Published : 06 Jul 2025 10:08 AM
Last Updated : 06 Jul 2025 10:08 AM

 இயற்கையின் மடியில்: நான்கு நண்பர்கள் 

பிரியா. சி

பறவைகளைக் கவனிக்க ஆரம்பித்த புதிதில் ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதத்தில் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன. பறவைகள் பறப்பதே நமக்கு பெரும் விந்தைதான். அதையும் தாண்டி ஒவ்வொரு பறவையும் ஏதாவது ஒரு விதத்தில் நம்மை ஈர்த்துவிடும். சிறிது நேரம் உன்னிப்பாக கவனித்தால் போதும்.

மாலை நேரத்தில் வீட்டிற்கு அருகில் உள்ள சிறிய வெட்டவெளி நிலத்தில் பறவைகளை பார்த்துவருகிறேன். பறவைகளுக்கு என்று ஒரு அன்றாட வாழ்க்கைமுறை இருக்கிறது என்பதை தொடர்ந்து அவற்றை நோக்கி வருவதன் மூலம் அறிந்துகொண்டேன். குக்குறுவான் (Coppersmith Barbet) பறவை ஒன்று தினசரி ஒரு வேப்பமரத்தின் உச்சியில் அமர்ந்து 'குக் குக் குக்' என மெல்லிய சத்தமிட்டுச் செல்லும். வெண் தொண்டை சில்லையும் (Indian Silverbill), புள்ளிச்சில்லையும் (Scaly-breasted munia) கூட்டமாக ஒரு புதரின் மேல் வந்து அமர்வதும் பின்னர் பறப்பதுமாக இருக்கும். கவுதாரிகள் (Grey Francolin) புற்களுக்குள் மறைந்து உலா வரும். இன்னும் சில பறவைகளையும் தினமும் காண்கிறேன். இதில் ஒரு சில மாதங்கள் சென்னைக்கு வலசை வந்துசெல்லும் நீல வால் பஞ்சுருட்டானும் (Blue tailed Bee eater) ஒன்று.

பஞ்சுருட்டான்: நீல வால் பஞ்சுருட்டான்களை நான் முதலில் பார்த்தது பள்ளிக்கரணை சதுப்புநிலப் பூங்காவில். நீரிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த ஒரு மரக்குச்சியில் நான்கு பறவைகள் அமர்ந்திருந்ததைக் கண்டேன். நான்கும் ஒன்றுபோல அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தன. அவற்றின் கண்ணுக்கு அருகில் இருந்து தொடங்கும் கறுப்புப் பட்டை அவற்றினுடைய அலகின் நீளத்தை அதிகப்படுத்திக் காட்டின. மையிட்ட கண்கள், நீண்ட ஊசி போன்ற வால், நீலம்-பச்சை-இளஞ்சிவப்பு-மஞ்சள் எனப் பல நிறங்களில் இருந்தன அப்பறவைகள். முதலில் என்னை ஈர்த்தது அவை பறக்கும் விதம்தான்.

வானில் 'டி-டீவ், டி-டீவ்' என்று இந்தப் பஞ்சுருட்டான்கள் அழைப்பு விடுக்கும்போது அண்ணாந்து பார்க்க வேண்டும். இளஞ்சிவப்பு இறக்கைகளைக் கொண்டு நீல மேகத்தைக் கிழித்துக்கொண்டு மேலுழும்பும். கூர்மையான அதன் இறகுகளின் கறுப்பு எல்லைக்கோடுகள் செந்நிறத்தை எடுத்துக்காட்டும். மேலும் கீழும் பறப்பதும், பறந்தவாறே பூச்சிகளை பிடிப்பதுமாகச் சாகசங்கள் செய்யும்.

இயற்கையை ரசிக்கும் நீல வால் பஞ்சுருட்டான்களை பெரும்பாலும் நான்காக அல்லது அதற்கும் மேற்பட்ட கூட்டமாகத்தான் காண்கிறேன். ஓரிடத்தில் அமர்ந்தபடியே வானில் நோட்டமிட்டு பூச்சிகள் பறந்தால், அவற்றை பறந்து சென்று பிடிக்கும். பின்னர் அமர்ந்திருந்த இடத்திற்கே திரும்பவந்து பூச்சியை உண்ணும். ஜூலை மாதத்திலிருந்து சதுப்பு நிலங்களிலும் நீர்நிலைகளுக்கு இவை அருகிலும் தென்படுகின்றன.

என் வீட்டுக்கு அருகில் மாலை நேரங்களில் வருவதுண்டு. நான்காக வந்து மின்கம்பியில் அமரும். சட்டென்று தாவி தட்டானைப் பிடித்து வந்து கம்பியில் அமர்ந்துகொள்ளும். நடிகர் ரஜினிகாந்த் சிகரெட்டை தூக்கிப்பிடித்துப் போட்டு வாயில் பிடிப்பதைப் பார்த்திருப்போம். இந்த பஞ்சுருட்டானோ தட்டானை மின்கம்பியில் அடித்துக் கொன்ற பின்பு, மேலே தூக்கிப் போட்டு லாவகமாக அலகில் பிடித்து விழுங்கும்.

ஒரு முறை ஒரு பஞ்சுருட்டான் தட்டானைப் பிடித்து வந்து, அருகில் அமர்ந்து இருந்த பறவைக்குத் தந்துவிட்டது. அது இணையாக இருக்குமோ? பறக்கும்போது சத்தமிட்டுக் கொண்டு பெரும்பாலும் சிறகடிக்காமல் பறப்பது இவற்றின் அழகு. சில வேளைகளில் நான்கும் மின்கம்பியில் வரிசையாய் அமர்ந்து சூரியன் மறையும் திசையை நோக்கி அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கும். இப்படி இப்பறவைகளை கவனிப்பது இயற்கையை ரசிக்கும் தருணங்கள் மட்டுமன்றி, இயற்கையின் பேருருவை உணர்த்தும் சமயங்களாகவும் உணர்ந்தது உண்டு.

எங்கே போகின்றன? - பஞ்சுருட்டான்கள் மணல் சரிவுகளில் பொந்து உருவாக்கி முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கின்றன. குஞ்சுகளை வளர்ப்பதில் பெற்றோரை தாண்டி அக்குடும்பத்தில் மற்ற பறவைகளும் உணவு கொண்டு வந்து உதவுகின்றன. இப்பறவைகள் இந்தியா முழுதும் ஆங்காங்கே தென்படுகின்றன. குளிர் காலத்தில் தெற்கு நோக்கி வலசை வருகின்றன. தென்னிந்தியாவிலும் சில பகுதிகளில் இவை கூடமைக்கின்றன. சென்னை பகுதிகளில் ஆண்டு முழுவதும் தென்பட்டாலும் மார்ச் முதல் ஜூலை வரை இவை குறைந்த அளவிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. மழை, குளிர் காலங்களில் பரவலாக காணலாம். ஓரிரு முறை இருபதுக்கும் மேற்பட்ட பறவைகளை வீட்டின் அருகே கண்டது உண்டு.
இந்தப் பறவைகள் கூடமைப்பதற்காக எங்கே சென்று சில மாதங்கள் கழித்துவிட்டு, மீண்டும் நமக்குக் காட்சியளிக்க சென்னைப் பகுதிகளுக்கு வந்து சேர்கின்றன? அப்படி வரும்போது அவற்றை வரவேற்க நகரில் இன்றிருக்கும் பசுமை பரப்புகளும், நீர்நிலைகளையும் நாம் அழியாமல் பாதுகாத்தாக வேண்டும்.
கூடுதலாக அறிய: https://early-bird.in/the-wonder-of-birds


தொடர்புக்கு: priyacwrites@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x