Published : 29 Sep 2025 03:23 PM
Last Updated : 29 Sep 2025 03:23 PM

ஈரோடு எலத்தூர் குளத்தில் இயற்கை நடை

693 உயிரினங்கள் வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஈரோடு எலத்தூர் குளத்தை அங்குள்ள பல்லுயிர்களின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த செப்டம்பர் 1 அன்று தமிழ்நாட்டின் மூன்றாவது பல்லுயிர்ப் பாரம்பரியத் தளமாகவும் ஈரோடு மாவட்டத்தின் முதல் பல்லுயிர்ப் பாரம்பரியத் தளமாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. பல்லுயிர் நிறைந்த எலத்தூர் குளத்தில் 204 பறவைகள், 174 பூச்சி இனங்கள், 228 தாவர வகைகள், 17 ஊர்வன, 18 எட்டுக்காலிகள், 20 மிதவை நுண்ணுயிரிகள், 8 பாலூட்டிகள், 24 இதர பல்லுயிர்கள் வாழ்கின்றன.

எலத்தூர் குளத்தை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி இ.ஆ.ப., பார்வையிட வந்ததையொட்டி இயற்கை நடை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இங்கு வாழும் பறவைகள், தாவரங்கள், பூச்சிகள், பிற உயிரினங்கள், குளத்தின் பல்வேறு வாழ்விடங்கள், குளக்கரையில் நடப்பட்டு வளர்ந்து வரும் மண்ணின் தாவரங்களை அவர் நேரில் பார்வையிட்டார். இயற்கை நடையில் நீர்க்காகம், தூக்கணாங்குருவி போன்ற உள்ளூர்ப் பறவைகள் கூடு அமைப்பதையும், வலசை வந்திருக்கும் நீலவால் பஞ்சுருட்டான், உள்ளூர் பறவைகளான நெடுங்கால் உள்ளான், புள்ளி மூக்கு வாத்து, சில்லை போன்றவற்றுடன், பல பூச்சிகள், தாவரங்களையும் காண முடிந்தது.

இந்நிகழ்வில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் யோகேச் குலால் இ.வ.ப., எலத்தூர் பல்லுயிர் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பேரூராட்சி நிர்வாகிகள், வனத்துறை அதிகாரிகள், உள்ளூர் மக்கள், கோபி கலை - அறிவியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எலத்தூர் குளத்தில் ஏற்கெனவே நடப்பட்டு நன்கு வளர்ந்து வரும் 150க்கும் மேற்பட்ட வகையான மண்ணின் மரங்களுடன் ஒரு புதிய ஆலம் (Ficus krishnae) மரக்கன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரால் நடப்பட்டது. சூழல் அறிவோம் குழுவைச் சேர்ந்த சதீஷ், ஜனார்த்தனன், கேசவ் ஆகியோர் இயற்கை நடையை வழிநடத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x