Published : 06 Jul 2018 07:07 PM
Last Updated : 06 Jul 2018 07:07 PM
ஆ
று கோடி ஆண்டுகளில், கடந்த 40 ஆண்டுகளாக நாம் சீரழித்த இயற்கை வளங்களின் அளவுதான், இந்தப் பூமிப் பந்தில் மிக அதிகமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது என்கிறார்கள் சுற்றுச்சூழல் நிபுணர்கள்.
கொடைக்கானலில் யுனிலீவர் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட தெர்மாமீட்டர் உற்பத்தி நிறுவனத்தில் அதிக அளவு பாதரசம் பயன்படுத்தப்பட்டது. அதைக் கையாள்வதில் அந்த நிறுவனம் காட்டிய அலட்சியத்தால் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளானது அந்தக் கோடை வாசஸ்தலம். அங்கிருக்கும் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உடல் சார்ந்தும் உளவியல் சார்ந்தும் பாதிக்கப்பட்டனர். அங்கிருக்கும் 25-க்கும் அதிகமான கிராமங்களின் விவசாய நிலங்களில் பாதரசக் கழிவு படிந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கிராமத்தில் இருக்கும் பெண்கள் பலருக்குக் கருத்தரிப்பதில் பிரச்சினைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பாதரசக் கழிவைச் சுத்தம் செய்ய வலியுறுத்தி இதற்குமுன் பாடப்பட்ட ‘கொடைக்கானல் வோன்ட்’ பாடல், சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. இதன்மூலமாக யுனிலீவர் நிறுவனம் மிஞ்சி இருக்கும் பாதரசக் கழிவை அகற்றுவதற்கு முன்வந்து அந்தப் பணியைச் செய்தாலும், அதை முழுமையாகச் செய்யவில்லை என்பதே செயல்பாட்டாளர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
இந்த நேரத்தில் பிரபல கர்னாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணாவும் தன்னுடைய பாடல்களில் சமூகக் கருத்துகளையும் பெண்ணியத்தையும் தூக்கிப் பிடிக்கும் சோஃபியா அஷ்ரப்பும் ‘கொடைக்கானல் ஸ்டில் வோன்ட்’ என்ற பாடலைப் பாடியிருக்கின்றனர். அம்ரித் ராவின் இசையில் அமைந்த இந்த வீடியோ பாடல்சமீபத்தில் வெளியிடப்பட்டது.
வீடியோ பாடலின் திரையிடலுக்கு முன்பாக யுனிலீவர் நிறுவனத்தில் பணிபுரிந்து சிறுநீரகம் செயல்படாமல் இறந்துபோன தன் மகனின் சோகக் கதையையும் உடல்நிலை தளர்ந்த கணவனோடு போராடும் அந்தப் பகுதியைச் சேர்ந்த வயதான பெண்ணின் சோகத்தையும் ஒரு வீடியோ பதிவாகத் திரையிட்டனர்.
ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் தனது கிளையைக் கொண்டிருந்த யுனிலீவர் நிறுவனம் அங்கே தனது செயல்பாடுகளை நிறுத்தியபின், பாதரசக் கழிவைச் சுத்தம் செய்த முறையை இந்தியாவில் கடைப்பிடிக்கவில்லை. ஏதோ ஒப்புக்குச் சப்பாணியாய் அந்நிறுவனம் செயல்படும் விதத்தை ‘சுற்றுச்சூழல் இனவாதம்’ என்று குற்றம்சாட்டுகிறார்கள் சூழலியலாளர்கள். அந்த இனவாதத்தை விமர்சிக்கிறது ‘இது எங்க மண்ணு… நீ வந்து சுத்தம் பண்ணு…’ என்னும் பாடலின் வரிகள். இந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருப்பது சிறப்பு. கலப்பிசையாக ஒலிக்கும் இந்த வீடியோ பாடல் அதிரடியாக மட்டுமல்ல; யுனிலீவர் நிறுவனத்தின் முதலாளிகளின் காதில் பேரிடியாகவும் ஒலிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT