Last Updated : 21 Jul, 2022 05:09 PM

6  

Published : 21 Jul 2022 05:09 PM
Last Updated : 21 Jul 2022 05:09 PM

அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு மீண்டும் தேர்வா? - அதிருப்தியில் பாதிக்கப்பட்டவர்கள்!

தமிழகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டில் அரசுக் கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு கடந்த 2019ஆம் ஆண்டில் 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு சுமார் 40,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பம் பெற்றதோடு சரி, மேற்கொண்டு அந்தப் பணியிடங்களை நிரப்ப எந்த முயற்சியையும் அரசும் ஆசிரியர் தேர்வு வாரியமும் எடுக்கவில்லை.

இடையில் கரோனா தொற்று வந்த பிறகு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிகுறிகளே இல்லாமல் போனது. நிதி நிலைமையைக் காரணம் காட்டி உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதை அரசு மூட்டை கட்டி வைத்திருக்கிறது. அரசின் இந்த நகர்வால், 40 வயதைக் கடந்தவர்கள், 50 வயதைத் தொட்டவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்குச் செல்ல முடியாத சூழலில் உள்ளனர். அதே வேளையில் கற்பிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு, தங்களுடைய அனுபவத்துக்குத் தடை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் சொற்ப வருமானத்தில் ஏராளமானோர் விரிவுரையாளர்களாகக் காலத்தைக் கடத்தி வருகிறார்கள்.

அதேவேளையில் நிதி நிலைமையைக் காரணம் காட்டி அரசுக் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிப்பது மட்டும் நடந்தேறிய வண்ணம் உள்ளது. எப்படியும் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, தங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அளித்த ஒரு பேட்டி, கடந்த 2019இல் உதவிப் பேராசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் விண்ணப்பித்தவர்கள் மத்தியில் அதிருப்தி அலைகளை தோற்றுவித்திருக்கிறது.

“அனைத்து வகை அரசுக் கல்லுாரிகளில் உள்ள காலியிடங்களில், ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க வெகு விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்படும்” என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்த கருத்துதான் ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படக் காரணம். அப்படியெனில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் பங்கேற்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசியர் பணிகளை நிரப்ப, பி.எச்டி., முடித்திருக்க வேண்டும் அல்லது ஸ்லெட், நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டு அளவுகோளில்தான் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

ஏற்கெனவே 2019இல் விண்ணப்பித்தவர்கள் பி.எச்டி., ஸ்லெட், நெட் தேர்வுகளை முடித்துத்தான் பணிக்கு விண்ணப்பித்திருந்தார்கள். இப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு என்றால், அது தங்களைப் பாதிக்கும் என்பது இவர்களுடைய வாதம். இதுதொடர்பாக 2019இல் பணிக்கு விண்ணிப்பித்துவிட்டுக் காத்திருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “2019இல் விண்ணப்பித்த பலரும் 40 வயதைக் கடந்தவர்கள். எப்படியும் அரசு வேலை கிடைக்கும் என்கிற எண்ணத்தில்தான் பி.எச்டி., ஸ்லெட், நெட் என எல்லாத் தேர்வுகளையும் எழுதி தகுதிபெற்றுக் காத்திருக்கிறோம். அது போதாது என்று துறைரீதியான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளோம். சீனியாரிட்டி அடிப்படையிலும் எங்களுக்குத் தகுதி உள்ளது.

இவ்வளவு தகுதிகள் இருந்தாலும் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு என்றால், எத்தனை தகுதித் தேர்வுகளைத்தான் நாங்கள் எழுதுவது? அப்படியெனில் பி.எச்டி., ஸ்லெட், நெட் போன்ற தேர்வுகளை நாங்கள் ஏன் எழுத வேண்டும். முதுகலை படிப்பை முடித்தவுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு வைத்துப் பணிகளை நிரப்பலாமே. 2006 - 2011 முந்தைய திமுக ஆட்சியில் 3 முறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உதவிப் பேராசிரியர்கள் பணிகள் நிரப்பப்பட்டபோது, பிஎச்டி அல்லது ஸ்லெட்/ நெட் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கும் முறைதான் பின்பற்றப்பட்டது.

எல்லாத் தகுதிகளையும் வைத்துக்கொண்டு புதிதாகப் படித்து வந்தவர்களுடன் நாங்களும் போட்டி போட்டுக்கொண்டு தேர்வு எழுத வேண்டுமா? 2019இல் வாங்கிய விண்ணப்பத்துக்கே எந்த முடிவும் தெரியவில்லை. இப்போது புதிதாகத் தேர்வு என்கிறார்கள். எங்கள் குறைகளை அரசு காது கொடுத்து கேட்டுத் தீர்க்க முன்வர வேண்டும்” என்று ஆதங்கப்படுகிறார்கள் அவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x