Published : 30 Dec 2017 11:52 AM
Last Updated : 30 Dec 2017 11:52 AM
எ
ங்கு சென்றாலும் மரங்களையும் கிளைகளையும் நோக்கி, ஏதேனும் பறவைகள் தென்படுகின்றனவா என்று தேடியவாறே செல்வது என் வழக்கம். அப்படி ஒரு நாள், இரு சக்கர வாகனத்தில் சென்னை அஸ்தினாபுரம் ஏரிப் பக்கமாகச் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு உடைந்த பனை மரத்தில் ஏதோ அசைவது தெரிந்தது. அங்கு இரு புள்ளி ஆந்தைகள் (Spotted Owlet) தென்பட்டன.
பனை மரத்தின் இரண்டு பொந்துகளிலிருந்து, தட்டை முகத்துடன் கூரிய விழிகள் நிலைகுத்தியிருக்க, அவை எங்களையே பார்த்துக்கொண்டிருந்தன. ஆர்வம் தாளாமல் சற்று நெருங்க முயன்றபோது, விருட்டென்று வில்லிலிருந்து பாய்ந்த அம்புபோல ஒரு ஆந்தை பறந்து சென்று அருகில் இருக்கும் முட்புதரில் அமர்ந்தது. அப்போதும் என்னை நோக்கியே அதன் பார்வை இருந்தது. பறக்கும்போது ஒரு சிறு சத்தம்கூட எழவில்லை. ஆசை தீர ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டேன்.
வீட்டிலிருந்து நூறடி தொலைவில் ஒரு புள்ளி ஆந்தை ஜோடியோடு வாழ்கிறோம் என்பதில் எனக்குச் சந்தோஷம். அடிக்கடி அங்கு சென்றுவர ஆரம்பித்தேன். இது குறித்து என் குடும்பத்தினரிடமும் தெரிவித்தேன். வீட்டில் வளர்க்கும் ஒரு செல்லப் பிராணியைப் போல, அனுதினமும் வாஞ்சையோடு அப்புள்ளி ஆந்தைகள் இருக்கின்றனவா என்று பார்ப்பது எங்களின் அன்றாட வழக்கமாக மாறிப்போனது.
ஆந்தைகள் என்றாலே அபசகுனம் என்ற மூட நம்பிக்கை நீண்ட காலமாக இருந்துவருகிறது. நிஜத்தில் ஆந்தைகள் மனிதர்களுக்கு நன்மைகளையே செய்கின்றன. உணவு உற்பத்திக்குக் கேடு விளைவிக்கும் எலிகளை அதிகமாக உண்டு எலிகளின் பெருக்கத்தை இவை கட்டுப்படுத்துகின்றன. பிறந்து பத்து வாரங்களே ஆன ஆந்தைக் குஞ்சுகள்கூட நிறைய எலிகளைத் தின்னக்கூடியவை.
இரவு நேரத்தில் மட்டுமே வேட்டையாடும் இரவாடிப் பறவையான ஆந்தை, நாம் கேட்ட கதைகளைப் போலன்றி பகல் முழுக்க உறங்குவதில்லை. தம்மை நெருங்குவது யாரென வழி மேல் விழி வைத்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. 360 டிகிரி கோணத்தில் தலையைச் சுழற்றி, நூறடிக்கு அப்பால் ஓடும் இரையையும் குறி வைக்கின்றன.
கட்டுரையாளர், பறவைகள் ஆர்வலர்
தொடர்புக்கு: syedmohamedfirdous@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT