Published : 29 Jul 2014 03:11 PM
Last Updated : 29 Jul 2014 03:11 PM
| ஜூலை 19-27 பட்டாம்பூச்சிகள் (Moth) வாரம் |
பத்து ஆண்டுகளுக்கு முன் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான குதிரைவெட்டி எனுமிடத்தில் களப் பணிக்காகச் சென்றிருந்தோம். இரவாடிகளான மர நாய், புனுகுப்பூனை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த காலம். அதற்காக இரவு நேரங்களில் காட்டுப் பகுதிகளில் உலவுவது வழக்கம்.
ஒரு நாள் இரவு பணி முடிந்து இருப்பிடம் திரும்பியபோது, வாசலில் எரிந்துகொண்டிருந்த விளக்கின் வெளிச்சத்தால் கவரப்பட்டுப் பல பட்டாம்பூச்சிகள் (Moth, அந்துப்பூச்சி என்றும் அழைக்கப்படும்) பறந்துகொண்டும், வெள்ளைச் சுவரில் சிறியதும், பெரியதுமாகப் பல வண்ணங்களில் பொருத்தப்பட்ட ஓவியங்களைப் போலும் இருந்தன.
இது வழக்கமான காட்சிதான். அதுவும் மழைக் காலம் என்றால் கேட்கவே வேண்டாம், இன்னும் பல வகை பட்டாம்பூச்சிகளைப் பார்க்க முடியும். இருந்தாலும் அன்றைக்குக் கவனத்தை ஈர்த்தது பெரிய இறக்கைகளைப் படபடத்துப் பறந்துகொண்டிருந்த ஒரு பூச்சி. அது அட்லாஸ் பட்டாம்பூச்சி (Atlas Moth). முதன்முதலில் இப்பூச்சியைக் கண்டதும், பிரமித்துப் போனதும் அப்போதுதான்.
உயிருள்ள சித்திரங்கள்
செம்பழுப்பு நிறத்தில் சித்திரம் வரைந்தது போன்ற பல வடிவங்களில், பல வண்ணங்களில் அமைந்த அதன் இறக்கையின் அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம். இவை காட்டுப் பகுதிகளிலேயே அதிகம் தென்படும். அதிலும் பறக்கும் நிலையை அடைவது, மழைக்காலங்களில் மட்டுமே. இரவில் மட்டுமே பறந்து திரியும்.
பார்ப்பதற்கு வண்ணத்துப்பூச்சியை (Butterfly) போலிருக்கும். கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், இது பட்டாம்பூச்சி (Moth) என்பது புரியும். உலகின் மிகப் பெரிய பட்டாம்பூச்சிகளில் ஒன்றான இது, இறக்கை விரித்த நிலையில் சுமார் 30 செ.மீ. அகலத்துடன் இருக்கும்.
இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி அலாதியானது. பறக்கும் நிலையை அடையும் முதிர்ந்த அட்லாஸ் பட்டாம்பூச்சி வாழ்வது சுமார் இரண்டு வாரங்கள்தான். அதற்குள் அவற்றின் இணையைத் தேடிக் கலவி புரிந்து, சரியான உணவுத் தாவரத்தைத் தேடிச் சென்று, முட்டைகளை இட வேண்டும்.
இணைசேரல்
சரி, முதலில் இரவு நேரத்தில் இணையை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது? பெண் பட்டாம்பூச்சி தன் உடலில் இருந்து பெரமோன் (Pheromone) என்ற வேதிப்பொருளை வெளியிடும். இது, காற்றில் வெகு தூரம் பயணிக்கும். முதிர்ந்த ஆண் பட்டாம்பூச்சி சிறிய தென்னங்கீற்று வடிவில் தூவிகளைப் பெற்றிருக்கும். அந்த உணர்நீட்சிகளில் உள்ள வேதிஉணர்விகளால் (chemoreceptors), இதை அடையாளம் கண்டு இணையைத் தேடிப் பறந்து வரும்.
கலவி முடிந்ததும், தகுந்த தாவரத்தில் பெண் பல முட்டைகளை இடும். முட்டைகள் பொரிந்து அதிலிருந்து புழுக்கள் (caterpillar) வெளிவர, இரு வார காலமாகலாம். இந்தப் புழுக்கள் அவை பிறக்கும் தாவர இலைகளைத் தொடர்ச்சியாகத் தின்றுகொண்டே இருக்கும்.
இளம்பச்சை நிறத்தில், இளநீலப் புள்ளிகள், வெண்தூவிகளுடன் கொம்பு போன்ற நீட்சிகளை உடைய புழு வளர வளரத் தோலை உரித்துக் கொள்ளும் (moulting). சுமார் 4-5 அங்குல நீளம் வளர்ந்த பின், இந்தப் புழு தன்னைச் சுற்றி எச்சிலால் உருவான இழை மூலம் கூட்டைக் கட்டிக்கொண்டு கூட்டுப்புழுவாக (Pupa) மாறும். ஒரு சில வாரங்களில் முதிர்ந்த பட்டாம்பூச்சி வெளியே வந்துவிடும்.
சாப்பிடவே சாப்பிடாது
முதிர்ந்த அட்லாஸ் பட்டாம்பூச்சிக்கு விசித்திரமான ஒரு பண்பு உண்டு - உயிர் வாழும் ஓரிரு வாரங்களில், அவை சாப்பிடுவதே இல்லை. ஏனென்றால், அவற்றுக்கு வாயுறுப்பு கிடையாது. வாயில்லாப்பூச்சி என்பார்களே, அது அட்லாஸ் பட்டாம் பூச்சிக்குச் சரியாகப் பொருந்தும்.
இது எப்படிச் சாத்தியம்? சில நாட்களே வாழும் முதிர்ந்த பட்டாம்பூச்சி, புழுப் பருவத்திலேயே இரண்டு ஆண்டுகள்கூட இருக்கும். புழுப் பருவத்திலேயே அபரிமிதமாகச் சாப்பிட்டு, முதிர்ந்த பருவத்துக்குத் தேவையான அளவு ஊட்டச்சத்தை உடலில் சேகரித்து வைத்திருப்பதால், இவற்றுக்கு வாயுறுப்பு அவசியமில்லாமல் இருக்கிறது.
இதைத் தவிர, பல அழகிய பட்டாம்பூச்சிகள் நம் பகுதிகளில் உண்டு. இளம்பச்சை நிறம் கொண்ட நிலா பட்டாம்பூச்சி (Moon Moth), இறக்கை விரித்த நிலையில் சுமார் 12 செ.மீ இருக்கும். அமர்ந்த நிலையில் இதைப் பார்த்தால் சிறிய பட்டத்தைப் போலிருக்கும். சுமார் பத்து நாட்களே வாழும் முதிர்ந்த பருவத்திலுள்ள நிலா பட்டாம்பூச்சிக்கும் வாயுறுப்பு கிடையாது.
ஆந்தை வடிவம்
இவை இரண்டையும் தவிரப் பொதுவாகக் காணக்கூடியது ஆந்தைக் கண் பட்டாம்பூச்சி (Owlet Moth). அமர்ந்திருக்கும்போது இறக்கையில் இருக்கும் கண் போன்ற கரும்புள்ளி, ஆந்தை விழித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தரும். இந்தப் பூச்சியை இரையாக்கிக் கொள்ள வரும் சிறிய பறவைகள், பல்லிகள் முதலிய இரைகொல்லிகளை இந்த உருவம் அச்சமடையச் செய்து விரட்டிவிடும்.
இவையெல்லாம் தென்னிந்தியாவில் நான் பார்த்த சில வகைப் பட்டாம்பூச்சிகள். நாட்டின் வடகிழக்குப் பகுதிக் காடுகளில் தென்படும் பல பட்டாம்பூச்சிகள் நம்ப முடியாத அளவுக்கு அழகாக இருக்கும். அவற்றையெல்லாம் பார்க்கப்போகும் இரவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
எது வண்ணத்துப்பூச்சி, எது பட்டாம்பூச்சி?
இந்த இரண்டு பூச்சி வகைகளும் செதிலிறகிகள் (Lepidoptera) வரிசையைச் சேர்ந்தவை. இந்த வரிசையில் உலகில் இதுவரை சுமார் 2,00,000 வகைப் பூச்சிகள் இருக்கின்றன. இவற்றில் 18,000 வகைகள் மட்டுமே வண்ணத்துப்பூச்சிகள், மற்றவை பட்டாம்பூச்சிகளே.
பறக்கும் ஓவியங்களைப் போல் இறக்கைகளில் பல வண்ணங்களைச் சுமந்து பகலில் பறந்து திரிபவை வண்ணத்துப்பூச்சிகள். இவற்றில் பல அமரும்போது இறக்கைகளை மடக்கி, உடலின் மேல் வைத்துக்கொள்ளும். வெயில் நேரத்தில் உள்பக்கம் தெரியும்படி, தனது இறக்கைகளை விரித்து வைத்துக்கொள்ளும். இவற்றின் உணர்நீட்சிகள் (antennae) மெலிதாக நீண்டு, முனையில் சற்றுத் தடித்தும் இருக்கும்.
அதேநேரம் பெரும்பாலான பட்டாம்பூச்சிகள் (Moth), இரவாடிகள். இவை அமரும் நிலையில் இறக்கைகளைக் கிடைமட்டமாக விரித்து வைத்திருக்கும். பறக்கும்போது இவற்றின் முன் இறக்கைகளில் இருக்கும் கொக்கி போன்ற அமைப்பு, பின் இறக்கைகளைப் பிடித்துக்கொள்ளும். பட்டாம்பூச்சிகளின் உணர்நீட்சிகள் பல்வேறு வகைகளில் இருக்கும். பொதுவாகத் தூவிகளுடனோ, பல கிளைகளுடனோ காணப்படலாம்.
பட்டாம்பூச்சிகளும் நாமும்
நாம் அனைவரும் அறிந்த பட்டாம்பூச்சி வகைகள் சில உண்டு. மல்பரி (Mulberry), டஸ்ஸார் (Tussar), முகா (Muga), எறி (Eri) பட்டுப்பூச்சிகளே அவை! இவைதான் பட்டு இழைகளைத் தருகின்றன. நாம் வாழும் சூழல்தொகுதிக்கு பட்டாம்பூச்சிகள் செய்யும் சேவைகள் பல.
பகலில் வண்ணத்துப்பூச்சிகள் செய்யும் முக்கியமான வேலையான அயல் மகரந்தச் சேர்க்கையை, இரவில் பட்டாம்பூச்சிகள் தொடர்கின்றன. இரவில் திரியும் வவ்வால்களுக்கும், பறவைகளுக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் இரையாகின்றன. பல வகை பட்டாம்பூச்சிகள் நாம் பயிரிடும் தாவரங்களையும், கம்பளி, பஞ்சு முதலிய இழைகளையும் வாழ்வின் ஏதோ ஒரு பருவத்தில் உணவாகக் கொள்கின்றன.
இதனாலேயே மனிதர்களுக்குத் தீமை பயக்கும் உயிரினங்களாகக் கருதப்பட்டு, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு ஒழித்துக் கட்டப்படுகின்றன. இந்த உலகில் நாம் தோன்றுவதற்குச் சுமார் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய அழகிய பட்டாம்பூச்சிகளை ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு, இயற்கை விவசாயம் மூலமே ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும்.
மேலும் அறிய...
பட்டாம்பூச்சிகளைப் பற்றி அறிய இந்த நூல் உதவும்: Moths of India - Isaac Kehimkar
இந்தியாவில் தென்படும் பல வகைப் பட்டாம்பூச்சிகளின் படங்களை இந்த வலைத்தளத்தில் காணலாம். www.indiabiodiversity.org/group/indianmoths
உலகம் முழுவதும் ஜூலை 19-27 பட்டாம்பூச்சிகள் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்குக் கீழ்க்கண்ட வலைத்தளத்தைக் காணவும்: >www.nationalmothweek.org
- கட்டுரையாளர் காட்டுயிர் ஆராய்ச்சியாளர் தொடர்புக்கு: jegan@ncf-india.org
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT