Published : 16 Aug 2025 03:20 PM
Last Updated : 16 Aug 2025 03:20 PM
ஈரோட்டில் நடைபெற்ற சூழலியல் கருத்தரங்கில் தாவரங்களுக்காகவும், அவற்றின் உயிர்ச்சூழலைப் பாதுகாப்பதற்காகவும் பெரும் பங்காற்றிய சென்னை கிறித்துவக் கல்லூரி தாவரவியல் துறை முன்னாள் தலைவரான முனைவர் டி.நரசிம்மனுக்கு, 'சூழல் அறிவோம்' குழு சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி, அன்று "தாவரங்கள், காலநிலை மாற்றம் & உயிர்ச்சூழல் பாதுகாப்பு" கருத்தரங்கு ஈரோட்டில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நம் சூழலின் மிக முக்கிய அங்கமான, நாம் பெரிதும் கவனிக்கத் தவறிய தாவரங்கள் குறித்து புதிய புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், காலநிலை மாற்றத்தால் தாவரங்களில் ஏற்படும் பாதிப்புகள், தாவரங்கள் சார்ந்த உயிர்ச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் இக்கருத்தரங்கு அமைந்தது. இக்கருத்தரங்கில் வல்லுநர்களின் உரைகள், புத்தக வெளியீடு, ஆவணப்பட வெளியீடு, விருதுகள், ஒளிப்படக் கண்காட்சி, கலந்துரையாடல் எனத் தாவரங்கள் சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
தாவர ஆராய்ச்சியாளர் - புற்கள் நிபுணர் முனைவர் பெருமாள் ரவிச்சந்திரன், 'தாவரங்களும் காலநிலை மாற்றமும்' என்கிற தலைப்பில் உரையாற்றினார். புவி வெப்பமயமாதல் - தீவிர வானிலை நிகழ்வுகளால் தாவரங்களில் ஏற்படும் பாதிப்புகள், உருமாறும் காடுகள், தாவரங்களைச் சார்ந்து வாழும் பூச்சிகள், விலங்கினங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பன குறித்து எளிமையாக அவர் எடுத்துரைத்தார்.
'தாவரங்கள் குறித்த அறிவின் தேவையும் தெளிவும்' என்கிற தலைப்பில் உரையாற்றிய தாவரங்கள் ஆராய்ச்சியாளர் தாவரங்கள் வகைப்பாட்டியல் நிபுணர் முனைவர் நரசிம்மன் மண்ணுக்கேற்ற தாவரங்களின் அவசியம், மியாவாக்கி, விதைப்பந்து, ஏரி சீரமைப்பு, சூழல் பூங்கா, நில வடிவமைப்பு போன்ற சமீபத்திய முன்னெடுப்புகளில் காணப்படும் அறிவியல்பூர்வமற்ற அணுகுமுறைகள் குறித்துத் தெளிவுபடுத்தினார்.
தாவர ஆராய்ச்சியாளர் முனைவர் கணேசன், 'இடைவெளி காடுகள் - அறிதலும் பாதுகாப்பும்' என்கிற தலைப்பில் உரையாற்றினார். ஓரு காடு எவ்வாறு துண்டான சிறு காடுகளாக மாறுகிறது, அவற்றின் சூழல் முக்கியத்துவம், மக்களுடன் இணைந்து அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார்.
இயற்கை உழவர் கே.கே.வேலுச்சாமி, 'காலநிலை மாற்றம் - பயிர்கள் - உழவு - உணவு உற்பத்தி' என்கிற தலைப்பில் உரையாற்றினார். இந்த உரையில், காலநிலை மாற்றத்தால் உள்ளூர் உணவுப் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், நமது உணவுப் பொருட்களின் விலை உயர்வு, உணவுப் பாதுகாப்பில் உள்ள சவால்கள் குறித்துப் பேசினார். மேலும், சூழலை அறிந்து உணவை விளைவிப்பதின் தேவை, நெடும் தொலைவில் உற்பத்தியான உணவைவிட உள்ளூரில் விளைந்த உணவின் முக்கியத்துவம் போன்றவற்றை குறித்து அவர் எடுத்துரைத்தார்.
சூழலியலாளர் தீபக் வெங்கடாசலம், 'தாவரங்களும் உயிர்ச்சூழல் பாதுகாப்பும்' என்கிற தலைப்பில் உரையாற்றினார். ஓர் உயிர்ச்சூழலை முறையாக, அறிவியல்பூர்வமாக ஆவணப்படுத்தி, மக்களுடன் இணைந்து பாதுகாப்பதன் அவசியம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டார். இவ்வாறு பாதுகாக்கப்பட்டு வரும் எலத்தூர் குளத்தில் முன்னெடுத்த பாதுகாப்பு வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் பறவைகள், பூச்சிகளைப் போலவே, தாவரங்களுக்கும் மாவட்ட - மாநில அளவிலான கணக்கெடுப்பு தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார். இத்துடன் முனைவர் தணிகைவேல் தாமிரபரணி ஆற்றங்கரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் தாவரங்கள் சார்ந்த ஆய்வுகள் குறித்து எடுத்துரைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் வயது முதிர்ந்த, பாதுகாக்கப்பட வேண்டிய மரங்களின் தொகுப்பான 'ஈரோட்டின் மூதாய் மரங்கள்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும், இவற்றின் முக்கியத்துவத்தையும், இவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில், கானுயிர் ஒளிப்படக் கலைஞர் ஜனார்த்தனகின் 'ஈரோட்டு மரங்களின் கதை' என்கிற ஆவணப்படமும் இக்கருத்தரங்கில் வெளியிடப்பட்டது. இம்மரங்களை 'ஈரோட்டின் பாரம்பரிய மரங்களாக' அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என்கிற தீர்மானமும் இக்கருத்தரங்கில் முன்மொழியப்பட்டது.
மேலும், தாவரங்கள் சார்ந்த கணக்கெடுப்பை எவ்வாறு மேற்கொள்வது, நம்மைச் சுற்றியுள்ள குன்றுகளையும், துண்டான காடுகளையும் எவ்வாறு ஆவணப்படுத்தி பாதுகாப்பது என்பது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
வீடியோ வடிவில்: https://www.youtube.com/@suzhalarivom
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT