Published : 03 Aug 2025 01:27 PM
Last Updated : 03 Aug 2025 01:27 PM
உலகளாவிய முன்னெடுப்பான ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக (2024 - 2025) தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக வகையான பறவைகள் வாழும் வாழ்விடங்களில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது ஈரோடு மாவட்டத்தின் எலத்தூர் குளம். இதுவரை 204 பறவைகள் இங்கு வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 79 பறவைகள் மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் வலசை வந்து செல்லும் பறவைகளாகும். 72 வகையான உள்ளூர் பறவைகள் இக்குளத்தில் இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன.
குளத்தில் சிசு, கருவேலம், வாகை உள்ளிட்ட மரங்களில் பாம்புத்தாரா, வெள்ளை அன்றில், பெரிய நீர்க்காகம், இந்திய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், நெடலைக் கொக்கு, இராக்கொக்கு போன்ற பறவைகள் கூடுகள் அமைத்து இனப்பெருக்கம் செய்கின்றன. மேலும் இக்குளம் ஆயிரக்கணக்கான கொக்குகள், அன்றில்கள், சில நூறு நாரைகள், வாத்துக்கள், பாம்புத்தாரா, மஞ்சள் மூக்கு நாரை மற்றும் பல பறவைகளுக்கு இரவு தங்குமிடமாக (Roosting Site) உள்ளது.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தால் (IUCN) வெளியிடப்படும் சிவப்பு பட்டியலில் புல்வெளிக்கழுகு, ஆற்று ஆலா, பெரிய புள்ளிக்கழுகு, கருவால் மூக்கன், வெண்கழுத்து நாரை, செந்தலை வல்லூறு போன்ற அச்சுறு நிலையில் உள்ள பறவைகளும் எலத்தூர் குளத்தில் வாழ்வது ஆவணப்படுத்தப்பட்டுளள்து. இதுவரை 693 வகையான உயிரினங்கள் எலத்தூர் குளத்தில் வாழ்வதாக ஆவணம் செய்யப்பட்டுள்ளது. இதில் 204 பறவைகள், 174 பூச்சி இனங்கள், 228 தாவர வகைகள், 17 ஊர்வன, 18 எட்டுக்காலிகள், 20 மிதவை நுண்ணுயிரிகள், 8 பாலூட்டிகள், 24 இதர பல்லுயிர்கள் உள்ளடங்கும்.
இவ்வளவு பல்லுயிர் செழிமைமிக்க குளத்தில் கடந்த சில மாதங்களாக மர்ம நபர்களின் சட்ட விரோத செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பறவைகள், பிற பல்லுயிர்களை வேட்டையாடுவது, பிடி வலைகள் வைப்பது, அதன் வாழ்விடங்களை சேதப்படுத்துவது, பறவைகள் கூடு கட்டி இருக்கும் இடம், பறவைகள் இரவு கூட்டமாக தங்கும் இடம், பறவைகள் நிலத்தில் முட்டையிடும் பகுதிகளில் தடையை மீறி கூட்டமாக மீன் பிடிப்பது, மீன்பிடித்து அங்கேயே மது அருந்திவிட்டு கல் வைத்து சமைப்பது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்துடன் சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவது, மண் அள்ளுவது போன்ற செயல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த செயல்பாடுகளால் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையும், கூடுகளில் குஞ்சுகளை தாய் பறவைகள் அடைகாத்து வளர்ப்பதற்கு சிரமம் ஏற்படுவதையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவனித்து பதிவு செய்துள்ளனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் இவர்களால் அங்கு பறவைகள் காண வரும் பலருக்கும் தொந்தரவும் ஆபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது. உள்ளூர் மக்களும் இவர்களால் பாதிப்படைகின்றனர்.
சூழல் அறிவோம் குழுவுடன் இணைந்து எலத்தூர் பல்லுயிர் மேலாண்மை குழுவும் உள்ளூர் மக்களும் தங்களால் இயன்ற வகையில் இந்த வாழ்விடத்தை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இவர்களின் எச்சரிக்கையை மீறியும் இந்த நபர்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது.
அரசு இப்பிரச்சினையை கவனத்தில் கொண்டு தமிழ்நாட்டின் முக்கிய பறவைகள் வாழ்விடத்தை பாதுகாக்கவும் இங்கு இனப்பெருக்கம் செய்யும் பறவைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உடனடியாக இக்குளத்தில் வனத்துறை சார்பாக பதாகைகள் வைத்து, தினசரி ரோந்து பணிகளை முன்னெடுக்க உறுதி செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள். இத்துடன் இதன் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதி செய்ய அரசு பாரம்பரிய பல்லுயிர் தளமாக இக்குளத்தை நாகமலை குன்றுடன் இணைந்து விரைவில் அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
கட்டுரையாளர் : தீபக் வெங்கடாசலம் | தொடர்புக்கு: suzhalarivom@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT