Published : 30 Dec 2017 11:57 AM
Last Updated : 30 Dec 2017 11:57 AM
வீடுகளில் குழந்தைகள் சரியாகப் படிக்காவிட்டால் ‘நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்று சிறுமைப்படுத்தும் போக்கு காணப்படுகிறது. உண்மையில், 50 ஆடுகள் வளர்க்கும் ஓர் இளைஞர் மாதத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை ஈட்டுகிறார். பொறியியல் படித்த பல இளைஞர்கள் சென்னையில் மாதம் 10 ஆயிரம் ரூபாய்கூட ஈட்ட முடிவதில்லை.
என் நண்பர் ஒருவர் ‘படித்துப் பாழாய்ப் போவதைவிட ஆடு மேய்த்து ஆளாகப் போகலாம்’ என்று நகைச்சுவையாகக் கூறுவார். இந்தியாவே உலகின் அதிக கால்நடைச் செல்வத்தைக் கொண்ட நாடு. ஏறத்தாழ 30 கோடி கால்நடைகள் உள்ளன. இவற்றில் பால், இறைச்சி போன்ற மதிப்புக் கூடிய பொருட்களை விட்டுவிடுங்கள். கழிவான சாணத்தை மட்டுமாவது எடுத்து, அதன் பொருளாதாரக் கணக்கைப் போட்டுப் பாருங்கள். அதனுடைய மதிப்பு என்ன தெரியுமா?
சாணப் புரட்சி
ஒட்டுமொத்தமாக ஒரு நாளைக்கு அவை கொடுக்கும் சாணம் ஏறத்தாழ 150 கோடி கிலோ. அதாவது 15 லட்சம் டன். இதன் மதிப்பு டன் 5 ஆயிரம் ரூபாய் என்று வைத்தாலும் ஒரு நாளைக்கு 750 கோடி ரூபாய் பெற்றுத்தரும். அப்படியானால் ஆண்டுக்கு எத்தனைக் கோடி?
நாட்டில், ஆண்டுக்கு 73 ஆயிரம் டன் ரசாயன உரம் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்நாட்டு உற்பத்தியும் உண்டு, இறக்குமதியும் உண்டு. இதில் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் மானியம் மட்டும் ஆண்டுக்கு 73 ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது. இந்தப் பணம் மாடு வளர்க்கும் உழவர்களிடம் இருந்தால் அவர்கள் தற்கொலை செய்துகொள்வார்களா? கிராமப் பொருளாதாரம் எத்தகைய மலர்ச்சியைப் பெறும்! ஏன் நமது கொள்கை வகுப்பாளர்கள் இதைக் கண்டுகொள்ளவதில்லை?
ஒவ்வொரு உழவரும் சாணத்தைக் கரைக்கும்போது பன்னாட்டு நிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கரைப்பது போல் அல்லவா இருக்கும். சாணத்தைத் தொடுவதை இழிவென்று யார் சொல்லித் தந்தார்கள்? ஏன் சொல்லித் தந்தார்கள்? இவையெல்லாம் நம்முன் இருக்கும் கேள்விகள்.
வடஅமெரிக்காவில் ஒரு மாட்டுக்கு நாளொன்றுக்கு 2.7 டாலர் என்றும், ஜப்பானில் 8 டாலர்கள் என்றும் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் உழவர்களின் வருமானமே நாளொன்றுக்கு 2 டாலர்களுக்கும் குறைவாகவே உள்ளது என்கிறார் தேவிந்தர் சர்மா. இந்தியாவில் உழவனாகப் பிறப்பதைவிட ஜப்பானில் மாடாகப் பிறக்கலாம் என்று அவர் வேதனையோடு குறிப்பிடுவார்.
மாடுகளை வளர்ப்பது எப்படி?
மாடுகளில் திமில் உள்ள மாடுகளையும், திமில் இல்லாத கலப்பின மாடுகளையும் நாம் வளர்க்கலாம். திமில் இருக்கும் நமது நாட்டு மாடுகள் தீவனங்களைக் குறைவாக உட்கொண்டு குறைவான பாலைத் தரும். இவற்றுக்கு நோய் எதிர்ப்பாற்றல் உண்டு. சிறப்புத் தீனிகள் தேவையில்லை.
ஆனால் கலப்பின மாடுகள் அதிக தீனி எடுத்துக்கொண்டு அதிகப் பாலைத் தருபவை. நாம் நமது தேவைக்கேற்ப மாடுகளைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். பாலுக்கா சாணத்துக்கா என்று முடிவு செய்துகொண்டு அதற்கேற்ப மாடுகளை வளர்க்க வேண்டும். மாட்டுக் கொட்டகை பாதுகாப்பான இடத்தில் அமைக்கப்பட வேண்டும். மாட்டுச் சிறுநீரைச் சேமிக்கும் வகையில் சற்று உயரமாகக் கட்டுத்தரையை அமைத்துக்கொள்ள வேண்டும். மாடுகளுக்குத் தேவையான நேரத்தில் நீர் கொடுக்க வேண்டும். தீவனத்தில் பல வகையான புற்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.
சராசரியாக ஒரு மாடு வளர்த்தால் மாதம் ரூபாய் ஆயிரத்துக்குக் குறையாமல் வருமானம் வரும். ஆனால், மாடு வளர்ப்புக்கு அதிக கவனம் தேவை. மாட்டின் அனைத்துப் பொருட்களையும் பயன்படுத்திக்கொண்டால், பால், தயிர், நெய் என்று அனைத்துப் பொருட்களையும் சந்தைப்படுத்தலாம்.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT