Last Updated : 24 Feb, 2024 06:00 AM

 

Published : 24 Feb 2024 06:00 AM
Last Updated : 24 Feb 2024 06:00 AM

இயற்கையின் பேழையிலிருந்து! 24: அறிவொளி பரப்பும் அருங்காட்சியகங்கள்

பரங்கிமலையிலிருந்து சேகரிக்கப்பட்ட இந்தியப் பாறுக் கழுகு

மூன்று கேள்விகள். நீங்கள் கடைசியாக எப்போது அருங்காட்சியகத்திற்குச் சென்றீர்கள்? நீங்கள் கடைசியாக எப்போது மாலுக்குச் சென்றீர்கள்? உங்கள் குழந்தைகளை ஒரு முறையாவது அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறீர்களா? இப்படிக் கேட்டுக்கொண்டே போகலாம்.

அங்கு ஏன் போகவேண்டும் என்பதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். நாம் செலவுசெய்து விரும்பிய பொருள்களை வாங்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியைக் காட்டிலும், நமக்கு விருப்பமான துறையில் அறிவை மேம்படுத்திக்கொள்ளும் செயல்களில் ஈடுபவது மனநிறைவைத் தரும். அது நீண்டகாலம் நிலைத்து நிற்கும். அறிவொளியூட்டும் அருங்காட்சியகங்கள் இதற்குத் தகுந்த இடங்கள் என்பதில் இருவேறு கருத்தில்லை.

அருங்காட்சியகங்களில் பல வகைகள் உண்டு. தொல்லியல் (கீழடி), கலை (கலைக்கூடம், தஞ்சாவூர்), வனவியல் (Gass Forest Museum-காஸ் வனவியல் அருங்காட்சியகம், கோவை), வாழ்க்கை வரலாறு (காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை), அறிவியல்-தொழில்நுட்பம் (பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை), போக்குவரத்து (ரயில் அருங்காட்சியகம், திருச்சி), இயற்கை வரலாறு (சென்னை அருங்காட்சியகம்), மாற்றுத் திறனாளி களுக்கான (அனைத்தும் சாத்தியம் அருங்காட்சியகம், சென்னை) எனப் பல வகையான துறை சார்ந்த அருங் காட்சியகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

பொதுவாக அரசு அருங்காட்சி யகங்கள் தனிப்பட்ட துறைகளுக்கென்று மட்டும் இல்லாமல் பல துறைகளைச் சார்ந்த சேகரிப்புகளைக் கொண்ட பிரிவுகளையும் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் வரலாறு,தொல்லியல், மானுடவியல், நாணயவியல், நிலவியல், தாவரவியல், விலங்கியல் எனப் பல துறைகளுக்கும் தனித்தனியே பிரிவுகள் இருக்கும்.

இவற்றில் ஒரு பிரிவில் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சேகரிப்புகளைப் பார்ப்பதற்கே பல மணி நேரம் ஆகும். ஆகவே, இது போன்ற அருங்காட்சியகங்களை ஒரு நாளில் மட்டும் சுற்றிப் பார்த்துவிட முடியாது. மேலும் நமக்கு விருப்பமான துறையின் பிரிவுகளைக்கூட பல முறை சென்று பார்ப்பதும் அவசியம்.

அரிய தகவல் களஞ்சியம்: நான் ஒவ்வொரு முறை அருங்காட்சி யகங்களுக்குச் செல்லும்போதும் அதிக நேரம் செலவிடுவது எனக்குப் பிடித்தமான பறவைகள் பாடம் செய்து வைக்கப்பட்டிருக்கும் பிரிவுகளில்தான். இறந்து, உருக்குலைந்து, நிறம் வெளிறி, கண்ணாடிப் பெட்டியின் உள்ளே பாதி வெளிச்சத்தில் உள்ள பறவையின் பாடம் செய்யப்பட்ட உடலைப் பார்ப்பது எப்படி மகிழ்ச்சியைத் தரும்? ஒளிப்படங்கள் இல்லாத காலத்தில் பறவைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காகச்சேகரிக்கப்பட்டு பாடம்செய்து வைக்கப்பட்ட பறவைகளில் இருந்து பல விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.

முதலாவதாக அவற்றின் வாழிடப் பரவல் எங்கெல்லாம் இருந்திருக்கிறது என்பதை அறியலாம். எடுத்துக்காட்டாக, சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள பாடம் செய்யப்பட ஓர் இந்தியப் பாறுக் கழுகு பரங்கிமலையிலிருந்தும் மஞ்சள்முகப் பாறு ஒன்று கோடம்பாக்கத்திலிருந்தும் சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்த வகைப் பறவைகள் இப்போது அழிவின் விளிம்பில் உள்ளன. ஆனால், இவை ஒரு காலத்தில் பரவலாக இருந்திருக்கின்றன என்பதற்கான ஆதாரம், பாடம்செய்து வைக்கப் பட்டுள்ள பறவைகளே. இது போன்ற வரலாற்றுப் பதிவுகளை இளம் தலைமுறையினருக்கு ஆதாரத்துடன் விளக்க அருங்காட்சியகம் ஒரு சிறந்த இடம்.

பறவைகளின் வட்டாரப் பெயர் களையும் இது போன்ற சேகரிப்பில் இருந்து அறியமுடிகிறது. Glossy ibis எனும் அரிவாள்மூக்கன் வகைப் பறவைக்கு ‘கங்கணம்’ எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் இப்பெயர் வழக்கில் உள்ளது என்பது தெரியவில்லை. இப்படி நமக்குத் தெரியாத விவரங்களைத் தேடிச்செல்லும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியவை அருங்காட்சியகங்கள்.

ஒரு சில கருத்துகளைப்பாடநூல்களில் படித்துத் தெரிந்துகொள்வதைவிட, நேரில் பார்த்துத் தெரிந்துகொள்வது நம் மனதில் எளிதில் பதிந்துவிடும். எடுத்துக்காட்டாக, மேற்கு மலைத் தொடர்ப் பகுதிகளில் தென்படும் பெரிய இருவாச்சிப் (Great Hornbill) பறவையை நேரில் கண்டிருந்தாலும், அருகில் பார்க்கும் வாய்ப்பு எளிதில் கிடைக்காது.

மேலும், உருவ அளவு, இறக்கையை விரித்தால் எவ்வளவு நீளம் இருக்கும் என்பது போன்ற பரிமாணங்களைப் பாடம்செய்து வைத்துள்ள பறவைகளைப் பார்த்து அறிந்துகொள்ள முடியும். அது போலவே பறவைகள், பாலூட்டிகள் எலும்புக்கூட்டைப் ஒப்பிட்டு பார்க்கும்போது அவற்றின் உடற்கூறு அமைப்பைப் புரிந்துகொள்ள முடியும்.

சென்னை அருங்காட்சியகத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள துறைசார்ந்த பல நூல்கள், கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் உள்ள காட்டுயிர்கள் குறித்து அதன்முன்னாள் இயக்குநரான எஸ்.தாமஸ்சத்தியமூர்த்தி பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவையாவும் இணையத்தில் அனைவரும் படிக்கும் வகையில் எளிதில் கிடைக்கின்றன.

மதராசிலிருந்து பிடிக்கப்பட்டு பாடம் செய்யப்பட்ட பாறுக்
கழுகினை நோக்கும் குழந்தைகள்

அருங்காட்சியகங்களின் பரிதாப நிலை: சரி, இப்படி அறிவை வளர்க்கும் ஒரு சிறந்த இடமான அருங்காட்சியகங்கள் நல்ல நிலையில்தான் உள்ளனவா?தமிழ்நாட்டில் உள்ள அருங்காட்சி யகங்களில் இயற்கை வரலாற்றுப் பிரிவுகளைப் பல வகைகளில் மேம்படுத்தலாம்.

எந்த ஓர் அருங்காட்சியகத்திற்கும் நாம் சென்று பார்த்தால் முதலில் கவனிக்கக்கூடியது, பாடம்செய்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள உயிரின மாதிரிகள் யாவும் அரதப்பழசாக இருப்பதே. சில மாதிரிகள் சிதிலமடைந் திருப்பத்தையும் காணலாம். இவற்றிற்குப் பதிலாகப் புதிய உயிரின மாதிரிகளைத் தயார்செய்து வைத்தால் என்ன?

உயிரினங்களைப் பாடம் செய்தல் (Taxidermy) அழிந்து வரும் கலை. இதற்கான பயிற்சிகளை அரசு அருங்காட்சியகங்கள் அவ்வப்போது நடத்தினாலும், எல்லா உயிரினத்தையும் எளிதில் பாடம் செய்துவிட முடியாது. இந்தியக் காட்டுயிர் சட்டம் 1972இன்படி எந்த ஓர் உயிரினத்தையும் கொல்வது குற்றம்.

அது போலவே இறந்த உயிரினங்களையும் வனத்துறையின் முன்னிலையில் புதைப்பது அல்லது எரிப்பதுதான் இன்றைய வழக்கம். குறிப்பாக, வனச்சட்டப் பிரிவு 1 இல் (Schedule 1) இருந்தால் (எ.கா.: புலி, யானை, மயில் முதலான) அவற்றை பிரேதப் பரிசோதனை செய்த பின் புதைக்கப்படும். ஆகவே, தற்போது உள்ள சூழலில் எல்லாக் காட்டுயிர்களையும் பாடம்செய்து வைப்பது சிக்கலான காரியம்.

உயிர்க்காட்சியகங்களில் இறந்து போன உயிரினங்களை (அவை எந்த நோயும் தாக்காமல் இறந்து போயிருக்கும் பட்சத்தில்) பாடம் செய்து அருங்காட்சியகத்திற்கு அனுப்பலாம். ஆரம்ப காலத்தில் இப்படித்தான் நடந்துகொண்டிருந்தது என்பதை அருங்காட்சியகக் குறிப்புகளில் காண முடிகிறது. ஆனால், அவ்வேளையில், அருங்காட்சியகமும், உயிர்க்காட்சிச் சாலையும் ஒரே துறையின் கீழ் இருந்தன.

இப்போது, வனத்துறை அனுமதித்தால் மட்டுமே அங்கு இறக்கும் உயிரினங்களைப் பாடம் செய்து அருங்காட்சியகத்திற்குக் கொண்டுவர முடியும். இரண்டு துறைகளையும் சேர்ந்த அதிகாரிகள், உரிய வழியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளும் பட்சத்தில் இது சாத்தியமே. ஆனால், ஆர்வமுள்ள அதிகாரிகள் இதற்கு ஒத்துழைப்பு தந்து, இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவேண்டும்.

செய்ய வேண்டிய மாற்றங்கள்: மேற்கத்திய நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களைக் காண வருவோர்க்கு அங்குள்ள காட்சிய மைப்புகளைப் பற்றிய விவரங்களை விளக்குவதற்கென்றே ஒரு வழிகாட்டி இருப்பார். அது போலவே இங்கும் ஆர்வமுள்ள பள்ளி / கல்லூரி மாணவர்களுக்குத் தகுந்த பயிற்சி அளித்து தன்னார்வலராகவோ தற்காலிக ஊழியர்களாகவோ பணியில் அமர்த்தலாம்.

பெரும்பாலான அருங்காட்சி யகங்களில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் உயிரினங்களின் தகவல்பலகைகளில் பழைய அறிவியல் பெயர்களையும், தவறான தமிழ்ப்பெயர்களையும் இன்றும் காண முடிகிறது. காட்டுயிர் ஆராய்ச்சியில் ஈடுபடும் துறைசார் வல்லுநர்களின் உதவியுடன், காட்சிப் பெட்டிகளில் உள்ள தகவல்களையும், உயிரினங்களின் தற்போதைய சரியான அறிவியல் பெயர்களையும் புதுப்பிக்கும் பணியில் ஈடுபடவேண்டும்..

மேலும், ஆராய்ச்சியாளர்களுக்கும் ஆர்வமுள்ள பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் அருங்காட்சி யகத்தில் உள்ள உயிரினங்களின் தகவல்களை அவர்களது இணைய தளங்களின் மூலம் பொது வெளியில் வெளியிடுவதும் அவசியம்.

தமிழ்நாட்டில் சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகம் தவிர இன்னும் இருபது மாவட்டங்களில் அரசு அருங்காட்சியகங்கள் உள்ளன. இவை தவிர இயற்கை வரலாறு சார்ந்த அருங்காட்சியகங்கள் கொடைக்கானல் செண்பகனூரிலும், திருச்சி புனித ஜோசப் கல்லூரியிலும் உள்ளன.

சாமானியரும் அனைத்துத் தரப்பு மக்களும், வரலாற்றையும் அறிவியலையும் அறிந்துகொள்ளக்கூடிய ஓர் இடம் அருங்காட்சியகம். அவற்றை மேம்படுத்தப் போதிய நிதியையும், திட்டங்களையும் அளிக்க வேண்டியது அரசின் கடமை.

- கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்; jegan@ncf-india.org

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x