப்பன்மைச் சட்டம் 2002இன் கீழ் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT