Published : 11 Jul 2025 12:20 PM
Last Updated : 11 Jul 2025 12:20 PM
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகேயுள்ள நாகமலைக் குன்றில் இளஞ்சிவப்பு - பழுப்பு நிறத்துடன் சிறகுகளில் அரிதாக வெளிரிய நிற அமைப்பைக் (Partial leucism) பெற்ற தவிட்டுப் புறா (Laughing dove) ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தவிட்டு புறாக்களில் பொதுவாக காணப்படும் கருநிற வெளிப்புற இறகுகளுக்கு மாற்றாக, நிறமி (color pigment) அற்ற வெண்ணிற வெளிப்புற இறகுகள் இப்பறவையில் இருப்பதை ஆய்வாளர்கள் புகைப்படங்கள் வாயிலாக உறுதி செய்துள்ளனர்.
நாகமலைக் குன்று அடர்த்தியான மலை அடிவாரக் காடு, வறண்ட இலையுதிர் காடு, முட்புதர் காடு, பாறைப் பகுதி, வறண்ட புல்வெளி, நன்னீர் சுனை என பலச் செழிப்பான வாழ்விடங்களை கொண்டுள்ளது. நாகமலை குன்றில் உள்ள காட்டுப்பகுதியில் இதுவரை 135 வகையான பறவைகள், 138 தாவர இனங்கள், 106 பூச்சிகள், 23 எட்டுக்காலிகள், 17 ஊர்வணங்கள், 10 பாலூட்டிகள், 8 இதர பல்லுயிர்கள் என மொத்தம் 437 உயிரினங்கள் வாழ்வது சூழல் அறிவோம் குழுவால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு 35 உள்ளூர் பறவைகள் கூடமைத்து இனப்பெருக்கம் செய்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவிட்டு புறாக்கள்: வேல வகை மரங்கள் (Acacia sp), புதர்கள் நிறைந்த வறல் இலையுதிர் காடு சார்ந்த வாழ்விடங்களில் இயல்பாக காணப்படும் தவிட்டு புறாக்கள் பொதுவாக விதைகள், பழங்கள் மற்றும் பூச்சிகளை உண்டு வாழ்கின்றன. நாகமலை குன்றில் தவிட்டுப் புறாக்களும் இனப்பெருக்கம் செய்வது கடந்த சில ஆண்டுகளாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள உடை (குடைவேல) மரங்களிலும் புதர்களிலும் தவிட்டுப் புறாக்கள் கூடமைத்து இனப்பெருக்கம் செய்கின்றன.
இந்நிலையில், நாகமலை குன்றில் வாழும் பறவைகளை கடந்த சனிக்கிழமை (ஜூலை 05, 2025) ஆவணப்படுத்த சென்ற போது நிறமி குறைபாடு (partial leucism) கொண்ட இரண்டு தவிட்டுப் புறாக்களை பறவை ஆர்வலர்களான ஷாஜன் மற்றும் சுந்தரமாணிக்கம் ஆகியோர் கண்டு பதிவு செய்து உள்ளனர்.
நாம் பல வண்ணங்களில் பறவைகளின் இறகுகளை கண்டிருப்போம். அவற்றின் வண்ணங்கள் நிறமிகள் (pigments), ஒளிவிலகல் (refraction) ஆகிய இரு காரணங்களால் உருவாகின்றன. பறவைகளின் இறகுகளில் காணப்படும் மெலனின்கள் (melanins), கரோட்டினாய்டுகள் (carotenoids), மற்றும் போர்பிரின்கள் (porphyrins) போன்ற நிறமிகள் கருப்பு, பழுப்பு, மஞ்சள், பச்சை, சிவப்பு போன்ற வண்ணங்களை அளிக்கின்றன. நிறமிகளுக்குப் பதிலாக, இறகுகளில் உள்ள நுண்ணிய புரத அமைப்பு ஒளியை விலகச் செய்வதினால் (refraction) நீலம், ஊதா போன்ற வண்ணங்கள் உருவாகின்றன. இவை அமைப்பு வண்ணங்கள் (Structural colours) எனப்படுகிறது.
லூகிசம் என்பது பறவைகள் உட்பட விலங்குகளில், நிறமிகள் (pigments) குறைந்து அல்லது இழந்து வெளிப்புறத் தோற்றம் வெண்ணிறமாக மாறுதல் அடைவதினால் ஏற்படும் ஒரு நிலையாகும். இந்த வகை நிறமி குறைபாடு ஏற்பட்ட பறவைகளின் கண்களும் அலகும் இயல்பான நிலையிலே இருக்கும். இது மரபணு மாற்றத்தால் நிகழ்கிறது. எடுத்துக்காட்டாக நாம் உயிரியல் பூங்காக்களில் அரிதாக காணும் வெண்ணிறப் புலி, மயில் போன்றவை நிறமிகள் குறைபாட்டால் (Leucism) ஏற்பட்டவை. இந்த மாறுபாடுகள் அல்பினிசத்துடன் (Albinism) தொடர்புடையவை அல்ல. அல்பனிசம் என்பது முற்றிலும் நிறமி உற்பத்தி அற்ற நிலையாகும். இந்நிலையில் அவ்விலங்குகளின் கண்களும் பாதிப்படைந்து சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கும்.
சில சமயங்களில் நிறமி இழப்பு உடலில் சில பகுதிகளில் மட்டும் ஏற்படலாம் (Partial Leucism). இவ்வகையான (Partially Leucistic) தவிட்டுப் புறா தற்போது நாகமலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இது போன்ற வெளிப்புற சிறகுகளில் நிறமி இழந்த தவிட்டு புறா காண்பது இதுவே முதன்முறை. தமிழ்நாட்டில் வெகு அரிதாக இவைகளின் சில பதிவுகள் உள்ளன. நாகமலை காட்டுப்பகுதியில் நிறமி இழந்த தவிட்டுப் புறாக்கள் வாழும் வாழ்விடத்தை தொடர்ச்சியாக அவதானித்து ஆராய்ந்து ஆவணப்படுத்துவது அவசியமாகிறது.
நாகமலைக் குன்று தனித்துவமான புவியியல் அமைப்பையும் அதை சார்ந்த உயிர்ச்சூழலையும் பெற்றுள்ளதால் இது போன்ற வாழ்விடங்களில் மட்டுமே வாழக்கூடிய கந்தர் தேரை (Gunther’s Toad), சங்ககிரி பல்லி (Sankari Brookish Gecko) போன்ற பல இடவறை உயிரினங்கள் (Endemic species) இங்கு வாழ்கின்றன. உயிரிப்பன்மம் நிறைந்த நாகமலை குன்றில் சமீப காலமாக நிகழும் நிலப் பயன்பாட்டு மாற்றம், வனவிலங்கு வேட்டை, காடழிப்பு போன்றவற்றை தவிர்க்க, விரைவாக இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT