Published : 30 Mar 2021 10:42 AM
Last Updated : 30 Mar 2021 10:42 AM
மார்ச் 19: பஞ்சாபில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 200 மீ. ஓட்டப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி 23.26 விநாடிகளில் தொலைவைக் கடந்து புதிய சாதனைப் படைத்தார். 1998இல் இதே இலக்கை 23.30 விநாடிகளில்
பி.டி.உஷா கடந்திருந்த சாதனையைத் தனலட்சுமி முறியடித்தார்.
மார்ச் 20: தமிழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த தேவேந்திர குலத்தார், கல்லாடி, குடும்பர், பள்ளர், பண்ணாடி, வாதிரியார், கடையன் ஆகிய 7 சாதியினரைத் தேவேந்திர குல வேளாளர் என்கிற பொதுப் பெயரில் அழைக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
மார்ச் 21: சர்வதேச காசநோய் தடுப்புக் கூட்டாண்மை வாரியத்தின் தலைவராக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நியமிக்கப்பட்டார்.
மார்ச் 22: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,220 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிக பட்சமாக கரூரில் 77 பேர், குறைந்த பட்சமாக தியாகராய நகரில் 14 பேர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மார்ச் 23: 2020ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது ‘வங்க பந்து’ என்றழைக்கப்படும் ஷேக் முஜிபூர் ரஹ்மானுக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த விருது 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது.
மார்ச் 23: 67ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. ‘அசுரன்’ சிறந்த தமிழ் திரைப்படமாகவும், அப்படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். விஜய்சேதுபதி (சிறந்த துணை நடிகர்), நாகவிஷால் (சிறந்த குழந்தை நட்சத்திரம்), டி.இமான் (சிறந்த இசையமைப்பாளர்- பாடல்கள்) ஆகியோரும் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
மார்ச் 25: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாவதற்கு என்.வி.ரமணாவின் பெயரைத் தற்போதைய தலைமை நீதிபதி போப்டே பரிந்துரைசெய்தார். இவருடைய பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது.
மார்ச் 26: அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக அதிபர் ஜோ பைடனின் அமைச்சரவையில் துணை சுகாதார அமைச்சர் பதவிக்குத் திருநங்கையான மருத்துவர் ரேச்சல் லெவின் நியமிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT