Published : 30 Sep 2023 06:04 AM
Last Updated : 30 Sep 2023 06:04 AM
அண்மைக்காலமாக ‘இயற்கை விவசாயம்’ என்கிற சொல் மக்களிடையே ஈர்ப்பைப் பெற்றுவருகிறது. இயற்கை விவசாயத்தை ஆரோக்கியத்தின் அடையாளமாக மக்கள் பார்க்கத் தொடங்கியுள்ளார்கள். இயற்கை விவசாயப் பொருள்களுக்குச் சந்தையும் உருவாகிவருகிறது.
இதனால், விவசாயிகளில் பலர் இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளனர். சந்தைகளும் கூடிவருகின்றன. புற்றுநோய், நீரிழிவு, குழந்தையின்மைப் பெருகுவதற்கு உணவு உற்பத்தியில் கலந்துவரும் வேதிக் கழிவுகளின் பங்கு பெருமளவு உள்ளதைப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
இயற்கை விவசாயம் தெளிவோம்: இயற்கை விவசாயம் என்பது இயற்கை நேசிப்பின் ஒரு பகுதியே. இயற்கையின் இயல்பினை முழுமையாக உள்வாங்கி, இயற்கைக்கு அதிக பாதிப்பில்லாமல் புதுப்பித்துக்கொள்ளும் அளவு தனது தொடர் இருப்பிற்கு மனித குலம் செயல்படுத்தும் அறிவார்ந்த செயலே இயற்கை விவசாயம்.
வேதி உரம், பூச்சிக்கொல்லி பயன்பாடு இல்லாதது மட்டும்தான் இயற்கை விவசாயம் என்று நினைப்பது ஒரு குறுகிய அணுகுமுறை. இதைத் தாண்டி, இயற்கை விவசாயம் என்பதன் முழுமையான சித்திரத்தை நாம் உணர வேண்டும்.
இயற்கை விவசாயத்திற்கு ஆதரவு பெருகினாலும், இந்திய அளவில் இதுவரை சுமார் 2% நிலங்களுக்கு மேல் இயற்கை விவசாயம் முன்னேற முடியவில்லை. அனைத்து நிலங்களும் இயற்கை விவசாயத்திற்கு உட்படுத்தினால் உற்பத்தி குறையும், மக்கள் அனைவருக்கும் உணவளிக்க முடியாது என்கிற எண்ணம் வலுவாக உள்ளது. மாற்றங்களுக்குத் திட்டமிடும் அரசு - நிர்வாக நிலையிலும் இந்த அணுகுமுறை பெருமளவு உள்ளது. இயற்கை விவசாயம் வேகம் எடுக்காமைக்கு இதுவும் ஒரு காரணம்.
எல்லாருக்கும் உணவளிக்குமா? - வேதி உரம் போட்டால்தான் உணவு உற்பத்தி சாத்தியம் என்கிற வாதம் பல காலமாக முன்வைக்கப்படுகிறது. சில ஏக்கர் நிலங்களுக்குத்தான் இயற்கை விவசாயம் சாத்தியம், பரந்துபட்ட அளவில் பயன்படுத்துவது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், நூறு ஏக்கருக்கு மேல் வைத்துள்ள பலரும் இயற்கை விவசாயத்தைச் சாத்தியப்படுத்தி வருகிறார்கள்.
இயற்கை விவசாயத்தின் மூலம் பாழ்பட்ட நிலங்களை மீட்டெடுக்க இயலும். இதன் மூலம் உற்பத்தி நிலங்கள் கூடும், உற்பத்தியும் கூடும். இயற்கை விவசாயம் என்பது ஒருங்கிணைந்த பண்ணையம். ஆடு, மாடு போன்ற கால்நடைகள் பெருகும். காளான் வளர்ப்பு போன்ற பண்ணைசார் தொழில்கள் பெருகும். இதன் வழி பல வகை உணவு உற்பத்தி, பல புதிய வடிவங்களில் பெருகும்.
கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பல விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் சாதித்து வருகின்றனர். இயற்கை விவசாயத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்த உறுதியான செயல்திட்டம் தேவை. மத்திய, மாநில அரசுகள் அத்தகையத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
- senthamil1955@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT