Published : 24 Jun 2023 09:18 AM
Last Updated : 24 Jun 2023 09:18 AM
எஸ். அதிகாரியாக உயர்ந்தவர். இவர் தற்போது ராமநாதபுரம் வனப் பாதுகாவலராக மட்டுமல்லாமல், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தின் இயக்குநராகவும் செயல்பட்டுவருகிறார். உலகளவில் உயிர்க்கோளக் காப்பக மேலாண்மைக்காக வழங்கப்படும் யுனெஸ்கோவின் மைக்கேல் பட்டிஸ் விருதுக்கு இந்த ஆண்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் இவர். அவருடனான உரையாடல்:
ஒரு விவசாயியின் மகனான நீங்கள், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தைப் பாதுகாப்பது சார்ந்து எப்படிக் கற்றுக்கொண்டீர்கள்?
விவசாயியின் மகனாக நான் பிறந்தது, எனக்குக் கிடைத்த வரம். உழவு, விதைப்பு, களையெடுத்தல், காளைகளுக்குப் பயிற்சி அளித்தல் என அனைத்து விவசாயப் பணிகளிலும் என் தந்தைக்கு நான் உதவிசெய்தேன். முக்கியமாக, தாவரங்களும் விலங்குகளும் எனக்கு மிக நெருக்கமாயின. என்னுடைய தந்தையைப் போன்ற விவசாயிகள் வாழ்நாள் முழுவதும் மண்ணையும் வளர்ப்பு விலங்குகளையும் பாதுகாத்துப் பராமரிக்கிறார்கள். அதே போன்று நானும் ஒரு வனப் பாதுகாவலராகக் காட்டுயிர்களையும், தாவரங்களையும் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன். அது எனது அலுவல் சார்ந்த கடமை மட்டுமல்ல; புவியில் வாழும் மனிதன் என்கிற முறையில் எனக்கு இருக்கும் பொறுப்பும்கூட. இதில் மும்பையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜியில் வேதியியல் பொறியியல் படிப்பு படித்தேன். பிறகு இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். சுற்றுச்சூழல், காடுகளின் மீதான ஆர்வத்துக்கும், அது சார்ந்த பயணத்துக்கும் மேற்கண்ட இடங்களில் பெற்ற அனுபவமும் உதவியது.
இந்தப் பாதுகாப்புப் பணியில் எத்தகைய சவால்களை எதிர்கொண்டீர்கள்?
தேசியப் பூங்கா, உயிர்க்கோளக் காப்பகத்தின் பரப்பளவு, கடினமான கடல் நிலைமைகள், அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை, ஞெகிழிக் கழிவு போன்றவை எங்கள் செயல்பாடுகளைக் கடினமாக்கின. நாங்கள் இரண்டு இடங்களில் ஞெகிழி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளோம். சுற்றுலாப் பயணிகளுக்குத் துணிப் பைகளை (மஞ்சப்பை) வழங்குகிறோம். கடற்கரையிலும், தண்ணீருக்கு அடியிலும் அவ்வப்போது சுத்தம் செய்கிறோம். இவற்றையெல்லாம் செய்துவந்தாலும், நாம் இன்னும் செல்ல வேண்டிய தொலைவு அதிகம். மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மக்களைச் சார்ந்து இருப்பவை என்பதால் அவற்றைக் கட்டுப்படுத்தி, பாதுகாத்துப் பராமரிப்பது மிகுந்த சவாலாக இருந்தது.
என்னென்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள்?
மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள வனப்பகுதிகளையும், கடல்வாழ் உயிரினங்களையும், கடல் வளங்களையும் பாதுகாக்கப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கடல் உயிர்ப் பன்மையின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் விதமாகச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை வேலைகளை அதிக எண்ணிக்கையில் (சுமார் 8,000) உருவாக்கி யுள்ளோம். பெண்களுக்கு அதிகாரமும் தன்னம்பிக்கையும் அளிக்கும் நோக்கில் திறன் மேம்பாட்டு முன்னெடுப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறோம். இதன் மூலம் 7,000க்கும் மேலான பெண்கள் பலனடைந் துள்ளனர்.
காலநிலை மாற்றப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான முயற்சியில், அப்பகுதி சமூகத்தினரை ஈடுபடுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலை மறுசீரமைக்க முயல்கிறோம். 70 ஹெக்டேர் பரப்பளவில் சதுப்புநிலத் தாவரங்கள் பயிரிடப்பட்டுள்ளன; 2,48,000 உள்நாட்டு மரங்கள் நடப்பட்டுள்ளன; 600 சதுர மீட்டர் பவளத்திட்டுகளும், 1,000 சதுர மீட்டர் கடல் புல்லும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன; 185 ஹெக்டேர் நிலப்பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
சமூக பங்கேற்பின் மூலம் காட்டுயிர் பாதுகாப்பையும் மீட்பையும் சாத்தியப்படுத்தி உள்ளோம். இதனால், 100க்கும் மேலான காட்டுயிர் குற்றங்கள் கண்டறியப்பட்டன; 12,000 கிலோ காட்டுயிர் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன; 102 கடல் உயிரினங்கள் மீட்கப்பட்டு விடுவிக்கப்பட்டன.
கடலுக்குள் ஞெகிழிக் கழிவு போடப் படுவதைத் தடுக்கும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற் கொண்டு வருகிறோம். மேலும், ஞெகிழி மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உள்ளூர் சமூகத்தின் வாழ்வாதாரத்துடன் இணைத்ததன் மூலம் 36.8 டன் ஞெகிழி கழிவு கடலுக்குள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் கல்வியைப் புதுமையான வழிகள் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளோம். முக்கியமாக, அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான ஆவுளியா, ஆமைகள், ஓங்கில், கடலில் உள்ள பவளத் திட்டுகளைப் பாதுகாப்பது குறித்து மக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவியருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இதில் Marine Eliteஇன் பங்கு என்ன?
Marine elite படை எங்களின் கண்காணிப்பு பலத்தை வலுப்படுத்தியது. அருகி வரும் உயிரினங்கள் உள்ளிட்ட பல்லுயிர்களின் பாதுகாப்பை இது மேம்படுத்தியது. சட்ட விரோதக் காட்டுயிர் வர்த்தகத்திலிருந்து அவற்றைப் பாதுகாக்கவும் உதவிவருகிறது.
யுனெஸ்கோ விருதைப் பெற்றது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
உலகில் 738 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன. அதில் எனக்கு யுனெஸ்கோ விருது கிடைத்திருக்கிறது என்று சொல்வதைவிட, எனது குழுவுக்குக் கிடைத்தது என்று சொல்வதே சரியாக இருக்கும். இதுபோன்ற சர்வதேச அங்கீகாரம், உண்மையிலேயே பெருமைமிகு தருணம். சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்புக்காக அயராது உழைக்கும் எங்கள் குழுவின் செயல்பாடுகள் இன்னும் வேகமெடுக்கும்; தீவிரமடையும் என நம்புகிறேன்.
சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காகப் போராடும் எங்களைப் போன்ற சமூக அடிப்படையிலான அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு இந்த விருது கூடுதல் ஊக்கத்தை அளித்திருக்கிறது. காட்டுயிர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள சமூகத்தினர், மீனவர்களின் செயல்பாடுகளுக்கு இந்த விருது உத்வேகம் அளித்துள்ளது. முக்கியமாக, நாங்கள் மேற்கொண்ட நல்ல நடைமுறைகளை இந்த விருது உலக அளவில் கொண்டுசேர்த்துள்ளது; சிறந்த சர்வதேச நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் எங்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.
அடுத்துவரும் ஆண்டுகளில் நீங்கள் செய்ய விரும்புவது என்ன?
அடுத்த ஐந்து ஆண்டுகளில், சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத ’பசுமை வேலை’களை உள்ளூர் சமூகத்தினருக்கு அதிக அளவில் உருவாக்க வேண்டும்; சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத விதமாகச் சூழலியல் சுற்றுலா வசதிகளை மாற்றியமைக்க வேண்டும்; சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மூலம் இயற்கை வாழ்விடத்தை மேம்படுத்தும் முயற்சியில் இன்னும் தீவிரமாக ஈடுபட வேண்டும். முக்கியமாகக் காட்டுயிர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முயற்சிகளில் இங்குள்ள சமூகத்தினரைத் தொடர்ந்து ஈடுபடுத்த விரும்புகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT