Published : 01 Jul 2014 01:20 AM
Last Updated : 01 Jul 2014 01:20 AM

சீமை கருவேலத்தை ஒழிக்கத்தான் வேண்டுமா?- தாவரவியல் பேராசிரியர் நரசிம்மன்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பரவலாகி வரும் பின்னணியில், பெருகிவிட்ட அயல் தாவரங்கள் குறித்த சர்ச்சை சமீபகாலத்தில் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, சீமைக் கருவேலத்தின் பெருக்கம் கவனம் பெற்றுள்ளது. அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று குரல்கள் பல்வேறு திசைகளில் இருந்து ஒலிக்கின்றன. ஆனால், அப்படிச் செய்வது சுற்றுச்சூழலுக்கும் சமூகச் சூழலுக்கும் எதிரானது என்கிறார் தாவரவியல் பேராசிரியர் டி. நரசிம்மன்.

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர், சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை மர கணக்கெடுப்பின் முதன்மை ஆலோசகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மர கணக் கெடுப்பு, அயல் தாவரங்கள், தாவரங்களுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு குறித்து அவரிடம் பேசியதில் இருந்து:

அந்நியமாகும் தாவரங்கள்

புவி வெப்பமடைதல் போன்ற உலகளாவிய பிரச் சினைகள்தான் வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணம் என்று நினைக்கிறோம். ஆனால், நகரங்களில் தாவரங்கள் நிறைந்த பசுமைப் பரப்பே இல்லாமல், கட்டடங்கள் நிறைந்து, காற்று போக்கு இல்லாமல் இருப்பதால் நகர்ப்புற வெப்ப விளைவு (Urban heat effect) அதிகரித்து, குறிப்பிடத்தக்க அளவு வெப்பநிலை அதிகரிக்கிறது.

கிராமச் சாலைகளில் வெண்மருது, புளி, இலுப்பை போன்று நிழலும் பலனும் தரும், நீண்ட நாள் வாழும் மரங்கள் வளர்க்கப்பட்ட காலம் இருந்தது. இன்றைக்கு அப்படியில்லை. இயற்கையிலிருந்து நாம் அந்நியப்பட்டு விட்டதற்கு இது ஓர் அத்தாட்சி. இன்றைய இளைஞர்கள் மெய்நிகர் (Virtual) உலகிலேயே வாழ்கிறார்கள். எதையும் நேரில் பார்ப்பதில்லை. நமது தாவரங்களுக்குப் பண்பாடு, வரலாறு எனப் பல்வேறு தொடர்புகள் உண்டு.

எனது ஆசிரியை சரோஜா, பேராசிரியர்கள் துரைராஜ், தயானந்தன் மாறுபட்டவர்களாக இருந்ததால் எனக்குத் தாவர வியல் ஆர்வம் மிகுந்தது. இயற்கை, தாவரங்கள் பற்றிய அறிவை ஆசிரியர்களுக்கு முதலில் தர வேண்டும். அவர்களின் மூலமாகவே மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க முடியும்.

மர கணக்கெடுப்பு

அந்த வகையில்தான் சென்னையில் நடந்த மர கணக்கெடுப்பு முக்கியத்துவம் பெறுகிறது. வனத்துறை சார்பில் நடந்த இந்த மர கணக்கெடுப்பில் எந்த மரம் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது, எத்தனை மர வகைகள் இருக்கின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது.

நாட்டிலேயே அறிவியல் பூர்வமாக நடைபெற்ற கணக் கெடுப்பு இது. மும்பையில் செயற்கைக்கோள் உதவியுடன் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், சென்னையில் நேரடி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் தவறு நிகழ்வதற்கு 5 சதவீத வாய்ப்பே இருக்கிறது. சென்னையில் நடைபெற்ற கணக்கெடுப்பில் மூன்று அம்சங்கள் முக்கியமானவை:

இது முழுக்கத் முழுக்க தன்னார்வலர்கள், குறிப்பாக மாணவர்களின் உதவியுடன் நடத்தப்பட்டது.

தாவரம், செடிகொடி பற்றி 20, 30 மாணவர்கள் நேரடி களப் பயிற்சி கிடைத்து, தாவரவியலில் உத்வேகம் பெற்றிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மரத்தையும் தொட்டுப் பார்த்து எண்ணியிருப்பது இந்தக் கணக் கெடுப்பின் தனிச் சிறப்பம்சம்.

தாவரங்களும் தமிழும்

இது போன்ற கணக்கெடுப்புகள் மரங்கள் மீதான அக்கறையை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றும். அதேநேரம் நமது மொழியிலும் பண்பாட்டிலும் மரங்கள் பெரும் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

நம்முடைய தாவரங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்கள் மொழி சார்ந்தவை மட்டுமல்ல, சூழலியல் அறிவும் கொண்டவை. ஒரு தாவரத்தின் பண்பு, தோற்றம், நிலத்தில் வளரும் பண்பு எனப் பல அம்சங்களைக் கொண்டு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. அறிவியல்பூர்வமாக உள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.

இதற்கு எடுத்துக்காட்டு புளி - கொடுக்காய்ப் புளி - யானை புளி. கொடுக்காய்ப் புளி பார்ப்பதற்குப் புளியைப் போலிருக்கும், கொடுக்கு போல வளைந்தும் இருக்கும். இது காரணப் பெயர் மட்டுமல்ல, அந்தத் தாவரம் புளி குடும்பத்தைச் சேர்ந்தது. யானை புளியம் என்றொரு மரம் இருக்கிறது. பெரிதாக இருப்பதால் யானை புளி என்று வைத்துவிட்டார்கள். தமிழ் மரபில், தாவரங்கள் சார்ந்து இப்படிக் குறிப்பிடத்தக்க விஷயங்கள் நிறைய உள்ளன. விஷயம் தெரிந்தவர்கள்தான் பெயர் வைத்திருக்கிறார்கள்.

நிழல் அமைப்பு உருவாக் கிய கோட்டூர்புரம் மரப் பூங்காவில் எல்லாத் தாவரங்களுக்கும் தமிழ்ப் பெயர்கள் வைக்கப் பட்டுள்ளன. இது போன்ற முயற்சிகள் பரவலானால், தாவரங்கள் குறித்த நமது அறிவும் பரவலாகும்.

அயல் தாவரங்கள்

இப்படி உள்நாட்டு தாவரங்கள் குறித்த அக்கறை அதிகரித்து வருவது ஆக்கப்பூர்வமான விஷயம், அதேநேரம் சீமை கருவேலம் அல்லது வேலிகாத்தான் என்றழைக்கப்படும் அயல் தாவரத்தை ஒழிப்பது பற்றி சட்டசபையில் பேசப்படும் அளவுக்கு விவாதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அதை வெறுமனே அயல் தாவரம் என்று புரிந்துகொள்ளாமல், அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். எத்தனையோ தரிசு நிலங்கள், காலி மனைகளில் இந்தத் தாவரம் வளர்ந்துள்ளது.

இயல் தாவரமோ, அயல் தாவரமோ முதலில் மண்ணரிப்பைத் தடுத்து மண் வளத்தைப் பாதுகாக்கிறது, விறகைத் தருகிறது. இன்றைக்கும் சாதாரண மக்கள் தாவர எரிபொருளையே சார்ந்திருக்கிறார்கள். அயர்ன் செய்பவர்கள், டீக்கடைக்காரர்கள் சீமை கருவேலத்தின் மர கரியை நம்பித் தொழில் நடத்துகிறார்கள். தென் மாவட்டங்களில் சீமை கருவேல மரத்தில் இருந்து கரி தயாரிக்கும் தொழில் முக்கியமானது. ஆடு, மாடுக்குத் தீவனமாகவும் இந்தத் தாவரம் இருக்கிறது. பல்வேறு வகைகளில் பயன்தரும் இயற்கைவளம் இது.

இப்படிப் பல்வேறு பொருளாதார நலன்களைத் தரும் தாவரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமா என்பது பற்றி சிந்திக்க வேண்டும். அப்படிச் செய்தால், சாதாரண மக்களுக்குப் பொருளாதாரரீதியில் பெரும் இழப்பு ஏற்படும். அதற்கு மாற்று ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். அதேநேரம் சீமை கருவேலத்தின் கண்மூடித்தனமான பரவலை முறையாக நிர்வகிக்க வேண்டியது அவசியம்தான்.

இப்படி அயல் தாவரங்களை எதிர்க்கும்போது, வேறு விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். யூகலிப்டஸ் எனும் தைல மரம் இல்லையென்றால், காகிதத் தொழிற்சாலைகளால் நமது காடுகள் எவ்வளவு அழிக்கப்பட்டிருக்கும்? கிட்டத்தட்ட 20-30 சதவீதக் காடுகள் அழிந்து போயிருக்கும்.

தாவர ஆணையம்

மரம் வெட்டுவதையும் நடுவதையும் முறைப்படுத்தத் தாவர ஆணையம் போன்ற அமைப்பு தமிழகத்தில் தேவை. பூனாவில் இது போன்ற குழு இருக்கிறது. ஓர் இடத்தில் உள்ள மரத்தை வெட்டலாமா, கூடாதா என்பது பற்றி முடிவெடுப்பது மட்டுமில்லாமல், ஓரிடத்தில் எந்த மரத்தை நடுவது உகந்ததாக இருக்கும் என்றும் இந்தக் குழு ஆலோசனை வழங்கலாம். அதற்கான நிபுணத்துவம் கொண்டவர்களை உள்ளடக்கி, இந்தக் குழுவை உருவாக்கப்பட வேண்டும்.

- பேராசிரியர் நரசிம்மன், தொடர்புக்கு: narasimhand@gmail.com (ஆர். கார்த்திகா உதவியுடன்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x