Published : 06 Jan 2018 11:18 AM
Last Updated : 06 Jan 2018 11:18 AM
செ
ன்னையில் சென்ற ஆண்டு ‘ஜல்லிக்கட்டு வேண்டும்!’ என்ற முழக்கத்துடன் இளைஞர்கள் களமிறங்கிப் போராடினார்கள். அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், இந்த ஆண்டு சென்னைக்கு உண்மையிலேயே பல நூறு நாட்டு மாடுகள் வரவிருக்கின்றன.
தமிழ்நாட்டுக் கால்நடைகளின் பன்முகத்தன்மையைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக ‘செம்புலம்’ அமைப்பு, இந்தக் கால்நடைக் கண்காட்சியை நடத்துகிறது. சிவகங்கையைச் சேர்ந்த தேனு கால்நடைப் பாதுகாப்பு மையம், சென்னை அண்ணா நகரில் உள்ள தென்னிந்திய அங்கக உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்தக் கண்காட்சியில் மாடு, குதிரை, எருமை, நாய், கோழிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வளர்ப்பு விலங்குகளில் முப்பதுக்கும் மேற்பட்ட நாட்டு இனங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
கால்நடைகளைக் காட்சிப்படுத்துவதுடன் மட்டுமில்லாமல், இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கம், பாரம்பரிய சிறுதானிய உணவுத் திருவிழா, தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான பறையாட்டம், கரகாட்டம், மயிலாட்ட நிகழ்ச்சிகள் எனக் கிராமியத் திருவிழாவாக இந்தக் கண்காட்சி கொண்டாடப்பட இருக்கிறது.
இன்றும் நாளையும் (ஜனவரி 6, 7) பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் இரவு 10 மணிவரை நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.
- சங்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT