Published : 30 Dec 2017 11:52 AM
Last Updated : 30 Dec 2017 11:52 AM

கடலம்மா பேசுறங் கண்ணு 34: கண்கொள்ளாக் கடலுயிர்கள்!

கடல் தாங்கும் நிலப்பரப்பு தரைப்பரப்பைவிட மும்மடங்கு பெரிது. தரை இரு பரிமாணப் பரப்பு. கடல் முப்பரிமாண ஊடகம். அதன் பரப்பிலும் ஆழத்திலும் உயிர்கள் உலவ முடியும். 137 கோடி கன கிலோமீட்டர் பெருக்கம் கொண்ட இந்த நீர்த்திரளில் வாழும் உயிர்களுடன் ஒப்பிட்டால் நிலவாழ்வனவற்றின் அளவு மிக மிகச் சிறியது. கடலுயிர் வளத்தை மனிதன் முறையாகக் கையாளக் கற்றுக்கொள்ளவில்லை.

உயிர்கள் முதன்முதலாகத் தோன்றியது கடலில்தான் என்கின்றன பரிணாம ஆய்வுகள். நிலவாழ் உயிரினங்களுக்கு உடலின் ஊடகம் நீர். கடலில் வாழும் இனங்களுக்குள்ளே உள்ளும் புறமும் ஊடகமாய் அமைவதும் நீர்தான். இந்த இருபுற ஊடகங்களுக்கு இடையில் ஏற்படும் அழுத்த, அடர்வு வேறுபாடுகளைச் சமாளிப்பதே பெருஞ்சிக்கல்தான்.

கடல், உடல் நீரை உறிஞ்சிவிட்டு உப்பை உள்ளே திணித்துக்கொண்டே இருக்கும். சாக்கடலில் உப்பு பல மடங்கு அதிகம். நீங்கள் மிதந்தவாறு புத்தகம் வாசிக்கலாம். ஆனால், சாக்கடலில் உயிரினங்கள் வாழ முடியாது.

கடலின் மேற்பரப்புத் தரை

கண்ணுக்குப் புலப்படாத பாக்டீரியா முதல் உலகிலேயே எடை மிகுந்த திமிங்கிலங்கள்வரை, வாழ்நாள் முழுவதும் ஓரிடத்தில் ஒட்டிக்கிடக்கும் மட்டிகள் முதல் பல்லாயிரம் கிலோமீட்டர் பயணிக்கும் மீன்கள்வரை, கடற்கோரைகளைத் தின்று வாழும் பாலூட்டிகள் முதல் மனிதர்களை வேட்டையாடும் கொம்பன் சுறாக்கள்வரை, புழுவினங்கள் முதல் முதுகெலும்பிகள்வரை… கோடிக்கணக்கான உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன.

வேட்டை ராஜாக்களான சுறாக்கள் தனித்து வாழ்பவை. ஆனால், ரத்த வாடை எல்லா சுறாக்களையும் ஓரிடத்தில் கூட்டிவிடும். மீன் போன்ற ஏராளமான இனங்கள் நீச்சல் திறன் கொண்டவை. வேறு பல உயிரினங்கள் கடலடித் தரையைவிட்டு அகல்வதில்லை. ஏறத்தாழ நிலத்தில் புழங்குவதுபோல் பூச்சியினங்களில் சில கடலின் மேற்பரப்பைத் தரைபோலப் பாவிக்கின்றன. சில கடற்பாசி இனங்கள் பாறைகளில் ஒட்டி வாழ்பவை. கடற்கோரைகள் தரையில் வேர் பிடித்து வாழ்கின்றன.

அலைகளின் கருணை

கடல் மீன்கள், தொலைவுகளுக்கும் ஆழங்களுக்கும் பயணிப்பவை. திமிங்கிலம், ஓங்கில் (டால்பின்) போன்ற பாலூட்டி இனங்களும் ஆமைகளும் நம்மைப் போல் காற்றைச் சுவாசிக்கக்கூடியவை. அவை அவ்வப்போது கடலின் மேற்பரப்புக்கு வந்து உயிர்வளியை எடுத்துக்கொள்ள வேண்டும். கடல்வாழ் பாலூட்டிகள் உயிர்வளி சிக்கனம், இதயத் துடிப்பை மிதமாக்குதல் போன்று பல தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.

கடல் ஏற்றவற்றப் பகுதிகளில் வாழும் உயிரினங்களை அலைகளும் ஓதங்களும் அலைக்கழித்தவாறு இருக்கும். சுயமாக நகரும் திறன்கொண்ட நண்டு போன்ற விலங்குகள் பாறையிடுக்குகளில் வாழும் தகவமைப்பைப் பெற்றவை. கடற்பாசிகளும் சிப்பிகளும் பாறைகளைப் பற்றிப் பிடித்துக்கொள்கின்றன. சுயமாக நகரவோ பற்றிப் பிடித்துக்கொள்ளவோ இயலாத உயிரினங்கள் என்ன செய்யும்? மழை வந்தால் யானை என்ன செய்யும், நனைவதைத் தவிர? அதுபோல அலைகளின் கருணையைச் சார்ந்த வாழ்வுதான் இவற்றுக்கும்.

(அடுத்த வாரம்: கடலின் சமையல்காரர்கள்!)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x