Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM
கதை திருட்டு / கருத்து திருட்டு பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ‘எந்திரன்’, ‘சர்கார்’, ‘கத்தி’ போன்ற படங்களின் கதைகளுக்கு சிலர் உரிமை கொண்டாடினர். மேலே குறிப்பிடப்பட்ட திரைப்படங்களின் இயக்குநர்கள் திறமைசாலிகள், வெற்றிகரமான இயக்குநர்கள். இப்படிப்பட்ட இயக்குநர்கள் ஏன் பிறருடைய கதையைத் திருட வேண்டும்? அவர்களுடைய படைப்பாற்றல் குறைந்ததால் ஏற்பட்ட சறுக்கலா? அல்லது குறுக்குவழியில் செல்வதற்காக ஏற்பட்ட பிறழ்வா?
நாமும்கூட கல்லூரி புராஜெக்ட், பிரசென்டேஷன், ஐடியா, செயல்திட்டம் போன்றவற்றை நகலெடுக்கவோ உத்வேகம் பெற்றோ செய்கிறோம். இப்படிச் செய்வதெல்லாம் சரியா, தவறா?
தாக்கம் தவறில்லை
வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்களின் தொடர் சிந்தனைகளால் விளைபவையே கண்டுபிடிப்புகளும் படைப்புகளும். இருப்பினும், பிற்காலத்தில் படைப்புகளின் அடிப்படைக்குத் தனிமனிதர்கள் சொந்தம் கொண்டாடத் தொடங்கினார்கள். சில வேளை, சில படைப்புகள் மேல் உள்ள ஈர்ப்பினால், அதனால் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவாகச் சில படைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அந்த மாதிரி சூழ்நிலையில், தங்களை ஈர்த்த படைப்புகளுக்கு உரிய அங்கீகாரத்தை, தங்கள் படைப்புகளிலேயே படைப்பாளிகள் அளித்து விடுவர். இதில் தவறில்லை.
திரைப்படத்திலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ வரும் “இந்தத் தாக்கத்தினால் உருவாக்கப்பட்டது” என்கிற அறிவிப்பைக் கவனித்திருப்போம். ஏன், அச்சு இதழ்களில்கூட எதன்
அடிப்படையில் ஒரு கட்டுரை எழுதப்பட்டது என்பதைத் தெரிவிக்கும் விதமாக “மூலம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். தன்னுடைய படைப்புக்கு, ஆதாரமாக இருந்த வேறொரு படைப்பை, ஒரு படைப்பாளி ஏன் தெரிவிக்க வேண்டும்? அது அவ்வளவு முக்கியமானதா?
இது ஏன் முக்கியமானது?
கூகுளில் படங்களைத் தேடி, அது நமக்குப் பிடித்திருந்தால், அதைத் தரவிறக்கம் செய்து, பவர்பாயிண்ட் / வோர்டில் பயன்படுத்தும் வழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. உண்மையில் நாம் அதைத் திருடுகிறோம் என்பதைப் பலர் அறிவதில்லை.
எவரும் எதையும் எளிதில் உருவாக்கிவிடுவதில்லை. எந்த ஒரு படைப்புக்குப் பின்னாலும், ஒரு மனிதரின் ஆழ்ந்த சிந்தனை, தீவிர முயற்சி, ஓய்வற்ற உழைப்பு, நேரம், பணம், பல தியாகங்கள் ஆகியவை அடங்கியுள்ளன. எளிமையாகச் சொல்வதானால், வேறொருவரின் படைப்பை, அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்காமல் அப்பட்டமாக நகலெடுப்பது நியாயமில்லை. இதனால்தான் பெரிய நிறுவனங்கள் தங்கள் சின்னங்களுக்குப் பதிப்புரிமை பெறுகின்றன, அவற்றின் தொழில்நுட்பங்களுக்குக் காப்புரிமை பெறுகின்றன.
இரண்டாவதாக, ஒவ்வொரு நபரும், அவர்களின் வேலையை / படைப்பைப் பிறர் பயன்படுத்தும்போது சில வகையான இழப்பீடு அல்லது ராயல்டிக்குத் தகுதியானவர்களாக மாறுகின்றனர். அவர்களின் படைப்பு வேறொருவரின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுவதற்கு, அவர்கள் பெறும் வெகுமதி இது. அங்கீகாரம் அளிக்காமல் நகலெடுக்கும் செயலால், படைப்பாளிக்குக் கிடைக்க வேண்டிய வெகுமதியை படைப்பாளிகள் இழக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் வெகுமதி?
சில நல்ல மனிதர்கள், எவ்வித வெகுமதியும் பெறாமல், தங்கள் வேலையை /படைப்பைப் பிறர் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறார்கள். ஆனால், சட்டப்படி அந்தப் படைப்பின் உரிமையாளருக்கு உரிய அங்கீகாரத்தை ஒருவர் வழங்கியாக வேண்டும் அல்லது அதைப் பயன்படுத்தும் உரிமத்தை சம்பந்தப்பட்டவரிடமிருந்து பெற்றாக வேண்டும். ராயல்டி இல்லாத படைப்புகளை வழங்கும் பல இணையத்தளங்கள்கூட உள்ளன. ஆனால், அவற்றைப் பயன்படுத்தும்போது, அசல் படைப்பாளி அல்லது எழுத்தாளருக்கு உரிய அங்கீகாரத்தை ஒருவர் வழங்கியே ஆக வேண்டும்.
அது ஒரு மெல்லிய கோடு
உத்வேகம் பெறுவதற்கும் திருட்டுத்தனமாக நகலெடுப்பதற்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தை பெரும்பாலோர் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள். உத்வேகம் என்பது, ஒருவரின் வேலையை /படைப்பை, தங்களுடைய படைப்புக்கு அடித்தளமாகக்கொள்வதும், அதை இன்னும் ஆக்கப்பூர்வமாக மேம்படுத்துவதுமே.
ஆனால் திருட்டு என்பது வெறுமனே நகலெடுப்பது மட்டுமல்ல; பிறருடைய உழைப்பால் உருவான படைப்பை, தங்களுடையது என வேறொருவர் சொந்தம் கொண்டாடி, உழைப்பை இழிவுபடுத்துவது.
நகலெடுக்காமல் இருப்பது எப்படி?
1. உங்கள் வேலையை / படைப்பை யாராவது திருடிவிட்டால் நீங்கள் எப்படி உணருவீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அதைப் பற்றி கொஞ்சம் யோசியுங்கள்.
2. இது தார்மிகரீதியாகத் தவறானது மட்டுமல்ல; இது நம்முடைய ஆளுமையைப் பாதிக்கும். சுயமரியாதையையும் சீரழிக்கும்.
3. உரிமை பெறாமல் வெறுமனே நகலெடுப்பதன் மூலம் நாம் ஒரு நகலெடுப்பவராக மாறுவதா அல்லது அதைச் சொந்தமாக உருவாக்கக் கற்றுக்கொள்வதன் மூலம் தனித்தன்மை கொண்ட மனிதனாக மாறுவதா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வது நமக்குத் தெளிவைக் கொடுக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT