Published : 18 Jan 2025 01:06 PM
Last Updated : 18 Jan 2025 01:06 PM

அரிய வகை ஆள்காட்டி பறவை ஈரோட்டிற்கு வருகை

கிழக்காசிய பகுதிகளிலிருந்து தென் இந்தியாவிற்கு அரிதாக வலசை வரும் சாம்பல் தலை ஆள்காட்டி பறவை, ஈரோடு மாவட்டத்தில் முதன்முறையாக எலத்தூர் குளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அளவில் 7 ஆள்காட்டி இனங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் பரவலாக நீர்நிலைகள் சார்ந்த இடங்களில் சிவப்பு மூக்கு ஆள்காட்டியையும், அங்கங்கே மஞ்சள் மூக்கு ஆள்காட்டியையும் காணலாம்.சாம்பல் தலை ஆள்காட்டிப் பறவையும் ஈரநிலப் பகுதிகளை சார்ந்து வாழும் இயல்புடையவை. இங்கு வாழும் புழுக்கள், பூச்சிகள், மெல்லுடலிகளை உண்டு இவை வாழ்கின்றன.

சாம்பல் தலை, கறுப்பு முனையுடைய அடர் மஞ்சள் அலகு, வெண்ணிற வயிற்றுப் பகுதி, பழுப்பு நிற மேற்பகுதியை உடையது சாம்பல் தலை ஆள்காட்டி பறவை (Grey headed Lapwing). இப்பறவைகள் கிழக்கு - வடகிழக்கு சீனா, தென்கிழக்கு ரஷ்யா, ஜப்பான் போன்ற பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. குளிர் காலத்தில் மத்திய ஆசிய பறவைகள் உணவு தேவைக்காக வலசை வருகின்றன.

எலத்தூர் குளம்

தலை ஆள்காட்டி பறவை ஈரோடு மாவட்டத்தில் முதன்முறையாக எலத்தூர் குளத்தில் காணப்படுவது இக்குளத்தின் உயிர்ச்சூழலையும் பல்லுயிர் செறிவையும் குறிக்கிறது. சாம்பல் ஆள்காட்டி பறவையுடன் எலத்தூர் குளத்தில் இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது. இப்பறவையை கோபியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் மகேஷ்வரன், சுந்தரமாணிக்கம் மேட்டூரைச் சேர்ந்த ஷாஜன் ஆகியோர் கள ஆய்வில் கண்டறிந்து ஆவணப்படுத்தினர்.

567 உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும், 64 உள்ளூர் பறவையினங்கள் இனப்பெருக்கம் செய்யும் களமாக எலத்தூர் குளம் உள்ளது. அந்த வகையில் இக்குளத்தை சார்ந்திருக்கும் காடுகளையும், நாகமலை குன்றையும் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் தலமாக விரைவாக அரசு அறிவிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x