Published : 19 Oct 2021 03:07 AM
Last Updated : 19 Oct 2021 03:07 AM
ஆதாரபூர்வமான தகவல்களின் தொகுப்பாக மட்டுமல்லாமல் ஓர் ஆசிரியரின் அனுபவபூர்வமான அணுகுமுறையோடு ‘குழந்தைகளின் பேருலக’த்தை சிருஷ்டித்திருக்கிறார் சாந்தி பாஸ்கரசந்திரன். குழந்தைகளிடம் நேர்மறையான எண்ணங்களை விதைப்பது, பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் இருக்கும் பெரும் பொறுப்பை உணர்த்துவது ஆகிய நோக்கங்களை வலியுறுத்தி இந்தத் தொகுப்பில் இருக்கும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் சாந்தி.
காலம்காலமாகக் குழந்தை வளர்ப்பு என்றாலே அது தாய் சம்பந்தப்பட்ட விஷயமாகப் பார்க்கப்படுகிறது. குழந்தை வளர்ப்பில் தந்தைக்கு இருக்க வேண்டிய பொறுப்புகள் எந்த அளவுக்குக் குழந்தையின் உடல், மன, தன்னம்பிக்கைக்கு உதவுகின்றன என்பதை ஒரு கட்டுரையில் விளக்கியிருக்கிறார்.
இந்தியக் கல்விச் சூழலில் வீட்டுப்பாடம் என்பது பெரிதும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உலக நாடுகளின் பார் வையில் வீட்டுப்பாடம் குறித்த பார்வை எப்படி இருக்கிறது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, நீதி போதனை வகுப்புகள் இல்லாமல் போனது, உலகம் முழுவதும் இருக்கும் கல்வியாளர்கள் கல்விச் சுற்றுலாவுக்கு பின்லாந்து நாட்டுக்கு ஏன் போகிறார்கள், பின்லாந்து நாட்டில் கல்வியின் மேம்பட்ட நிலைக்கு என்ன காரணம், குழந்தைகளின் பதின்ம வயதில் ஏற்படும் பிரச்சினைகளைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், குழந்தைகளின் உணவுப் பழக்கத்தை எப்படிச் சீரமைக்கலாம், குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கி நேர்மறைச் சிந்தனைகளை அவர்களிடம் எப்படி உருவாக்குவது என்பது போன்ற கேள்விகளுக்கு இவரது கட்டுரைகள் பதில்களாக விரிகின்றன.
பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்தவுடன் நினைவில் மிஞ்சுவதுதான் கல்வி என்பார் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன். இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் நம் மனத்தில் கருத்துகளாகவும் காட்சிகளாகவும் சிந்தனைகள் விரிகின்றன.
குழந்தைகளின் பேருலகம்
(குழந்தைகளின் கல்வி – உளவியல் கட்டுரைகள்)
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்,
அலைபேசி: 9940446650.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT