Published : 10 Jun 2023 06:05 AM
Last Updated : 10 Jun 2023 06:05 AM

சேதமடைந்த வாழைமரங்கள்

கடலூரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் பெய்த மழையால், 1,800 ஏக்கர் வாழைமரங்கள் சேதமடைந்தன. பூவன், ஏலக்கி, பேயன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகள் அங்கே பயிரிடப்பட்டிருந்தன. விவசாயிகள் ஓர் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருந்தனர். பெரும் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்திருக்கும் விவசாயிகளுக்கு அரசின் உதவி தேவை என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்: தமிழ்நாடு அரசு, வேளாண்மை - உழவர் நலத்துறை நிதி நிலை அறிக்கையில், கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்குப் பெருமளவில் பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவிகள் மானியத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி சிறு, குறு, பெண் விவசாயிகள், ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியமும், இதர பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமும் வழங்கப்பட உள்ளது. இதில் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரைன்ஸ் வலைத்தளம்: தமிழ்நாடு வேளாண் - உழவர் நலத்துறை சார்பில் வேளாண் அடுக்ககம் திட்டம், செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதற்காக ‘கிரைன்ஸ்’ (https://shorturl.at/cmsxE) என்கிற வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விவசாயிகள் தங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் பதிவுசெய்து பயன்பெற முடியும்.

இதில் பதிவு செய்துள்ள விவசாயிகள் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும். நலத்திட்ட நிதியுதவிகள் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் செலுத்தப்படும்.

வேளாண் விஞ்ஞானி: தமிழ்நாடு அரசின், ‘வட்டாரத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி’ திட்டத்தின்கீழ், அந்தந்த மாவட்டங்களில் செயல்படும், ஆராய்ச்சி - அறிவியல் நிலையங்களில் பணிபுரியும் 388 விஞ்ஞானிகள், வட்டார அளவில் பொறுப்பு அலுவலர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உயர் மகசூல் ரகங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைப்பது, சாகுபடித் தொழில்நுட்பத்தைக் கற்றுத்தருவது, நோய்களைக் கட்டுப்படுத்த அறிவியல்ரீதியாக ஆலோசனை வழங்குவது, சந்தைப்படுத்துவதற்கான ஆலோசனை வழங்குவது உள்ளிடவை இவர்களின் முதன்மைப் பணிகள்.

வீட்டிலிருந்தே விற்பனை: தமிழகத்தில், 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளன. இவற்றில், 127 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், தேசிய இ - வேளாண் சந்தையுடன் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளன.

தேசிய இ - வேளாண் சந்தையின் மூலம், விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே, இணையம் வாயிலாக நல்ல விலையில் தங்கள் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்ய முடியும். இந்நிலையில், தற்போது கூடுதலாக 30 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் தேசிய இ - வேளாண் சந்தையுடன் இணைக்கப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x