Published : 30 Dec 2017 11:57 AM
Last Updated : 30 Dec 2017 11:57 AM

விடைபெறும் 2017: எண்ணெய் கடலும்… எரியும் நிலமும்!

ந்த ஆண்டு, தமிழகத்தில் நிகழ்ந்த முக்கியமான சுற்றுச்சூழல் நிகழ்வுகள், ஒரு மீள்பார்வை…

எண்ணெய் கடல்!

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே, எம்.டி. பி.டபிள்யு. மேப்பிள், எம்.டி. டான் காஞ்சிபுரம் என்ற இரண்டு கப்பல்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதியதில் டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த எண்ணெய் டாங்குகள் உடைந்து, கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியது. இந்த நிகழ்வுக்கு, இரண்டு கப்பல் நிறுவனங்களும் ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி பழி போட, இன்னொரு பக்கம் காமராஜர் துறைமுக நிர்வாகமோ கடலில் கொட்டிய எண்ணெய்யை எப்படி அகற்றுவது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு நின்றது. எண்ணெய்க் கசிவு நடந்து, சில நாட்களுக்குப் பிறகு துறைமுக நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதற்குள், கல்பாக்கம்வரை எண்ணெய்க் கசிவு பரவியது. கடலில் கசிந்த எண்ணெய்யை, அரசு அமைப்பு அள்ளாமல் தன்னார்வலர்களைக்கொண்டு வாளியில் அள்ளியபோது ‘டிஜிட்டல் இந்தியா’ பல்லிளித்தது!

30CHNVK_NEDUVASALஅலங்கோலமான வாசல்!

வேளாண்மைக்கு இந்த ஆண்டு அலங்கோலமான ஆண்டுதான். வறட்சியால் ஒரு பக்கம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள, இன்னொரு பக்கம் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில், நெடுவாசலில் வேளாண் நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் வர… மூச்சுத் திணறிப் போனார்கள் தமிழக மக்கள். அந்தத் திட்டம் பற்றி சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ அரசோ மக்களுக்கு எந்தத் தகவலையும் எடுத்துச் சொல்லாதது, பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், நெடுவாசலுக்கு அருகில் உள்ள நல்லாண்டார் கோயில் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய்க் கிணறு திடீரெனத் தீப்பற்றி எரிய, நெடுவாசல் போராட்டக்காரர்கள் எழுப்பிய சந்தேகங்கள் உண்மைதானோ என்று யோசிக்க வைத்தது. நூறு நாட்களைக் கடந்து நடந்த மக்கள் போராட்டத்தின் விளைவாக, அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதேநேரம் காவிரிப் பாசன மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு எடுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுவருகிறது.

ஓகி ஓலம்!

சென்ற ஆண்டு சென்னைக்கு ‘வார்தா’, இந்த ஆண்டு கன்னியாகுமரிக்கு ‘ஓகி’. ஒவ்வோர் ஆண்டும் உலுக்கியெடுக்கிறது புயல். வேறு வேறு பெயர்களில் வந்தாலும், தந்துவிட்டுச் செல்வது என்னவோ ஒரே மாதிரியான இழப்புகள்தான். சென்னைப் புயல் சாலைகளை மூழ்கடித்தது என்றால், குமரிப் புயல் கடலில் வாழ்பவர்களை மூழ்கடித்தது. அவர்களைக் கண்டுபிடிப்பதில் அரசு மெத்தனம் காட்டியதாக எழுந்த விமர்சனம், குமரியை இன்னும் கொந்தளிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

புயலுக்கு முன்பு ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற சுமார் 400-க்கும் அதிகமான மீனவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லை என்ற செய்தியும் கண் காண முடியாமல் தொலைந்துபோனவர்கள் தந்த துயரமும்… கடலில் இருக்கும் உப்பைவிட, மக்கள் கண்ணீரில் உப்பு அதிகம் என்பதைக் காட்டுகின்றன.

மிஸ்டு கால் பேரணி!

‘நதிகளைக் காக்க, மிஸ்டு கால் கொடுத்தால் போதும்!’ – இது இந்த ஆண்டின் மிகப் பெரிய சுற்றுச்சூழல் கண்டுபிடிப்பு என்று பரிகசிக்கப்பட்டது. நதிக் கரையோரங்களில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு, மரங்களை நட்டுவிட்டால் போதும். மழை கொட்டி, நதிகள் நிரம்பி, தண்ணீர் பாய்ந்தோடும் என்று ஊர் ஊராகப் பரப்புரையும் அதற்கு வெளிப்படுத்திய மேம்போக்கான அணுகுமுறையும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இன்னொரு பக்கம், காடு அழிப்பு குற்றச்சாட்டுக்கு இடையே ‘ஆதியோகி’ சிலை வைத்ததும், அந்த நிகழ்வுக்குப் பிரதமர் வந்ததும் அரசின் மீதும் ஆன்மிக ஆர்வலர்கள் மீதும் விமர்சனக் கணைகள் பாய்ந்தன.

உயரும் மோதல்… குறையும் உயிர்!

2017, மனிதர்களுக்கு மட்டும் அல்ல, காட்டுயிர்களுக்கும் கடுமையான சவால்களை உருவாக்கிய ஆண்டு. 2012-ம் ஆண்டில் 4,015 யானைகள் தமிழகத்தில் இருந்தன. இந்த ஆண்டு நடந்த யானைக் கணக்கெடுப்பில், 2,761 யானைகள் மட்டுமே உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில், மாநிலத்தில் யானைகளின் எண்ணிக்கை 30 சதவீதம் குறைந்துள்ளது.

இன்னொரு பக்கம் மாநிலத்தில் மனித – உயிரின எதிர்கொள்ளல் நாளுக்குநாள் அதிகரித்துவருவது, வேதனையிலும் வேதனை. 2013 முதல் 2016-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மனித – விலங்கு எதிர்கொள்ளல் சம்பவங்களால் 185 பேரும் 132-க்கும் மேற்பட்ட யானைகள், புலிகள் உள்ளிட்ட காட்டுயிர்களும் இறந்துள்ளதாக மாநில வனத் துறையும் மத்திய சுற்றுச்சூழல் - வனத்துறை அமைச்சகமும் கூறியுள்ளன. இந்த ஆண்டு, மேற்கண்ட சம்பவங்கள் தமிழகத்தில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது கூடுதல் தகவல்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x