Last Updated : 23 Dec, 2017 11:30 AM

 

Published : 23 Dec 2017 11:30 AM
Last Updated : 23 Dec 2017 11:30 AM

விடைபெறும் 2017: காற்று… கங்கை… காண்டாமிருகம்!

 

ந்தியாவில் இந்த ஆண்டு சுற்றுச்சூழல் சார்ந்து உருவான பிரச்சினைகள், ஏற்பட்ட முன்னேற்றங்கள் பற்றி ஒரு மீள்பார்வை…

இது புதுசு
23chnvk_national1.jpg 

‘இந்திய விலங்கியல் அளவையியல்’ துறை (ஜுவாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா) முதன்முறையாக, நாட்டில் உள்ள அயல் விலங்கினங்களை (இன்வேஸிவ் அனிமல் ஸ்பீஷீஸ்) பட்டியலிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் 157 அயல் விலங்கினங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அமைப்பு மேற்கொண்ட இன்னொரு கணக்கெடுப்பில், நாடு முழுவதும் புதிதாக 499 உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பனிக்காக பேருந்து!

இமாசல பிரதேச மாநிலத்தில், இந்தியாவின் முதல் மின்சாரப் பேருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. அங்குள்ள ரோத்தங் கணவாயில் உள்ள பனிப்பாறைகள், சூழல் சீர்கேட்டால் வேகமாக உருகி வருகின்றன. இதுகுறித்து, தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, அந்தக் கணவாயில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் பனிப்பாறைகள் உருகுவதைத் தடுக்கும் விதமாக, காற்று மாசுபாட்டை ஏற்படுத்தாத மின்சாரப் பேருந்து வசதியை அம்மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது.

தீவைக் காணோம்!

உயிரினப்பன்மை அதிகமாக உள்ள பகுதிகளில் ஒன்று, லட்சத்தீவுகள். அங்குள்ள ‘முதலாம் பரலித் தீவு’ எனும் பெயருடைய தீவு, கடற்கரை அரிப்பு காரணமாக, மறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், இரண்டாம் பரலித் தீவு, மூன்றாம் பரலித் தீவு, பங்கரம் தீவு மற்றும் தின்னக்காரத் தீவு ஆகிய தீவுகளும் கடற்கரை அரிப்பால் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றன, எனவே அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அழியும் பேருயிர்!

‘புராஜெக்ட் எலிஃபண்ட்’ திட்ட இயக்குநரகத்தால் இந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரை 23 மாநிலங்களில் ‘ஆசிய இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை’ மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சுயாதீன இயற்கை ஆர்வலர்கள் ஆகியோரால் யானைக் கணக்கெடுப்பு நடந்தது. அந்தக் கணக்கெடுப்பின் முடிவில், நாட்டில் 27,312 யானைகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்த எண்ணிக்கையைவிட (30,711) குறைவானது என்பது மிகவும் கவலைக்குரியது!

‘பச்சை’ ரயில்!

உலகின் 12-வது மிக நீளமான மெட்ரோ ரயில் நிலையம் என்ற பெருமை டெல்லி மெட்ரோ நிலையத்துக்கு உண்டு. இந்த ஆண்டு, அதற்கு இன்னொரு பெருமையும் கிடைத்துள்ளது. உலகின் முதலாவது ‘பசுமை மெட்ரோ ரயில் நிலையம்’ என்ற பெயரை அது பெற்றிருக்கிறது. ரயில் நிலையத்தின் 10 குடியிருப்புப் பகுதிகளில் ‘பசுமைக் கட்டிட விதிகளை’ பின்பற்றிய காரணத்துக்காக, அந்த மெட்ரோ இந்தப் புகழைப் பெற்றுள்ளது.

‘நூலுக்கு’ தடா!

நைலான் மற்றும் மாஞ்சா நூல்களால், பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் பலர் மரணத்தைத் தழுவினர். இதனால் அவற்றை விற்பனை செய்வதற்கு, நாடு முழுவதற்கும் தடை விதித்தது தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்.

நோ என்ட்ரி!

அசாம் மாநிலம் கசிரங்கா தேசியப் பூங்காவில் புலி, காண்டாமிருகம் ஆகியவற்றைக் கள்ள வேட்டையிலிருந்து காப்பாற்றும் நடவடிக்கையாக, கள்ள வேட்டையாடுபவர்களைக் கண்டதும் சுட, வனப்பாதுகாவலர்களுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக பி.பி.சி. செய்தி நிறுவனம் ஆவணப்படம் ஒன்றை எடுத்திருந்தது. அது சூழலியல்வாதிகளிடையேயும், மனித உரிமை ஆர்வலர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மாநில அரசுக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து தேசியப் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களில் பி.பி.சி. நுழைய, அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

மான் ‘மார்க்’ பூங்கா!

நாட்டில் உள்ள புலிகள் காப்பகங்களில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள கன்ஹா புலிகள் காப்பகம்தான், முதன்முறையாக அதிகாரப்பூர்வமான ‘இலச்சினையை’ (மஸ்கட்) பெற்றுள்ளது. அம்மாநில விலங்கான பாரசிங்கா (சதுப்பு மான்), அந்தப் புலிகள் காப்பகத்தின் அதிகாரப்பூர்வச் சின்னமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இயற்கை, சுற்றுச்சூழல் தொடர்பாக கார்ட்டூன் வரையும் பிரபல கார்டூனிஸ்ட் ரோஹன் சக்கரவர்த்திதான் இந்த இலச்சினையை வடிவமைத்துள்ளார். இளம் தலைமுறையிடம், இயற்கைப் பாதுகாப்பு பற்றியும், அந்தப் புலிகள் காப்பகத்தின் பெருமை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நடவடிக்கையாம்.

காற்று ‘மாஸ்க்’பாடு!

டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாடுதான், இந்த ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினை. அதிக அளவிலான வாகனங்களால் இந்த மாசுபாடு ஏற்பட்டது என்று ஒருசாரார் சொல்ல, இன்னொரு சாராரோ, டெல்லிக்கு அருகில் உள்ள பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் விவசாய நிலங்களில் அறுவடைக்குப் பிறகு மீந்துபோன வைக்கோல் புற்களை எரிப்பதால்தான் காற்று மாசுபாடு ஏற்படுகிறது என்றனர். இரண்டிலும் உண்மை இல்லாமல் இல்லை. இதற்கிடையே, சீனாவின் காற்று மாசுபாட்டைவிட இந்தியாவின் காற்று மாசுபாடு மிகவும் கொடியது என்று அமெரிக்காவின் மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை, பீதியைக் கிளப்புகிறது.

வாங்கம்மா கங்கா!

இந்தியாவில் முதன்முறையாக, கங்கை நதிக்கு ‘மனிதர்களுக்கு நிகரான அந்தஸ்து’ வழங்கியிருக்கிறது உத்தராகண்ட் உயர் நீதிமன்றம். கங்கையை மாசுபாட்டிலிருந்து காப்பாற்ற என்னவெல்லாமோ செய்தாகிவிட்டது. அந்த நதிக்கு, மனிதர்களுக்கு நிகரான அந்தஸ்தை வழங்கினாலாவது அதைக் காப்பாற்றுவார்களா என்கிற நம்பிக்கையில் இப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இவ்வாறு, நதியை ‘உயிருள்ள மனிதராக’ அறிவித்த இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. முதல் நாடு, நியூஸிலாந்து. அங்குள்ள வன்காநுவி நதிக்கும் இந்த ஆண்டுதான் மனித அந்தஸ்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x