Published : 09 Jun 2018 11:25 AM
Last Updated : 09 Jun 2018 11:25 AM
ம
ண்புழுக்களை அவற்றின் வாழ்க்கை அடிப்படையிலும், அவை மண்ணில் துளையிடுவதன் அடிப்படையிலும் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
முதல் வகை, மண்ணின் மேற்பரப்பிலேயே, அதாவது ஓரடி ஆழத்துக்குள் வாழ்பவை. இவை வேகமாக ஊர்ந்து செல்லும் திறன் படைத்தவை. இவை இலைக் கழிவையும் இதர உயிர்மப் பொருட்களையும் உரமாக மாற்றும் பண்பைக் கொண்டுள்ளன.
இவ்வகைப் புழுக்கள் மண்புழு உரம் தயாரிக்க ஏற்றவை. எடுத்துக்காட்டாக ‘யூடில்லஸ் யூசினியா’, ‘ஐசினியா ஃபிடிடா’ போன்ற வெளிநாட்டினங்களும், ‘பெரியோனிக்ஸ் எக்சவேட்டஸ் டிராவிடாவில்கி’ போன்ற உள்நாட்டினங்களும் குறிப்பிடத்தக்கவை.
இரண்டாம் வகை, நிலத்துக்குக் கீழே நடுப்பகுதியில் வாழும் தன்மை கொண்டவை. இவை நிலத்திலிருந்து ஓரடிக்குக் கீழே இரண்டடிக்குள் வாழ்பவை. இவை மண்ணில் உள்ள அனைத்து உயிர்மப் பொருட்களையும் உண்பதோடு மண்ணின் அமைப்பையும் மாற்றக்கூடிய திறன் படைத்தவை. இவை மண்ணுள் மேலும் கீழும் நகர்வதால் மண்ணில் காற்றோட்ட வசதி ஏற்படுகிறது. இவை குறைந்த அளவே உண்ணும் திறன் கொண்டவை. இதற்கு உள்நாட்டினமான ‘லம்பிட்டோ மவுரிட்டி’ நல்ல எடுத்துக்காட்டு.
மூன்றாம் வகை மண்புழுக்கள், நிலத்தில் ஆறடி ஆழத்தில் வாழக்கூடியவை. இவை நிலத்துக்குள் சுரங்கப் பாதை அமைக்கின்றன. இதனால் மண்ணுள் நீர்ப்பிடிப்பு அதிகமாகிறது.
கழிவாகும் உரம்
மண்புழுக்களுக்கு மனிதர்களைப் போல மூளை அமைப்பு இல்லை என்றாலும், மூளை போன்ற நரம்பு அமைப்பு காணப்படுகிறது. அதன் மூலம் இவை தகவல்தொடர்பு செய்துகொள்கின்றன. வெப்பம், ஒளி போன்றவற்றை உணர்கின்றன.
இவற்றுக்கு ‘நெஞ்சாங்குலை’ எனப்படும் இதயம் என்பது ஐந்து அமைப்புகளாக உள்ளது. இவற்றை ‘போன்மை இதயங்கள்’ என்று கூறுவார்கள். செரிமான மண்டலம் வாயில் தொடங்கி மலத்துளையில் முடிகிறது. மண்புழுவின் வாய் வழியாக உணவு வந்தவுடன், தொண்டைக் குழாய் போன்ற அமைப்பு அதை இழுத்துக்கொள்கிறது. தசைப் பகுதிகள் அதை அசைத்து உள்ளே தள்ளுகின்றன.
தொண்டைக்குள் ஒரு வகையான சுரப்பி, சளி போன்ற சுரப்பை வெளியிடுகிறது. பின்னர் குடற்பையில் உள்ள தசையால் ஆன அரைப்பான்கள் உணவை அரைக்கின்றன. இதனால் உணவு செரிமானம் அடைந்து ஊட்டமான கழிவாக வெளியேறுகிறது. உணவில் மண்புழு இயங்கத் தேவையான சத்துகள் செரிமான அமைப்பால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இப்படியாகக் கழிவு உண்ணப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
மாறுபட்ட உடல்
மண்புழுக்கள் இருபால் உயிரினம். அதாவது ஆண் இனப்பெருக்க உறுப்புகளும் பெண் இனப்பெருக்க உறுப்புகளும் ஒரே உடலில் அமைந்திருக்கும். ஓர் இணைப் புழுக்கள் ‘குக்கூன்கள்’ எனப்படும் கூட்டு முட்டைகளை இடுகின்றன. இவை கொத்தமல்லி வடிவத்தில் இருக்கும். இருபுறத்திலும் முள் போன்ற அமைப்பு நீட்டிக்கொண்டிருக்கும். வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க கறுப்பு நிறமாக மாறும். இரண்டு முதல் மூன்று வாரத்தில் இளம் புழுக்கள் வெளிவரும்.
ஒரு கூட்டுமுட்டையில் இருந்து மூன்று முதல் நான்கு இளம் புழுக்கள் வெளிவரும். இவை ஆறு வாரத்தில் இனப்பெருக்கமடையும் தகுதியைப் பெறுகின்றன. இந்த நிலையில் ‘கிளைடெல்லம்’ என்ற புதிய பகுதி மண்புழுவின் உடலில் உருவாகிறது.
மண்புழுவில் இரு பாலின உறுப்புக்கள் இருந்தாலும், அவை தன்னந்தனியாக இனப்பெருக்கம் செய்துகொள்வதில்லை. இரண்டு புழுக்கள் இணை சேர்ந்துதான் இனப்பெருக்கம் செய்துகொள்கின்றன.
வெளிச்சம் பிடிக்காது
மண்புழுக்கள் மிக மென்மையானவை. இவற்றுக்குப் பாதுகாப்பு உறுப்புகள் ஏதும் தனியாக இல்லை. உடல் பாகமானது வளையங்கள் கொண்ட தசைகளால் ஆனது. இவற்றுக்கு எலும்புகள் கிடையாது. கண்களும் கிடையாது. உடலின் முன்பகுதியில் இரண்டு ஒளி அறியும் புலன்கள் உள்ளதாக அறிஞர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர். இவை கண்கள் உருவாவதற்கு முந்தைய நிலை.
தனித்தனி வளையங்களாக இருந்தாலும் பொதுவான செரிமான மண்டலம் உண்டு. இவற்றின் தலைப் பகுதியில்தான் மூளை, இதயம் ஆகிய முக்கியமான உறுப்புகள் அமைந்துள்ளன.
மண்புழுக்களுக்குக் காதுகள் கிடையாது. அதேநேரம் சிறு அதிர்வையும் உணர்ந்துகொள்ளும் ஆற்றல் உண்டு. இவற்றுக்கு நுரையீரல் இல்லை. ஆனால் உயிர் வாழ்வதற்கு உயிர்வளி (ஆக்சிஜன்) வேண்டும் அல்லவா? அதற்காக இவை தோல் மூலமாகவே காற்றில் இருந்து உயிர்வளியை எடுத்துக்கொள்கின்றன.
இவற்றின் உடலில் இருந்து ஒருவித சளி போன்ற நீர்மம் சுரக்கிறது. இதை வைத்துத் துளைகளில் வழுக்கி நகர்கிறது. இத்துடன் சிறு இழைகள் போன்ற நுண்ணிய தூவிகள் உள்ளன. இவை பிடிமானத்துக்குப் பயன்படுகின்றன. துளைகளில் இருந்து பறவைகள் இவற்றைக் கொத்தி இழுக்க முடியாதவாறு இவை பிடிமானத்தைத் தருகின்றன.
மண்புழுக்கள் ஒளியை விரும்புவது கிடையாது. இருட்டில் வாழ விரும்புகின்றன. இவை வெவ்வேறு வகையான உணவைத் தேடியும் பொருத்தமான இணையைத் தேடியும் வெளியே வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதில் கருத்து ஒற்றுமை இல்லை. ஆனால் மழைக் காலத்தில் அதிகமான ஈரம் இருப்பதால் மண்ணைவிட்டுப் புழுக்கள் வெளியேறி வருகின்றன. இவை தமது வளையங்களை முன்னும் பின்னும் நகர்த்தி, அந்த நெகிழும் தன்மையை வைத்து இடம்பெயர்கின்றன.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT