Published : 05 Aug 2014 01:35 PM
Last Updated : 05 Aug 2014 01:35 PM
எல்லாவற்றையுமே மறந்துவிடலாம்
ஆனால் உன் குழந்தைகளை ஒளித்து வைத்த
தேயிலைச் செடிகளின் மேல்
முகில்களும் இறங்கி மறைந்த
அந்தப் பின் மாலையில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த
கொஞ்சம் அரிசியைப் பானையிலிட்டுச்
சோறு பொங்கும் என்று
ஒளிந்தபடி காத்திருந்தபோது
பிடுங்கி எறிபட்ட பெண்ணே,
உடைந்த பானையையும்
நிலத்தில் சிதறி
உலர்ந்த சோற்றையும்
நான் எப்படி மறக்க?
- சேரன்
சில மாதங்களுக்கு முன்பு ஹிரோஷிமா சென்றிருந்தேன். எனது கற்பனையில் அழிவின் பெருநகரமாகத் தோற்றம் கொண்டிருந்த ஹிரோஷிமாவுக்கும், நேரில் பார்த்த நகருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஜப்பானின் அபரிமித வளர்ச்சி ஹிரோஷிமாவிலும் பிரதிபலித்தது. 'உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்ட நகரம்' என்ற அவலமான வரலாற்று அடையாளத்தைப் பெற்றிருக்கும் ஹிரோஷிமா, அணுகுண்டு தாண்டவமாடிய எந்தத் தடயத்தையும் இன்றைக்குச் சுமந்து கொண்டிருக்கவில்லை. ஆனால், வரலாறு கற்றுத்தந்த மிகப் பெரிய பாடத்தை எளிதாகக் கடந்துவிடவோ, மறந்துவிடவோ ஹிரோஷிமா மக்கள் தயாராக இல்லை.
உலகுக்குச் செய்தி
"வரலாற்றின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுப்பவர்கள், அந்தத் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வார்கள்" என்று தத்துவ அறிஞர் ஜார்ஜ் சான்டயானா சொன்னதை, அந்த நகரத்து மக்கள் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை, ஹிரோஷிமா நகரில் நிறுவப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்தைப் பார்த்தபோது தோன்றியது.
வரலாறு தங்களுக்கு இழைத்த அநீதிகளிலிருந்து மக்கள் கற்றுக்கொண்ட பாடமாய், உலகுக்கு அவர்கள் திரும்பச் சொல்ல விரும்பும் செய்தியாக எழுந்து நிற்கிறது ஹிரோஷிமா அருங்காட்சியகம்.
‘ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியகம்' என்று அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் அணுகுண்டு வீசப்பட்டுப் பத்து வருடங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 1955-ல் திறக்கப்பட்டது. ஹிரோஷிமா குண்டுவெடிப்பின் தடங்கள், அது குறித்த வரலாற்று பதிவுகள் இங்கே உள்ளன. சேகுவேரா, போப், அன்னை தெரசா தொடங்கி மானுடத்தை நேசித்த பல தலைவர்களும் அமைதியின் வலிமையான செய்தியைப் பரப்ப இங்கே வருகை தந்திருக்கிறார்கள்.
ஒரே ஒரு குண்டுவீச்சால் தரைமட்டமாக்கப்படுவதற்கு முன்பு எவ்வளவு வளம் நிறைந்த நகரமாக ஹிரோஷிமா இருந்தது என்பதைப் பார்க்கும்போது, மானுடத்துக்கு எதிரான மிக மோசமான கண்டுபிடிப்பு அணுகுண்டு என்பது மீண்டும் உறுதியாகிறது.
அணுகுண்டுக்கு எதிரான தரவுகளைப் பரப்ப வேண்டும் என்பதும், உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதும்தான் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டதன் நோக்கம்.
அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்தும்கூட அமைதியின் பக்கமே நிற்கும் ஜப்பான் மக்கள் மீது நாம் வைத்திருக்கும் மரியாதை உயரே உயரே மேலேறுவதை உணர முடிந்தது.
அமைதிப் பூங்கா
அருங்காட்சியகத்தை ஒட்டி செயல்படும் ஹிரோஷிமா அமைதிப் பூங்கா, அணுகுண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைதிப் பூங்காவின் ஒரு பகுதியாக இருக்கிறது அணுகுண்டு மாடம். ஹிரோஷிமா குண்டுவெடிப்பின்போது ஒட்டுமொத்தமாகத் தரைமட்டமாகாமல் தப்பித்த ஒரே கட்டிடம் அது.
போரின் குரூரத்துக்கான நிரந்தரச் சாட்சியமாக அந்தக் கட்டிடத்தை அப்படியே வைத்திருப்பது என்று முடிவு செய்திருக்கிறது ஹிரோஷிமா நகர நிர்வாகம். 1996-ல் யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட வேண்டிய உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது அணுகுண்டு மாடம். வழக்கமாகப் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடமே இப்படி அறிவிக்கப்படும். அங்கிருந்து 200 அடி தொலைவில் இருக்கிறது அருங்காட்சியகம்.
முன்பும் பின்பும்
1994-ல் விரிவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தின் கிழக்குக் கட்டிடத்தில் குண்டுவெடிப்புக்கு முன்பும் பின்பும் ஹிரோஷிமாவின் வரலாற்றை அறியலாம். முதன்மைக் கட்டிடத்தில் குண்டுவெடிப்பு பற்றிய ஒளிப்படங்களும், குண்டுவெடிப்பில் மிச்சமிருந்த பொருட்களையும் பார்க்கலாம்.
கோட்டை நகரமாக நிர்மாணிக்கப்பட்ட ஹிரோஷிமா, ஜப்பானின் பழமையான ஊர்களில் ஒன்று. தொழிலும் கல்வியும் செழித்த நகரமாக இருந்திருக்கிறது. அந்நகரின் தோற்றம் முதல் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் வரைபடங்கள், ஒளிப்படங்களாகக் கிழக்குக் கட்டிடத்தில் ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன. குண்டு வெடிப்புக்குப் பிந்தைய ஹிரோஷிமாவின் வளர்ச்சி யையும் இங்கே காணலாம்.
ஆனால், மானுடம் மீது நாம் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் ஆவணங்களைக் கொண்டிருப்பது முதன்மைக் கட்டிடம்தான்.
உறைந்துபோன நிஜம்
தட்டான்பூச்சியை பிடித்துக்கொண்டிருந்த ஒரு பள்ளி சிறுவன், இறந்தாலும் ஒன்றாகவே இறக்க வேண்டும் என்று குழந்தைகளைப் பிரியாது கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் தாய், செடிக்கு நீரூற்றும் தாத்தாவைப் பார்த்துக்கொண்டே தோட்டத்தில் விளையாடிய பேரக் குழந்தை, மிட்டாய் வாங்க அம்மா காசு தந்த உற்சாகத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய ஒரு குழந்தை என எண்ணற்ற உணர்வுகளையும் கனவுகளையும் சுமந்து கொண்டிருந்தவர்களின் மீது அவல முடிவை எழுதிச் சென்றிருக்கிறது அந்த அணுகுண்டு.
லட்சக்கணக்கில் மக்களைக் காவு வாங்கிய அந்த அணுகுண்டு ஏற்படுத்திய அழிவின் சாட்சியங்களாய் சுமார் 20,000 பொருட்கள் இங்கே இருக்கின்றன. போரின் கருணையின்மையை, அணு குண்டின் கோர முகத்தைக் கையில் ஏந்திக்கொண்டிருப்பது அந்தப் பொருட்கள்தான்.
இப்படி அருங்காட்சியகத்தில் இருக்கும் எண்ணற்ற பொருட்கள், இப்போதும் உலகின் ஏதோவொரு மூலையில் நடந்துகொண்டிருக்கும் போரின் அபத்தங்களையும் ஆபத்துகளையும் ஒருசேரச் சொல்கின்றன. ஆனால், எப்போதும் என்னால் கடந்துவிட முடியாத வலியைத் தருவது 13 வயது ஓரிமேன், இறக்கும் தறுவாயிலும் வயிற்றோடு அணைத்தபடி வைத்திருந்த மதிய உணவைத்தான். அணுகுண்டின் வெப்பத்தில் உலர்ந்து கருகிய உண்ணப்படாத அந்த உணவை எப்படி மறக்க முடியும்?
இந்தியாவுக்கு 3 முறை
அணுகுண்டு பாதிப்பை இன்றுவரை உணர்ந்துவரும் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மேயர்கள், உலகத்தில் எந்த நாடு அணுகுண்டு பரிசோதனை நடத்தினாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட நாட்டுத் தலைவர்களுக்குக் கடிதம் அனுப்புகிறார்கள். "இந்தப் பரிசோதனையே உங்கள் கடைசி பரிசோதனையாக இருக்கட்டும். அணுகுண்டு ஏற்படுத்தும் அழிவைப் பார்ப்பதற்கு எங்கள் நகரங்களுக்கு வாருங்கள்" என்று சொல்கிறார்கள். இந்தியாவுக்கு இதுவரை 3 கடிதங்கள் இப்படி அனுப்பப்பட்டிருக்கின்றன.
கோட்டை நகரமாக நிர்மாணிக்கப்பட்ட ஹிரோஷிமா, ஜப்பானின் பழமையான ஊர்களில் ஒன்று. தொழிலும் கல்வியும் செழித்த நகரமாக இருந்திருக்கிறது. அந்நகரின் தோற்றம் முதல் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் வரைபடங்கள், ஒளிப்படங்களாகக் கிழக்குக் கட்டிடத்தில் ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன. குண்டு வெடிப்புக்குப் பிந்தைய ஹிரோஷிமாவின் வளர்ச்சி யையும் இங்கே காணலாம்.
நடந்தது என்ன?
ஹிரோஷிமா அணுவெடிப்பு
நாள்: ஆகஸ்ட் 6, 1945
குண்டின் பெயர்: லிட்டில் பாய்
வெடிபொருள்: யுரேனியம்
பாதிக்கப்பட்ட பரப்பு:
10 சதுர கி.மீ. பரப்பில் இருந்த அனைத்து உயிர்களையும் துடைத்து அழித்தது. மக்கள், புல், பூண்டு உட்பட அனைத்தும் பஸ்பமாகின. நகரத்தின் 69 சதவீதக் கட்டிடங்கள் தரைமட்டமாகின.
பலியானவர்கள் எண்ணிக்கை:
1.45 லட்சம் பேர் (உடனடியாக 90,000 பேர்).
நாகசாகி அணுவெடிப்பு
நாள்: ஆகஸ்ட் 9, 1945
குண்டின் பெயர்:
ஃபேட் மேன்
வெடிபொருள்: புளூடோனியம்
பாதிக்கப்பட்ட பரப்பு:
ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருந்த அனைத்தும்.
பலியானவர்கள் எண்ணிக்கை:
75,000 பேர் (40,000 பேர் உடனடியாக).
இரண்டு அணுகுண்டு வீச்சுகளால் உடனடியாகவும் காலப் போக்கிலும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,50,000 பேர்
- கட்டுரையாளர், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: sundar@hnsonline.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT