Published : 13 Jan 2018 09:35 AM
Last Updated : 13 Jan 2018 09:35 AM

படிப்போம் பகிர்வோம்: பச்சைப் பக்கங்கள்!

இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு வெளிவந்துள்ள மிக முக்கியமான சூழலியல் புத்தகங்கள் சில…

கையில் இருக்கும் பூமி | தியடோர் பாஸ்கரன்

பிரபல இயற்கையியலாளர் தியடோர் பாஸ்கரன், இதுவரை எழுதிய சூழலியல் சார்ந்த கட்டுரைகளின் முழுத்தொகுப்பு இந்நூல். உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது.

இந்திய நாய் இனங்கள் | தியடோர் பாஸ்கரன்

இந்திய நாட்டு நாய் இனங்கள் குறித்து ஆங்கிலத்தில் ‘தி புக் ஆஃப் இந்தியன் டாக்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதினார் தியடோர் பாஸ்கரன். அதைத் தொடர்ந்து, அவரே இந்திய நாய் இனங்கள் பற்றி தமிழிலும் எழுதியிருக்கிறார். இது காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது.

தமிழகத்தின் பறவைக் காப்பிடங்கள் | ஏ.சண்முகானந்தம்

சுற்றுச்சூழல் எழுத்தாளர் சண்முகானந்தம், தமிழகத்தில் உள்ள பறவைக் காப்பிடங்கள் குறித்தும், அங்கிருக்கும் பறவைகளின் நிலை குறித்தும் மிக விரிவாக எழுதியிருக்கிறார். எதிர் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது இது.

காணாததைக் கண்ட ஆமான் | மு.வி.நந்தினி

நகர்ப்புறங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, திரைப்படங்களில் சுற்றுச்சூழல் தவறாகச் சித்தரிக்கப்படுவது உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது இந்நூல். பத்திரிகையாளர் மு.வி.நந்தினி எழுதிய இந்தப் புத்தகம், பெட்ரிகோர் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

வனம், வானம், வாழ்க்கை | அரவிந்த் குமார்

ஊடகவியலாளர் அரவிந்த் குமார், சுற்றுச்சூழல் முன்னோடிகளைப் பற்றியும், காட்டுயிர்கள் பற்றியும் இந்நூலில் எழுதியிருக்கிறார். முப்பது கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு நக்கீரன் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.

வான் வெளியில் புலிகள் | த.முருகவேள்

பிரபல காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர், சுற்றுச்சூழல் எழுத்தாளர் த.முருகவேள், காடுகள் குறித்தும், காட்டுயிர்கள் குறித்தும் எழுதியிருக்கும் இந்நூல், உயிர் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

உயிர்

தமிழில் சுற்றுச்சூழல் தொடர்பான இதழ்கள், இன்று வெகு குறைவாகவே உள்ளன. அந்தக் குறையைப் போக்கும் முயற்சியாக, ‘உயிர்’ மாத இதழ் இந்த மாதம் முதல் வெளிவர இருக்கிறது. இதற்கு ஆசிரியர், சுற்றுச்சூழல் எழுத்தாளர் ஏ.சண்முகானந்தம்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x