Published : 26 Aug 2014 10:00 AM
Last Updated : 26 Aug 2014 10:00 AM

நோய் விரட்டும் எளிய தோட்டம்

மரக்கன்றுகளைப் பரிசாகத் தருவது பரவலாகிவரும் சூழ்நிலையில், தனக்குத் தெரிந்தவர்களுக்குப் பயன்மிக்க மூலிகைச் செடிகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த அல்லிராணி.

சுற்றுச்சூழல், சுகாதாரச் சீர்கேடுகள், உணவுப் பழக்கம் போன்றவற்றால் சளி, இருமல், காய்ச்சல், பூச்சிக்கடி, அஜீரணம் என நமக்கு அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு தொந்தரவுகளுக்குக்கூட மருத்துவரைத் தேடி ஓடுவது சாதாரணமாகிவிட்டது.

சின்ன இடம் போதும்

"வெறும் ரூ.300 செலவில் வீட்டில் அமைக்கும் மூலிகைத் தோட்டத்தால் இந்த உடல் உபாதைகளுக்கு நாமே தீர்வு காணலாம்.

வெற்றிலைச் செடி

அடுக்குமாடிக் குடியிருப்போ, தனி வீடோ-வரண்டா, மொட்டை மாடி, வாசல் படிக்கட்டு எனச் சூரியஒளி படும் இடம் கொஞ்சமாவது இருக்கும். மூலிகைச் செடிகளை வளர்க்க அந்த இடம் போதும். அதுவும் இல்லாவிட்டால் பரவாயில்லை, 5 அடிக்கு 5 அடி இடமிருந்தால்கூட போதுமானதே. துளசி, ஓமவல்லி, கற்றாழை, திருநீற்றுப் பச்சிலை, இன்சுலின் செடி, லெமன் கிராஸ், சிறிய நங்கை, தூதுவளை, வெற்றிலை, கீழாநெல்லி என அடிக்கடி பயன்படும் மூலிகைச் செடிகளைத் தேர்ந்தெடுத்து வளர்க்கலாம்" என்கிறார் அல்லிராணி.

மூலிகை பயன்கள்

துளசி: சளி, இருமல், காய்ச்சலுக்கு எளிய மருந்து. தினமும் இரண்டு இலைகளைப் பறித்துச் சாப்பிட்டு வரலாம்.

ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி: இலைச் சாறு எடுத்து அருந்தினால் சளி, இருமல் நிற்கும். சக்கையை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும். மருத்துவக் குணத்துக்காக இலைகளைத் துவையலாக அரைத்துச் சாப்பிடுபவர்களும் உண்டு.

சோற்றுக் கற்றாழை: தோலை நீக்கிவிட்டு நடுப்பகுதியில் இருக்கும் வழவழப்பான சோறை எடுத்துத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் சூடு தணியும். முகத்தில் தேய்த்துக் கொண்டால் பொலிவான தோற்றம் கிடைக்கும். சாறை அருந்தினால் உடல் குளிர்ச்சி பெறும்.

திருநீற்றுப் பச்சிலை: முகப்பரு தொல்லையில் இருந்து தப்பிக்கவும், பூச்சி கடிக்கும் பயன்படும். பூச்சி கடித்த இடத்தில் இரண்டு சொட்டு சாறு விட்டால் போதும்.

இன்சுலின் செடி: இலை ஒருவித புளிப்புச் சுவையுடன் இருக்கும். இது நீரிழிவு பாதிப்பைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.

தான் வளர்க்கும் செடிகளுடன் அல்லிராணி



"இதெல்லாம் நாம மறந்து போன பாட்டி வைத்தியம்தான். இந்த மூலிகைச் செடிகளை பக்கத்துத் தோட்டங்களில் இருக்கலாம். இல்லையென்றால் அருகில் இருக்கும் நர்சரிகளில் கேட்டுப் பார்க்கலாம். ஒரு கன்றின் விலை அதிகபட்சம் ரூ. 20 இருக்கும். அத்தியாவசியமான 10 செடிகளைத் தேர்வு செய்தால், ரூ.300 மட்டுமே செலவாகும்" என்றார் அல்லிராணி.

ஆரோக்கியம் காக்கும் மூலிகைச் செடிகளை வளர்த்து உடல்நலம் காப்போம்.

இன்சுலின் செடி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x