Published : 03 Sep 2025 05:10 PM
Last Updated : 03 Sep 2025 05:10 PM

உயிர்ப்பன்மை மரபுத் தலமான எலத்தூர் குளம்

ஈரோடு மாவட்டம் எலத்தூர் குளத்தைத் தமிழ்நாட்டின் மூன்றாவது உயிர்ப்பன்மை மரபுத் தலமாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி ஆகியவை உயிர்ப்பன்மை மரபுத் தலங்களாக உள்ளன. இலையுதிர் முட்புதர் காடு, கரைக்காடு, உலர் புல்வெளி, சதுப்பு நிலம், பாறைப் பகுதிகள் நிறைந்த நீர்வழித்தடம், ஆழமான நீர்நிலைப்பகுதி, ஆழம் குறைந்த நீர்ப்பகுதி, மண் - மணல் திட்டுகள், ஏரிக்கரை ஆகிய வாழிடங்கள் எலத்தூர் குளத்தில் உள்ளதால் இந்தக் குளம் பல்லுயிர் செறிவுமிக்க இடமாக விளங்குகிறது.

இதுவரை 693 வகையான உயிரினங்கள் எலத்தூர் குளத்தில் வாழ்வதாகச் சூழல் அறிவோம் குழு சார்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 204 பறவைகள், 174 பூச்சி இனங்கள், 228 தாவர வகைகள், 17 ஊர்வன, 18 எட்டுக்காலிகள், 20 மிதவை நுண்ணுயிரிகள், 8 பாலூட்டிகள், 24 இதர பல்லுயிர்கள் அடங்கும். இங்கு 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வாழ்கின்றன. இதில் 79 வலசை பறவை இனங்களும், 125 உள்ளூர்ப் பறவை இனங்களும் அடங்கும். இத்துடன் பல உயிரினங்கள் வாழும் சிறந்த உயிர்ச்சூழலை இந்தக் குளம் பெற்றுள்ளது. 37 ஹெக்டேருக்கு மேல் உள்ள எலத்தூர் குளத்தில் 72 வகையான உள்ளூர்ப் பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன.

இந்தக் குளமானது சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. மேலும் உள்ளூர்ச் சூழலை மேம்படுத்தவும், விளைநிலங்களின் வளத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. உள்ளூர்த் தட்பவெப்பநிலையைச் சீராக வைக்க உதவும் எலத்தூர் குளமானது, பறவைகளைக் காண்பதற்கும் சுற்றுச்சூழல் குறித்துக் கற்பதற்கும் முக்கிய இடமாக விளங்குகிறது. உயிர்ச்சூழல் நிறைந்த இந்த வாழ்விடத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு எலத்தூர் குளத்தை உயிர்ப்பன்மை மரபுத் தலமாக, உயிர்ப்பன்மைச் சட்டம் 2002இன் கீழ் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் வனம் - கதர்த் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி, தமிழ்நாடு உயிர்ப்பன்மை வாரிய உறுப்பினர் செயலர் மித்தா பானர்ஜி, சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குலால், சூழல் அறிவோம் குழுவைச் சேர்ந்த வெ. தீபக், உயிர்ப்பன்மை மேலாண்மை குழுவைச் சேர்ந்த எலத்தூர் பேரூராட்சி தலைவர் நாகராஜன், கானுயிர் ஒளிப்படக் கலைஞர் ஜனார்த்தனன் ஆகியோர் உடனிருந்தனர். நிகழ்வில் எலத்தூர் குளம் பற்றிய குறும்படமும் வெளியிடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x