Last Updated : 04 Nov, 2022 05:26 PM

 

Published : 04 Nov 2022 05:26 PM
Last Updated : 04 Nov 2022 05:26 PM

பாலின சமநிலை விழிப்புணர்வை அளிக்கும் இன்குளுசிவ் கிளப்

சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி 50 ஆண்டுகளாக நகர்ப்புற ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கல்விப் பணியாற்றி வருகிறது. மேலும் கல்வி பணி, சமூக மேம்பாட்டுக்காக 2015-ஆம் ஆண்டில் இக்கல்லூரியில் சமூகப் பணித் துறை தொடங்கப்பட்டது. அதோடு `மாற்றம்' மாணவர்கள் அமைப்பும் சமூகப் பணித் துறையில் ஓர் அங்கமாகத் தொடங்கப்பட்டது. அந்த அமைப்பின் மூலம் பல்வேறு சமூக மேம்பாடு, சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அக்கல்லூரியின் பொன்விழாக் கொண்டாட்டம், `மாற்றம்' மாணவர் அமைப்பின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு தமிழகத்தில் முதன் முறையாக ‘இன்குளுசிவ் கிளப்’ தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டி.ஐ.எஸ்.எஸ். (TISS), என்.ஐ.டி. (NIT) ஆகிய கல்வி நிறுவனங்களைத் தொடர்ந்து, மூன்றாவதாக சோஷியல் இன்குலேஷன் கிளப் டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்குளுசிவ் கிளப்பை `நிறங்கள்' தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் சிவக்குமார் அண்மையில் தொடங்கி வைத்தார். மேலும், கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். சுமதி, ஷெல்டர் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் சாலமன் ராஜ், சமூகப் பணித்துறை தலைவர் டாக்டர் சியாமளா, ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், மாணவர்கள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் முன்னிலையில் `நிறங்கள்' தொண்டு நிறுவனமும் சமூகப் பணித்துறையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இதன் மூலம் பாலின சமநிலை விழிப்புணர்வு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஏற்படுத்தப்படும்.

டாக்டர் அம்பேத்கர் கல்லூரியில் செயல்படவிருக்கும் இன்குளுசிவ் கிளப்பின் நிகழ்ச்சி அமைப்பாளர் ஆர். ஐஸ்வர்யா, இதன் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.

"துறை சார்ந்த எங்களின் ஆசிரியர்கள் சக்திதேவி, நேசமணி ஆகியோரின் வழிநடத்துதலோடு பல சமூகப் பணிகளைச் செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் சமூக, மன, கலாச்சார, உடல் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை நோக்கி வழிநடத்தும் பணியை மேற்கொண்டுள்ளோம். மேலும், பாலின சமநிலை விழிப்புணர்வை பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமூகத்தில் அனைத்து ரீதியிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தான் பிறந்த குடும்பத்திலிருந்தே புறம் தள்ளப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்வாதாரம், கல்வி, உரிமை கிடைப்பதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு உண்டாக்கி அனைத்து வகைகளிலும் இவர்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட சிறுபான்மையின மக்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து மாதந்தோறும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள், சிந்திக்க வைக்கும் வகையில் ஆவணப்படங்கள் திரையிடல் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கத் திட்டங்கள் வகுத்துள்ளோம்.

இதன் ஒரு பகுதியாக கல்லூரி, பள்ளிகளில் (Social Inclusion) சோஷியல் இன்குளுசன் சார்ந்த பயிற்சிப் பட்டறைகள், பரப்புரைகள், கருத்தரங்குகள், மாநாடுகள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஐ.நா. சபையின் ‘SDG’ என்று சொல்லக்கூடிய நிலையான வளர்ச்சி இலக்குகளில் ஐந்தாவது குறிக்கோளான பாலின சமத்துவம், பத்தாவது குறிக்கோளான சமமற்ற நிலையினை போக்குதல் போன்ற குறிக்கோள்களை அடைவதற்கான முன்னெடுப்புகளை இந்த இன்குளுசிவ் கிளப் மேற்கொள்ளும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x