Published : 12 May 2018 11:45 AM
Last Updated : 12 May 2018 11:45 AM
மை
க்கோரைசா என்றால் பூஞ்சாள வேர் என்று பொருள். வேர்ப்பூஞ்சைகள் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை வெளிவேர்ப் பூஞ்சைகள் (எக்டோ மைக்கோரைசா), உள்வேர்ப் பூஞ்சைகள் (எண்டோ மைக்கோரைசா), வெளி உள் வேர்ப் பூஞ்சைகள் (எக்டோ எண்டோ மைக்கோரைசா) எனப்படும்.
வெளிவேர்ப் பூஞ்சைகள் வேர்களில் உள்ள செல் உறையுள் ஊடுருவும் திறன் இல்லாதவை. இவை பயிர்களின் வேர்களைச் சுற்றி ஒரு படலம்போல் பின்னிப்பிணைந்து வேர்களுக்கு உதவுகின்றன. இவை பாஸ்பேட்டுகளையும் அமோனியா கூட்டுப் பொருட்களையும் மண்ணிலிருந்து உறிஞ்சித் தரும் திறன் படைத்தவை.
தனக்குப் போக, பயிர்களுக்கு
எண்டோ மைக்கோரைசாவின் கூட்டணியாக வெசிகுலர் அர்பஸ்குலர் மைக்கோரைசா இருக்கும். பெருந்தோட்டப் பண்ணைகளில், எண்டோ பாஸ்போரா, சிகாஸ்போரா, குளோமஸ், சிசிரோசிஸ்டிஸ், செகிடில்லோஸ்போரா என்று பல வகைகளாக இருக்கின்றன. பல்வேறுபட்ட குணங்களுடன் குறிப்பிட்ட வாழிடங்களில் அர்பஸ்குலர் மைக்கோரைசாக்கள் வாழ்கின்றன.
அர்பஸ்குயுல் என்ற ஓர் அமைப்பைப் பயிர்களின் வேர்களுக்குள் உருவாக்குகிற காரணத்தால் இந்தப் பூஞ்சாளங்கள் அர்பஸ்குலர் மைக்கோரைசா என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் பூஞ்சாளங்கள் தங்களிடம் உள்ள ‘ஹைபே’ என்ற அமைப்பு மூலம் வேர் செல்களின் மேல் பகுதியைத் துளைக்கின்றன. பின்னர் அர்பஸ்குயுல், வெசிகுயுல் என்ற அமைப்புகளை உருவாக்குகின்றன. இதன் மூலம் வேர்களின் செல்களுக்கு உள்ளும் ஊடுருவுகின்றன.
மின் நுண்ணோக்கி கொண்டு ஆராய்ந்ததில் அர்பஸ்குயுல்களின் காலம் 4 நாட்கள் மட்டுமே என்று தெரிய வந்தது. இவை பாஸ்பரஸை எடுத்துக்கொள்பவை. இவை எடுத்த பாஸ்பரஸில் 50 சதவீதப் பங்கை மட்டுமே தமக்காகச் செரித்துக்கொள்கின்றன. எஞ்சியதைப் பயிர்களுக்கு விட்டுவிடுகின்றன.
இவ்வாறு பூஞ்சாளத்திலிருந்து பயிர்களுக்கு ஊட்டங்களை மாற்றித் தரும் அடிப்படையான பணியை இந்த அர்பஸ்குயுல்கள் செய்கின்றன. பூஞ்சாளங்கள் மாவுப் பொருளைப் பயிர்களில் இருந்து எடுத்துக்கொள்கின்றன. செல்களுக்கு இடையில் இந்தப் பரிமாற்றம் தொடர்ந்து நடக்கிறது.
தீய நுண்ணுயிர்களுக்கு எதிராக
அர்பஸ்குலர் மைக்கோரைசாக்கள் ஊட்டத்தை நேரடியாக எடுத்துத் தருபவை, எடுத்துத் தராதவை என்று இரண்டு வகைகளில் உள்ளன. அர்பஸ்குலர் மைக்கோரைசாக்கள் ஊட்டம் குறைவான மண்ணில் இருந்தும் பயிருக்குத் தேவையான ஊட்டத்தை கைமாற்றித் தருகின்றன. குறிப்பாக, பாஸ்பரஸ் குறைவான மண்ணில்கூட இவை செயலாற்றி மணிச் சத்தைச் செடிக்கு எடுத்துக் தருகின்றன. இவை வேர்களில் உள்ள தூவிகளின் அளவை 8 செ.மீ. அளவுக்கு விரித்துத் தருகின்றன. இதனால் 10 மடங்கு ஊட்டங்களைப் பயிர்களால் எடுத்துக்கொள்ள முடிகிறது.
