Published : 07 Apr 2018 10:53 AM
Last Updated : 07 Apr 2018 10:53 AM
நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாவைப் பயற்றம் பயிர்களுக்கான ரைசோபியம், பயற்றம் குடும்பத்தைச் சாராத பயிர்களுக்கான அசோஸ்பைரில்லம், அசட்டோபாக்டர், அசிட்டோபாக்டர், கரும்புப் பயிருக்கான அசிட்டோபாக்டர் டைஅசட்ரோஃபிகஸ் என்றும், கந்தகத்தைப் பிரிப்பதற்கான அசிட்டோபாக்டர் பாஸ்டூரியனஸ் என்றும் இரண்டு வகையில் பிரிக்கலாம்.
செடிகளுக்கும் நுண்ணுயிர்களுக்கும் பாலம்
கிரேக்க மொழியில் ‘ரைசோ’ என்றால் வேர் என்றும் ‘பியம்’ என்றால் உயிர் என்றும் பொருள். எனவே, தமிழில் இதை வேருயிரம் (வேர் + உயிர் + அம்) என்று கூறுகிறோம். இவை பல வகையாக உள்ளன. வெவ்வேறு வடிவங்களில் உள்ளன. பயறு வகைத் தாவரங்களில் வேர் முடிச்சுகளில் இவை காணப்படுகின்றன.
செடிகள், நுண்ணுயிர்கள் ஆகியவற்றுக்கு இடையில் நல்ல உறவு நிலையை இவை நீட்டிக்கின்றன. வேருயிர் நுண்ணுயிர்கள், லிபோ ஓலிகோ சாக்கரைடுகளை உருவாக்குகின்றன. அவை வேர் முடிச்சுகளை உருவாக்கப் பயன்படுகின்றன. இவை 40 கிலோ நைட்ரஜன்/ஹெக்டேர்/ஆண்டு என்ற அளவு முதல் 300கிலோ நைட்ரஜன்/ஹெக்டேர்/ஆண்டு என்ற அளவுவரை நிலைப்படுத்துகின்றன.
தேயிலை, காபி பயிர்களுக்கு…
இவை ‘அசட்டோ பாக்டிரினேசியே’ என்ற குடும்பத்தைச் சேர்ந்தவை. கிரேக்க மொழியில் ‘அசட்டோ’ என்றால் தழை ஊட்டம் என்றும் ‘பாக்டோ’ என்றால் குச்சி என்றும் பொருள். இவை குச்சி, நீள்வட்ட வடிவத்தில் இருப்பவை. காற்றுள்ள சூழலில் வாழ்பவை. தழை ஊட்டத்தைத் தனித்து நிலைப்படுத்தி தனக்கும் பயன்படுத்திக்கொண்டு, பயிர்களுக்கும் கொடுக்கக்கூடியவை. பொருத்தமான ஒரு கிராம் மாவுப் பொருளுக்கு 10 மில்லி கிராம் நைட்ரஜனைக் கொடுக்கக்கூடியது.
இவை மண், நீர், வேர் மண்டலம் ஆகியவற்றில் உயிர் வாழ்கின்றன. அசட்டோபாக்டர் தவிர ரோடோர்ஸ்பைரில்லம், நுயுமோனியே, ரோடோசூடோமோனஸ் குளோரோபியம், டிப்ளோகாக்கஸ் நுயுமோனியே, அசட்டோபாக்டர் ஏரோசீனஸ், மைக்ரோகாக்கஸ் சல்ஃபியுரன்ஸ், பெய்சிரிங்கியே, டிரக்சியா, அஃசோமோனஸ் முதலியனவும் நைட்ரஜனை நிலைநிறுத்துகின்றன.
குறிப்பாக, அமிலக்காரத்தன்மை 4.8 முதல் 8.5 என்ற அளவில் இருக்கும்போது, இவை சிறப்பாகச் செயல்படுகின்றன. தேயிலை, காப்பித் தோட்டப் பயிர்களுக்கு இவை பெரிதும் உதவுகின்றன. ‘மாலிப்டினம்’ என்ற தனிமம் இருக்கும்போது இவை அதிக அளவு நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன.
தென்னக நுண்ணுயிர்கள்
தென்னிந்திய மண்ணில் அசட்டோபாக்டர் குரூகோகம் என்ற நுண்ணுயிர் பரவலாகக் காணப்படுகிறது. ஆனால், அவற்றின் எண்ணிக்கை போதிய அளவு இல்லை. ஒரு கிராம் மண்ணில் 100 முதல் 1000 செல்கள் என்ற அளவில் காணப்படுகின்றன. இவை 40 செல்சியஸ் அளவுவரை வெப்பத்தைத் தாங்கும் திறன் பெற்றவை. அது மட்டுமல்லாது 50 செல்சியஸ் வரையிலும் தாக்குப்பிடிக்கக் கூடியது இது. அசட்டோபாக்டர் வினிலேண்டி, அசட்டோபாக்டர் அர்மீனிகஸ் போன்றவையும் தென்னக மண்ணில் காணப்படும் நுண்ணுயிர்களாகும். இவை குறிப்பான சில இடங்களில், அதாவது அமிலக்காரத்தன்மை 6.5 முதல் 9.5 என்ற அளவில் உள்ள இடங்களில் மட்டும் காணப்படுகின்றன.
இவை தவிர அசோமோனஸ் மேக்ரோசைடோசீனஸ் என்ற நுண்ணுயிரியும் தென்னக மண்ணில் காணப்படுகிறது. அசட்டோபாக்டர், உயிரியியல் கட்டுப்பாட்டுக்காகவும், வைட்டமின்கள், இயக்குநீர்களான தையமின், ரிபோஃபிளேவின், பைரிடாக்சின், சயானோ கோபாலமைன், டினகோடினிக், பாண்டோதெனிக் அமிலம், இண்டோல் அசிடிக் அமிலம், ஜிப்பர்லின், ஆக்சின் எதிர்ப்பூஞ்சனச் செயல்பாட்டுக்கும் பிற வளர்ச்சி ஊக்கிகளின் உருவாக்கத்துக்கும் இது பெயர் பெற்றது.
(அடுத்த வாரம்: தமிழர் பிரித்தெடுத்த நுண்ணுயிர்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT