Published : 11 Jan 2022 11:28 AM
Last Updated : 11 Jan 2022 11:28 AM
ஜன.1: இந்தியாவிலேயே முதன் முறையாக கேரள உயர் நீதிமன்றம் காகித பயன்பாடு இல்லாத நீதிமன்றமாக மாறியது. அங்கே ஸ்மார்ட் நீதிமன்ற அறைகள் திறக்கப்பட்டதன் மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது.
ஜன.3: பிரான்ஸில் ‘ஐஎச்யு பி.1.640.2’ என்று பெயரிடப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒமைக்ரானைவிட அதிக அளவில் பரவும் தன்மை கொண்டது.
ஜன.4: கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளாத செர்பிய டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலிய அரசு விசா மறுத்தது.
ஜன.5: பஞ்சாப்பில் பதிண்டா விமான நிலையத்திலிருந்து ஹுசைனிவாலாவுக்குச் சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் மோடியின் பயணத்தில் பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டதால் சர்ச்சையானது.
ஜன.5: தமிழகத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 6,36,25,813 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 7,11,755 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக கீழ்வேளூர் தொகுதியில் 1,78,517 வாக்காளர்களும் உள்ளனர்.
ஜன.6: இந்தியாவின் முதல் திறந்தவெளி பாறை அருங்காட்சியகம் ஹைதராபாத்தில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் திறக்கப்பட்டது.
ஜன.6: தமிழகச் சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாகக் கேள்வி நேரம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஜன.7: மஹாகாளி ஆற்றின் குறுக்கே தார்சுலாவில் பாலம் கட்டுவதற்கு இந்தியா - நேபாளம் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்ததுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஜன.8: நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பது என்று தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நீட் விலக்குக் கோரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத நிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.
ஜன.8: உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT