Published : 01 Mar 2022 11:25 AM
Last Updated : 01 Mar 2022 11:25 AM

புத்தகத் திருவிழா 2022 | புதிய வரலாற்று நூல்கள்

தொகுப்பு: கோபால்

வணிகம் கருத்தியல் நகர்மயம்
l ஆர்.சம்பகலக் ஷ்மி,
தமிழில் வேட்டை எஸ்.கண்ணன்,
பாரதி புத்தகாலயம், தொடர்புக்கு - 044 24332924

தென்னிந்திய, தமிழ்நாடு வரலாறு குறித்து வரலாற்று ஆய்வுப் புலத்தில் கவனம் செலுத்திவரும் ஆய்வாளர், இந்த நூலின் ஆசிரியர். வணிகம், கருத்தியல், நகர்மயம் ஆகிய கூறுகள் தனித்தனியாகவும் ஒன்றிணைந்தும் தென்னிந்தி யாவில் வரலாற்றையும் சமூக மாற்றத்தையும் உருவாக்கியதை கி.மு. 300 தொடங்கி கி.பி.1300-1600 ஆண்டு காலப் பரப்பில் விளக்கியுள்ளார். தஞ்சாவூர், காஞ்சிபுரம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் விரிவான கள ஆய்வை நடத்தி இந்த நூலை எழுதியுள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் வெளியான இந்நூல் தற்போது தமிழில்
வந்துள்ளது.

சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை
l நிவேதிதா லூயிஸ், கிழக்கு பதிப்பகம், தொடர்புக்கு - 044-4200 9603

சிந்து சமவெளி நாகரிகம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கண்டறியப்பட்டது. இந்திய வரலாற்றின் தொடக்கப் புள்ளி என்று கருதப்படும் நாகரிகத்தைக் கண்டறிந்த அந்த அகழாய்வுப் பணியில் யாரெல்லாம் ஈடுபட்டிருந்தனர், சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்படுவதில் இந்தியர்கள் எவ்வகையில் பங்களித்தனர் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை அளிக்கும் நூல் இது. இந்நூலின் ஆசிரியர் வரலாறு, தொல்லியல், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் பத்தாண்டுகளாக இயங்கிவருகிறார்.

காலம் நடந்த பெருவழி
l கோவை சதாசிவம்,
குறிஞ்சி பதிப்பகம், தொடர்புக்கு - 99650 75221

தமிழ்நாட்டில் நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ள கொடுமணல் பகுதியில் புதையுண்டு கிடக்கும் நிலத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு நகரம் இருந்தது. அங்கு இரும்புக் கருவிகளும் கல்மணிகளும் செய்யும் தொழில்கூடங்கள் இருந்தன. பல அரசு நிறுவனங்கள் கொடுமணலில் நிகழ்த்திய அகழாய்வுகளின் வழியே உறுதிசெய்யப்பட்டுள்ள உண்மைகளை இந்த நூல் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்
l சாத்தன்குளம் அ.இராகவன்,
அழகு பதிப்பகம், தொடர்புக்கு - 94441 91256

தமிழர்களின் சமயச் சிறப்பு, தனிச் சிறந்த நாகரிகம், அறிவுப் பெருக்கம், தொழில் உற்பத்தி ஆகியவற்றின் தொன்மைக்கு ஆதாரமாக விளங்குவது ஆதித்தநல்லூர் (ஆதிச்சநல்லூர்)அகழாய்வு. 19ஆம் நூற்றாண்டில் நடத்தி முடிக்கப்பட்ட இந்த அகழாய்வு குறித்து தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதப்படாத குறையை போக்குவதற்காகவே இந்நூலை (1978இல்) எழுதியதாக நூலாசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜாலியன்வாலா பாக்
l செ.திவான், ரெகான் சுலைமான் பதிப்பகம், தொடர்புக்கு - 0462-2572665

1919 ஏப்ரல் 13இல் ஜலியான்வாலா பாக் மைதானத்தில் கூடியிருந்த மக்கள் மீது ஜெனரல் டயர் தலைமையிலான பிரிட்டிஷ் காவல் படை நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமுற்றனர். ஜலியான்வாலா பாக் அமைந்துள்ள பஞ்சாப் மாகாணத்தில் இந்த படுகொலைக்கு வித்திட்ட சூழல், படுகொலைக்கு முன்பும் பின்பும் நடந்த நிகழ்வுகள், நீதி விசாராணை, இந்தப் படுகொலை ஏற்படுத்திய தாக்கம், இந்தப் படுகொலைக்கு அனுமதியளித்த பிரிட்டிஷ் அதிகாரியைக் கொன்ற உதம் சிங் ஆகியோர் குறித்து இந்த நூலில் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x