Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 03:18 AM
பிரபல கோட்பாட்டு இயற்பியலாளரும் வானியல் இயற்பியலாளருமான பேராசிரியர் தாணு பத்மநாபன் (64) காலமானார். மாணவர்களுக்குக் கற்பிக்கும் திறன், எழுத்தாற்றல், ஆராய்ச்சிகள் தந்த வெளிச்சம் போன்றவை அவருடைய தனி அடையாளமாகக் கருதப்படுகின்றன.
திருவனந்தபுரத்தில் பிறந்த பத்மநாபன், கேரளப் பல்கலைக் கழகக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை இயற்பியல் பட்டப் படிப்புகளை தங்கப் பதக்கத்துடன் நிறைவுசெய்தவர். 20 வயதிலேயே பொதுச் சார்பியல் குறித்த தனது முதல் ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பித்தவர்.
பிரபல அறிவியலாளரான ஜெயந்த் நாரலீகரின் வழிகாட்டுதலில் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் (TIFR) முனைவர் படிப்பை முடித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வானியல் நிறுவனத்தில் முதுமுனைவர் பட்டம் பெற்றார். 1992இல் புனேயில் உள்ள ‘வானியல், வான்இயற்பியலுக்கான இன்டர் யுனிவர்சிட்டி மைய’த்தில் பேராசிரியராகச் சேர்ந்தார்.
நண்பர்களாலும் சக அறிவியலாளர்களாலும் ‘Paddy‘ என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற பொதுச் சார்பியல் கோட்பாட்டுக்கும் வெப்ப இயக்கவியலுக்கும் இடையிலான தொடர்பைப் பற்றி ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். நியூட்டனின் ஈர்ப்பு விதி, ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு ஆகிய இரண்டையும் இணைத்த ‘ஈர்ப்பியல் குறித்த குவாண்டம் கோட்பாட்’டின் தேவை உணரப்பட்டது. இந்த இணைப்பைப் புரிந்துகொண்டால்தான் பிரபஞ்சத்தின் உருவாக்கத்தையும் பிரபஞ்சத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அந்த திசையில் ஆய்வுகளை மேற்கொண்டவர் தாணு பத்மநாபன்.
சிறந்த மாணவர்கள் பலரை உருவாக்கியுள்ள அவர், 300க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். அமெரிக்க, ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராக இருந்தார். ‘சயின்ஸ் ஏஜ்’, ‘ரெசனன்ஸ்’ ஆகிய இதழ்களில் தொடர்ச்சியாகப் பத்தி எழுதிவந்த அவர், பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிட்ட மூன்று தொகுதிகள் கொண்ட ‘Theoretical Astrophysics’; ‘After the First Three Minutes - The Story of Our Universe’; அவரது துணைவியும் இயற்பியலாளருமான வசந்தியுடன் இணைந்து எழுதிய ‘The Dawn of Science: Glimpses from History for the Curious Mind’ உள்ளிட்ட நூல்கள் புகழ்பெற்றவை. பத்மஸ்ரீ, கேரள அரசின் கேரள சாஸ்திர புரஸ்காரம் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT