Published : 28 Apr 2018 11:26 AM
Last Updated : 28 Apr 2018 11:26 AM
எ
ங்கள் வீட்டுக்குப் பின்புறத்திலுள்ள முருங்கை மரத்தில், ஒரு கழுகு வந்து அமர்ந்ததை ஜன்னல் வழியாகப் பார்த்தவுடன், அசையாமல் உறைந்து நின்று அதைக் கவனிக்க ஆரம்பித்தேன்.
அந்த மரத்தின் வெண்பூக்களால் ஈர்க்கப்பட்டுப் பல சிறு புள்ளினங்கள் வருவது வழக்கம். ஆனால், அதுவரை கழுகை அங்கே நான் பார்த்ததேயில்லை. அது ஒரு கிளையிலிருந்து அருகிலுள்ள செம்மயில்கொன்றை (Gulmohar) தாவரத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தது. அங்கிருந்த தேன் கூடுதான் அதன் கவனத்தை ஈர்ந்திருக்கிறது என்பது புரிந்ததும் கழுகின் அடையாளமும் துலங்கியது. அது தேன்பருந்து (Crested honey buzzard)!
முட்டைப் புழு வேட்டை
நாம் ஊருக்குள் அடிக்கடி காணும் கருங்கழுகு அளவுதான் இதுவும் இருக்கும். ஆனால், மற்ற கழுகுகளைவிட நீளமான கழுத்தும் புறா போன்ற சிறிய தலையும் இதன் தனி அடையாளம். அருகில் இருந்ததால் அதன் கண்மணியைச் சுற்றியுள்ள மஞ்சள் வட்டத்தைக்கூட என்னால் தெளிவாகக் காண முடிந்தது. ஆசிய நாடுகளில் காணப்படும் பல வகை தேன்பருந்துகளில் இதுவும் ஒன்று.
இந்த வகைப் பருந்து தேன் கூடுகளைத் தேடிக் கண்டுபிடித்து, அதைப் பிராய்ந்து, அதனுள் உள்ள முட்டைப் புழுக்களை இரையாகக்கொள்ளும். எங்கே தேன் கூடு இருக்கிறது என்பதை இப்பறவை எப்படிக் கண்டுகொள்கிறது என்பது புதிராக உள்ளது. எங்கள் தோட்டத்திலிருந்த தேன் கூடும் மரக்கிளைகளின் நடுவே, வெளியில் தெரியாதபடி அமைக்கப்பட்டிருந்தது. தன் அதிகூர்மையான பார்வையால் இப்பருந்தால் தேனீக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடிகிறது போலும். பருந்தின் கவனம் தேன் கூட்டிலேயே இருந்ததால், நான் மெதுவாகப் பக்கவாட்டில் நகர்ந்து கேமராவை எடுத்துச் சில படங்களை எடுக்க முடிந்தது.
அற்றுப்போகும் இரைகொல்லிகள்
நம் நாட்டில் உள்ள பல வகையான வாழிடங்கள் பல இரைகொல்லிப் பறவைகளை ஈர்க்கின்றன. மேற்கத்திய நாடுகளிலிருந்து பூனைப்பருந்து போன்ற கழுகுகள் பல பகுதிகளுக்கு வலசையும் வருகின்றன. அவற்றின் உடல் உறுப்புகளின் தகவமைப்பு இரையைப் பிடிக்க, கொல்லத் தோதாக அமைந்திருக்கின்றன.
விராலடிப்பான் நீரின் மேலே பறந்து, கால்களை மட்டும் நீருக்குள் விட்டுத் தன் கூரிய நகங்களால் மீனைக் கவ்விப் பிடித்தெடுக்கும். முசலடிக் கழுகு புல்வெளி மீது தாழ்வாகப் பறந்து முயல், உடும்பு போன்ற சிற்றுயிர்களைப் பிடித்து உண்ணும். பாம்புக் கழுகு, சர்ப்பங்களைப் பிடித்து உண்கிறது. இம்மாதிரி இரையிலும் இரை தேடும் முறையிலும் தனித்துவம்கொண்ட உயிரினங்கள் அற்றுப்போகும் ஆபத்து அதிகம் கொண்டவை.
வரகுக்கோழி ஏன் மறைந்தது?
மான், குரங்கு போன்ற உயிரினங்களைப் பிடித்துண்ணும், உலகிலேயே உருவில் பெரிய இரைகொல்லி பறவையான பிலிப்பைன்ஸ் கழுகு (இதற்கு இன்னொரு பெயர் குரங்கைத் தின்னும் கழுகு) இன்று அழிவின் விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. அந்நாட்டின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், இது அற்றுப்போய்விடும் என்று பறவையியலாளர்கள் அஞ்சுகிறார்கள். இதற்கான முக்கியக் காரணம் பிலிப்பைன்ஸ் நாட்டின் காடுகள் அழிக்கப்பட்டதுதான்.
புல்வெளிகள் சீரழிக்கப்பட்டதால் தமிழ்நாட்டிலிருந்த வரகுக்கோழி (Lesser Florican) மறைந்துவிட்டது. மாசற்ற நீர்நிலைகள் இல்லாவிட்டால் மீன் கொத்திகளேது? ஆனால், எதையும் தின்று வாழும் காகம், மைனா போன்ற பறவைகள் மட்டும் நகரங்களில் பல்கிப் பெருகுவதைப் பாருங்கள்.
இந்தத் தேன்பருந்து, எங்கள் வீட்டு தோட்டத்தின் பின் வராந்தாவில் அமர்ந்தபடி நான் பார்த்துப் பதிவு செய்த 43-வது பறவை. இங்கிருந்து வானில் காணும் பட்சிகளை இந்தப் பட்டியலில் நான் சேர்ப்பதில்லை.
(மகாமாரி - மே 12 இதழில்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT