Published : 13 Apr 2024 06:03 AM
Last Updated : 13 Apr 2024 06:03 AM

காலநிலை மாற்றம் ஏன் தேர்தல் பிரச்சினை ஆகவில்லை?

2023 சென்னை மிக்ஜாம் புயல் வெள்ளமும் தென் மாவட்ட வெள்ளமும், ஒருவேளை நடப்பு பிப்-மார்ச் மாதங்களில் நிகழ்ந்திருந்தால் நிச்சயம் அவை நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களிலும் வாக்குறுதிகளிலும் முதன்மை இடத்தைப் பிடித்திருக்கும். ஆனால், இப்போது மத்திய அரசு போதிய வெள்ள நிவாரண நிதியை வழங்கவில்லை என்பது மட்டுமே பிரச்சினையாகப் பேசப்படுகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் வெள்ளத்தைத் தடுக்கவோ, கையாளவோ என்ன திட்டம் என்பது குறித்த வாக்குறுதிகளோ, விவாதமோ இல்லை.

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்கத் தேர்வாகியுள்ள பரந்தூரை ஒட்டியுள்ள கிராமங்கள், எண்ணூர் போன்ற சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்பட்ட, பாதிக்கபட இருக்கும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாகத் தேர்தல் புறக்கணிப்பை அறிவிக்கிறார்கள். அதே நேரம் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்வைத்து அரசியல் கட்சிகளுக்குப் போதுமான நெருக்கடியையோ அழுத்தத்தையோ தமிழ்நாட்டில் இயங்கிவரும் சுற்றுச்சூழல் அமைப்புகள் கொடுப்பதில்லை.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சுற்றுச்சூழல்/காலநிலை ரீதியில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாட்டில் நிலவும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஒரு பக்கம் என்றால், நீர் வறட்சியால் பெங்களூரு பாதிக்கப்பட்டுள்ளது; இமயமலை அடிவார நகரங்கள் பலவற்றில் இயல்பான பனிப்பொழிவு குறைந்து வெப்பநிலை அதிகரித்துள்ளது; தலைநகர் புதுடெல்லி ஆண்டுதோறும் காற்று மாசுபாட்டுப் பிரச்சினையால் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இந்தக் கோடைக்காலம் மோசமான வெப்ப அலைகளால் பாதிக்கப்பட இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கிடையில்தான் ஜனநாயக் திருவிழா என அடையாளப்படுத்தப்படும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. உயிருக்கே ஆபத்தாக முடிய சாத்தியமுள்ள வெப்ப அலையின் விளைவுகள் எப்படி இருக்கும் என வாக்காளர்கள் அறிந்திருந்தாலும்கூட, நம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தேர்தலில் காலநிலை மாற்றம் ஒரு பிரச்சினையாக இன்னும் அடையாளம் பெறவில்லை.

நிலைமையின் தீவிரம்: கடந்த 173 ஆண்டு வானிலை வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 பதிவாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தொழில் புரட்சி கால சராசரி வெப்பநிலையைவிடக் கூடுதலாக 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் மட்டுமே உயரலாம் என்கிற எல்லையை உலகம் கிட்டத்தட்டத் தொட்டுவிட்டது. இனிமேல் காலநிலை மாற்றம் காரணமாக நிகழும் தீவிர வானிலை நிகழ்வுகள் கணிக்க முடியாதவையாகவும் கட்டுப்படுத்த முடியாதவையாகவும் ஆகிவிடக்கூடும்.

வெப்ப அலைகள், கனமழை, வெப்ப மண்டலப் புயல்கள் போன்ற அனைத்துமே காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்டவை. இவை ஏற்கெனவே நம்மை பாதிக்கத் தொடங்கிவிட்டன, நம் வாழ்க்கையைச் சீர்குலைக்கத் தொடங்கிவிட்டன. உலகில் அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள இந்தியாதான், தீவிர வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட சாத்தியமுள்ள அதிக மக்களையும் கொண்டுள்ளது.

இப்படி இந்தியாவில் பாதிக்கப்படவுள்ள மக்களின் எண்ணிக்கை 2010இலிருந்து அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டின் பெரும்பாலான நாள்களில் தீவிர வானிலை நிகழ்வு ஏதாவது ஒன்றால், இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதி பாதிக்கப்பட்டுவந்ததும் குறிப்பிடத்தக்கது.

முதலாவது மேற்கண்ட பிரச்சினைகளைத் தனித்தனி நிகழ்வுகளாகவும் தொடர்பற்றவை யாகவும் கருதுகிறோம். இரண்டாவது, இவற்றைக் கையாளும் பொறுப்பை வகிக்கும் நமது ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கவோ, இவற்றைச் சார்ந்து நமக்கு உரிய உரிமைகளைக்கேட்டுப் பெறவோ தயங்குகிறோம்.

உணவு, நீர், உடல்நலம், ஆற்றல்/எரிசக்தி போன்றவை நமது அடிப்படைத் தேவைகள். காலநிலை மாற்றம் தீவிரமடையும்போது இந்த அம்சங்கள்தான் மிக மோசமாகப் பாதிக்கப்படும். தனிநபர்களாக நமது உடல்நலனுக்கும் வாழ்க்கைக்கும் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பிரச்சினைகள் ஒரு பக்கம் என்றால், உணவைத் தரும் வேளாண்மைக்கும் அது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

எனவே, காலநிலை மாற்றத்துக்கும் நடைமுறையில் நாம் சந்தித்துவரும் பல்வேறு பாதிப்புகளுக்கும் இடையிலான தொடர்புகளைத் தவறவிட்டுவிடக் கூடாது.

வாக்குறுதிகள் நிஜமாகின்றனவா? - நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் அறிக்கைகளில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்த வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகளில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போதுமான கவனத்தைப் பெறவில்லை. விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை போன்றவை தேர்தல் வாக்குறுதிகளாக இடம்பெற்றாலும், அவை நடைமுறைக்கு வருவது கனவாகவே இருக்கிறது.

காலநிலை மாற்றம் சார்ந்து அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளும் பொத்தாம் பொதுவானவையாகவே இருக்கின்றன. பேரழிவு நிவாரணம், மட்டுப்படுத்துதல் நடவடிக்கைகளில் அரசுகள் கவனம் செலுத்துகின்றனவே ஒழிய, நீண்ட கால நோக்கில் உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைப்பது, சொத்து இழப்பு விகிதத்தை மட்டுப்படுத்துவதைக் குறித்து சிந்திப்பதோ, செயல்படுவதோ இல்லை.

அதேபோல், காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாடுகளில் மத்திய அரசு பல்வேறு வாக்குறுதிகளை உற்சாகமாக அறிவிக்கிறது. ஆனால், அந்த வாக்குறுதிகள் நடைமுறையில் செயல்வடிவம் பெறுவதில்லை. 1999-2019 வரையிலான 20 ஆண்டு காலத்தில் நாடாளுமன்றத்தில் காலநிலை மாற்றம் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகளின் எண்ணிக்கை வெறும் 0.3 சதவீதம். நமது ஆட்சியாளர்கள் காலநிலை மாற்றத்தை எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

அதே நேரம் காலநிலை மாற்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உரிய கவனம் கொடுப்பதையும் பார்க்க முடிகிறது. காலநிலை மாற்றத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டியது ஒவ்வோர் இந்தியரின் அடிப்படை உரிமை மற்றும் மனித உரிமை என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அங்கீகரித்திருக்கிறது. சமமாக நடத்தப்படும் உரிமை (கூறு 14), வாழ்க்கைக்கான உரிமை (கூறு 21) ஆகியவற்றின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 6ஆம் தேதி இதைத் தெரிவித்திருக்கிறது.

செல்ல வேண்டிய திசை: காலநிலை மாற்றம் - சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மக்களிடையேயும் அரசியல் கட்சியினரிடையேயும் போதுமான கவனத்தைப் பெறாமல் இருப்பதற்கு முதல் காரணம், இந்தப் பிரச்சினைகளின் காரணமாக மக்களின் அடிப்படைத் தேவைகள், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஒட்டுமொத்த சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளை உரிய வகையில் தொடர்புபடுத்திப் புரிந்துகொள்ளாமல் இருப்பதால்தான்.

2018 ஸ்வீடன் நாடாளுமன்றத் தேர்தலின் போது 15 வயதே ஆன பள்ளி மாணவி கிரெட்டா துன்பர்க் காலநிலை மாற்றத்தை முன்வைத்துப் போராடியபோது அவருக்கு ஆதரவாகத் திரண்டவர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், இன்றைக்கு ஸ்வீடன், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மட்டுமல்லாமல் ஐரோப்பிய யூனியனிலும் காலநிலை மாற்றப் பிரச்சினை தேர்தல்களில் எதிரொலித்துவருகிறது. 2022இல் பிரேசில் அதிபர் லூலா டிசில்வா அமேசான் காடழிப்பை நிறுத்துவதாக வாக்குறுதி அளித்து வெற்றியும் பெற்றார்.

இந்தப் பின்னணியில் இரண்டு விஷயங்களில் நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. தேர்தல்கள் நமது உடனடி எதிர்காலத்தைக் கட்டமைக்கக்கூடியவை. தேர்தல்களில் பேசுபொருளாகும் விஷயங்களின் அடிப்படையிலேயே அரசுகள் ஓரளவுக்காவது செயல்படுகின்றன.

எனவே, தேர்தல் விவாதங்களில் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் முதன்மை இடத்தைப் பிடிக்க வேண்டும். காரணம், அவையே நமது அடுத்த 5 ஆண்டுகால வாழ்க்கைத்தரத்தை தீர்மானிக்கப் போகிறவை.

மற்றொன்று நம் வாழ்க்கையில் காலநிலை மாற்றம் ஏற்படுத்திவரும் மாற்றங்கள், பிரச்சினைகள் குறித்து அனைத்து வயதினரிடமும் அடிப்படைப் புரிதலை அவசியம் ஏற்படுத்த வேண்டும். அதுவே அரசு, ஆட்சியாளர்களைச் செயல்படத் தூண்டும், சமூக அழுத்தத்தைப் படிப்படியாக உருவாக்கும்.

- valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x