வேர்கள் உறிஞ்சிய பாஸ்பரஸைப் பல பாஸ்பேட் குருணைகளாக மாற்றிப் பயிர்களுக்குத் திரட்டித் தருகின்றன. இவை தவிர பொட்டாசியம், கந்தகம், செம்பு, துத்தநாகம் போன்ற ஊட்டங்களையும் எடுத்துக் கொடுக்கின்றன.
மைக்கோரைசா குடியேற்றங்கள் பயிர்களில் உள்ள இயக்குநீர் அமைப்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. சைட்டோகினின், அப்சிசிக் அமிலம், கிப்பர்லின் வகைப் பொருட்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் முளைக்கணுக்களுக்கும் வேர்களுக்கும் இடையில் உயிர்ப்பொருள் உருவாக்கும் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மேலும் பல உருமாற்றத் தன்மைகளை ஏற்படுத்துகின்றன.
இவை மண்ணில் உள்ள தீமை செய்யும் நுண்ணுயிர்களைத் தாங்கி வளரும் திறனை அதிகப்படுத்துகின்றன. இவை இரண்டாம்நிலை வளர்சிதை மாற்றங்களைத் தூண்டுவதன் மூலம் பாதுகாப்புத் தன்மையை உருவாக்குகின்றன. பயறு வகைத் தாவரங்களில் வேர் முடிச்சுகளையும் நைட்ரஜனை நிலைப்படுத்தும் வேலையையும் இவை விரிவாக்குகின்றன.
வெயில் படாத நிலம்
பயிர்களின் மேற்பரப்பை நாம் அறிந்த அளவுக்கு வேர்ப்பரப்பையும் அறிந்துகொள்ள வேண்டும். பயிர்களின் தண்டுப் பகுதியும் இலைகளும் வெளிச்சத்தை நோக்கி வளரக்கூடியவை, வெப்பத்தைத் தாங்கிக்கொள்பவை. மாறாக வேர்கள், இருட்டை நோக்கி, குளிர்ச்சியை நோக்கி வளரக்கூடியவை. இயற்கையாகப் பார்த்தால் மிகப் பெரும்பாலான காடுகளில் வெயில் நிலத்தில் விழாது. அந்த அளவுக்குப் பல்வேறு அடுக்குகளிலேயும் செடி கொடிகள் வளர்ந்து பின்னிக் கிடக்கும். ஆகவே நிலம் குளிர்ச்சியாக இருந்தால் நுண்ணுயிரிகள், பூஞ்சாளங்கள், பாசிகள், மண்புழுக்கள், கரையான்கள் போன்ற பல சிற்றுயிர்கள் வாழ இயலும்.
அதே அடிப்படையில் வேளாண்மை செய்யும்போது நமது நிலங்களிலும் முடிந்த அளவுக்கு உருவாக்க வேண்டும். வேர் மண்டலம் அடர்த்தியாக உள்ள இடங்களிலேதான் பூஞ்சாளங்களும் குச்சிலங்களும் மண்புழுக்களும் பிற உயிரினங்களும் பெரும் எண்ணிக்கையில் உள்ளன. எனவே, மண் இயல்பாகக் காட்டுப் பகுதிகளிலேயே உள்ளதைப் போன்று நேரடியான வெயில்படாததாகவோ காற்று அரிப்புக்கு உள்ளாகாமலோ மழைநீர் தாக்குதலுக்கு ஆட்படாததாகவோ இருக்க வேண்டும். இதற்கு மூடாக்கு மிகப் பெரிய அளவுக்கு உதவும்.
முடிந்த அளவுக்கு நிலத்தை, காய்ந்த சருகு, இலை/தழைகள், அல்லது கொழுஞ்சி, நரிப்பயறு போன்ற பயறு வகைச் செடிகளைக் கொண்டு மூடி வைக்க வேண்டும். அப்போதுதான் ஊட்டத்தைக் கொடுக்கக்கூடிய நுண்ணுயிர்களின் செயல்பாடு மிகுந்து காணப்படும். வளமான மேல்மண் பாதுகாக்கப்படும்.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT